பார சுமையால் உள்ளத்திலிருந்து எழுந்த ஒரு ஜெபம்!
ஆபகூக் 1:2 கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!
வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பார சுமைகளாய் மாறியபோது ஆபகூக் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம்! கர்த்தர் ஏன் எனக்கு பதிலளிக்கவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்? என் ஜெபத்துக்கு பதில் வருமா? என்று தீரும் இந்தப் பிரச்சனைகள்? என்றெல்லாம் நாம் குமுறுவதில்லையா?
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்துக்கு உடனே பதில் வரவேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறோம். ஜெபத்துக்கு பதில் வர தாமதிக்கும்போது நாம் அதை விரும்புவதில்லை. சில வேளைகளில் கர்த்தர், அமைதலாயிரு! தரித்திரு! காத்திரு போன்ற வார்த்தைகளால் நம்மோடு பேசி அமைதியாய் காத்திரு என்று சொல்லும்பொழுது நாம் நிச்சயமாக பொறுமையோடே காத்திருக்க வேண்டும்! ஏனெனில் கர்த்தர்தாமே நமக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் அதன் அர்த்தம்! நாம் கண்களால் காண முடியாவிட்டாலும் அவர் நமக்காக யாவையும் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த விசுவாசத்தோடு இன்று என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள். ஒருமணிநேரம் நாம் தேவனுடைய சமுகத்தில் காத்திருப்போம். நம்முடைய எல்லாத் தேவைகளையும் அவரிடம் சொல்வோம்!
தேவனாகியக் கர்த்தரை விசுவாசி! அவர் ஜெபங்களுக்கு செவி சாய்த்து பதிலளிக்கும் தேவன்! ஆம் நிச்சயமாக உன்னுடைய உள்ளத்தின் குமுறுதல்களுக்கும் பதில் வரும்! ஜெபக் குறிப்புகளை premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்