ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.”
அன்பானவர்களே! நாம் தாமாரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இது தாமாரைப் பற்றி நாம் படிப்பதின் கடைசி இதழ்!
நேற்று நாம் யூதாவைப் பற்றி படிக்கும்போது அவன் முக்காடிட்ட ஒரு பெண்ணோடு தன் காம வெறியைப் பூர்த்தி செய்ய பேரம் பேசினான் என்று பார்த்தோம்.
நீருற்றுகளண்டையில் வேசியின் வேடம் தரித்து அமர்ந்திருந்த தாமார் அவனை வசமாக தன் வலையில் சிக்க செய்தாள். அவள் எனக்கு என்ன தருவீர் என்று கேட்டதற்கு அவன் நான் போய் உனக்கு என் மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக் குட்டியை அனுப்புகிறேன், என்கிறான். அதற்கு அவள், அதுவரை உமது முத்திரை மோதிரத்தையும், உமது கைக்கோலையும், உமது ஆரத்தையும் அடைமானமாக கொடும் என்கிறாள்.
தன்னுடைய இச்சைகளை திருப்தி படுத்துவதற்காக, ( ஆதி:38:18 )‘அவன் அவைகளை அவளுக்கு கொடுத்து அவளிடத்தில் சேர்ந்தான், அவள் அவனாலே கர்ப்பவதியானாள்” என்று பார்க்கிறோம்.
யூதா என்ன செய்கிறான் பாருங்கள்! ஒரு ஆட்டுக்குட்டியைத் தன் நண்பன், அதுல்லாம் ஊரானாகிய ஈராவிடம் கொடுத்து நீருற்றண்டை இருந்த தாசியிடமிருந்த தன் அடைமானத்தை திருப்பி வரும்படி சொல்கிறான். தன் பெயருக்கு அவகீர்த்தி வந்துவிடுமோ என்ற பயம். ஆனால் இந்த அசிங்கமான, தாசியை தேடி அலைகிற, வேலையை செய்யப்போகிற தன நண்பனின் பெயரைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. ஈரா திம்னாவை சென்று அடையுமுன் தாமார் தன் வேஷத்தை களைந்து போட்டு, கைம்பெண் வேஷம் தரித்து ஊருக்குள் மறைகிறாள். ஈரா, அப்படிப்பட்ட தாசி அந்த ஊரில் இல்லை என்ற செய்தியை கொண்டு வந்தபோது, யூதாவுக்கு கலக்கமாகத்தான் இருந்திருக்கும்.
ஓரு மூன்று மாதங்கள் கடந்திருக்கும், யூதா தான் ஒரு வேசியைத் தேடி திம்னாவில் அலைந்ததை மறந்திருப்பான் ஆனால் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆதி:38:24 ல் தாமார் வேசித்தனம் பண்ணி கர்ப்பமாயிருக்கிறாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டபோது , அவளை சுட்டெரிக்க கொண்டு வரும்படி கூறுகிறான். சற்று கவனியுங்கள்! தன் மருமகளை ஏமாற்றியவன், தன் இச்சைக்காக ஒரு பெண்ணை உபயோகப்படுத்தியவன், இப்பொழுது தாமாரை விரல் நீட்டிக் குற்றவாளியாகத் தீர்த்து அவளை சுட்டெரிக்க வேண்டும் என்கிறான்.
தாமார் அழைத்து வரப்பட்ட போது, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானானேன் என்று தன்னிடமிருந்த மோதிரத்தையும், கோலையும், ஆரத்தையும் கொடுத்தனுப்பி இவைகள் யாருடையவைகள் பாரும், இவற்றிக்கு சொந்தமானவனே என்னை கர்ப்பமாக்கினான்” என்று கூறினாள். உண்மையில் சொல்லப்போனால் யூதாவே கேளும்! நான் உமக்குச் சொந்தமானவள் என்று தாமார் தெளிவாகக் காட்டுகிறாள். யூதா, அவைகள் தன்னுடையவைகள் என்று அறிந்து, இவள் என்னிலும் நீதியுள்ளவள் என்றான். அவன் கண்கள் திறக்கப்பட்டன! தாமாரைக் குற்றவாளியாகக் காட்டிய அவன் விரல் இப்பொழுது அவன் பக்கம் திரும்பியது.
தாமாருக்கு யூதாவினால் அநீதி இழைக்கப்பட்டது. தேவனாகிய கர்த்தர் தாமாருடைய அவல நிலையைக் கண்ணோக்கிப் பார்த்து தேவனுடைய கிருபையைப் பெறத் தகுதியே இல்லாத அவளுக்குத் தம்முடைய கிருபையால் நீதி கிடைக்கும்படி தயவு அருளினார்.
தோராயமாக 1700 வருடங்களுக்கு அப்பால், எருசலேமின் தேவாலயத்துக்கு அருகே , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம், வேசித்தனத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை, தாமார் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று யூதா கூறியது போல, இவளைக் கல்லெறிய வேண்டும் என்று ஒரு கூட்டத்தார் இழுத்து வந்தனர் ( யோவான்: 8:7) என்று பார்க்கிறோம். இயேசு அவளை ஒருகணம் நோக்கினார்! ஒருவேளை அன்று தாமார், யூதாவின் முன் நின்ற கோலம், எல்லாம் அறிந்த நம் கர்த்தராகிய இயேசுவின் மனக்கண் முன்னால் தோன்றியிருக்கும். ‘உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலில் கல்லெறியக்கடவன்’ என்றார். தகுதியே இல்லாத அந்தப் பெண்ணுக்கும் தாமாரைப் போல கர்த்தருடையக் கிருபை கிடைத்தது.
இந்தத் தகுதியற்ற, சாட்சியற்ற யாக்கோபின் புத்திரனாகிய யூதாவின் குலத்தில், இவ்வுலகை இரட்சிக்கத் தகுதி பெற்ற யூத ராஜசிங்கம் தோன்றினார்! நாம் இன்று தாமாரைப் போலஅவருடைய சமுகத்தில் வந்து, அவர் நாமத்தை அறிக்கையிட்டு, நான் உமக்கு சொந்தம் ஆண்டவரே என்று நம்மைத் தாழ்த்துவோமானால், அவர் நம்முடைய கடந்த காலத்தின் அவல நிலையை பார்க்காமல், நம்மையும் இரட்சித்து அவருக்கு சொந்தமாக்கி கொள்வார்.
தகுதியற்ற நம்மை தமக்கு சொந்தமாக்கிய கர்த்தராகிய இயேசுவின் மாபெரும் அன்பை இழந்து விடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்