ஆதி: 39:14 – 15 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன்.
நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்.
போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்!
அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை பல நாட்கள் கண்களால் வலை வீசியிருப்பாள்! அவன் அந்த வலையில் விழாததே அவன் மீது அதிக தாபத்தை கொடுத்திருக்கும். பெண்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காததை அடைய ஆசைதான். அதுவும் பணக்காரியான போத்திபாரின் மனைவிக்கு ‘கிடைக்காதது’ என்றதே அகராதியில் இல்லை!
வேதம் கூறுகிறது (ஆதி:39:11), ‘ஒருநாள் அவன் தன் வேலையை செய்வதற்கு வீட்டுக்குள் போனான், வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை’ என்று.
அழகிய மாளிகை, யாரும் இல்லாத தனிமை, அருகே ஒரு சௌந்தர்யமுள்ள வாலிபன்!……… ஒரு நிமிடம்! நமக்கு எதை இது நினைவுட்டுகிறது?
ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தனிமையில் உலாத்தியதல்லவா? வேதம் கூறுகிறது, அவள் தனிமையில் இருந்தபோது, யாரும் பார்க்காத வேளையில் சர்ப்பம் அவளை வஞ்சித்தது என்று.
ஒரு நிமிஷம்!!!! நீ……. தனிமையில் இருக்கும்போது யாரும் உன்னைப் பார்க்காத போது, நீ தவறு செய்ய ஒரு நல்ல தருணம் வரும்போது, அதை செய்தால் யாருக்கும் தெரியாது என்ற நிலையில் நீ இருக்கும்போது எப்படி???? நடந்து கொள்வாய்?????? சிந்தித்துப் பார்!
இன்றுகூட நாம் தனிமையில் இருக்கும்போது தான், சாத்தான் நம்மை வஞ்சிக்க வருவான். தனிமை என்னும் வல்லமையான, ஆபத்தான காந்தம் நம்மை தவறான வழிக்குள் இழுத்துவிட வல்லது. ஜாக்கிரதை!!!
போத்திபாரின் வீட்டுக்குள் தான் தனியாக இருப்பதை உணர யோசேப்புக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவன் ஏவாளைப் போல சர்ப்பத்துக்கு செவி சாய்க்கவில்லை. லோத்துவைப் போல அங்கிருந்து ஓடிப்போக தயங்கவும் இல்லை. வேதம் கூறுகிறது ‘அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்’ என்று.
தினமும் சோதனைகளை சகிக்கிற நமக்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணமாக அமைகிறான் அல்லவா? நம் வாழ்க்கையில் திரு.போத்திபாரையும், திருமதி போத்திபாரையும் சந்திக்கும்போது, அங்கே பேச்சுக்கு இடமே இருக்க கூடாது, யோசேப்பைப் போல அங்கிருந்து ஒரே ஓட்டம் ஓடிவிட வேண்டும்!
தனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில், திருமதி போத்திபார், எபிரேய அடிமையாகிய யோசேப்பு தன்னோடு சயனிக்க முயற்சி செய்தான் என்று , அவனுடைய வஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு பறைசாற்றுகிறாள்.
ஒரு நிமிஷம்! என்றாவது யாராவது உங்களிடம் நடந்தது உங்களுக்கு பிடிக்காததால், இப்படி போத்திபாரின் மனைவியைப்போல அல்லது பாம்பைப் போல படம் எடுத்திருக்கிறீர்களா? இந்த சீறுகிற குணத்தை சர்ப்பத்தின் குணத்தோடு ஒப்பிடுவதின் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது!
வேதாகம வல்லுநர் கூறுகின்றனர், திரு போத்திபார் இந்த சீற்றத்தை முழுவதும் நம்பியிருந்தால், யோசேப்பை மறுகணமே கொலை செய்யும்படி கட்டளையிட்டிருப்பான். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை! ஏனெனில் அவன் தன் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டதைப் பற்றி சிறிதாவது கேள்விப்பட்டிருப்பான். இப்பொழுது யோசேப்பின் வஸ்திரத்தை அவள் கையில் வைத்துக்கொண்டு ‘ உம்முடைய வேலைக்காரன் என்ன செய்துவிட்டான் பாருங்கள்’ என்று கூச்சல் போட்டதால், வேறுவழியின்றி யோசேப்பை அவன் சிறைச்சாலைக்கு அனுப்பினான்.
பரிசுத்தமாய் தேவனுக்கு பயந்து வாழ நினைத்ததால் என்ன நிலைமைக்கு யோசேப்புத் தள்ளப்படுகிறான் என்று பாருங்கள்! ஒருநாள் யோசேப்பு அவன் தகப்பனாகிய யாக்கோபுக்கு செல்லக் குமாரனாக இருந்தான், மறுநாள் சகோதரால் படுகுழியில் தள்ளப்பட்டான். ஒருநாள் எகிப்தில் போத்திபாரின் அரண்மனையில் அதிகாரம் பெற்றவனாய் இருந்தான் மறுநாள் நாற்றமுள்ள சிறைச்சாலையில் தள்ளப்பட்டான்! ஆனால் தேவனாகியக் கர்த்தர் அவனோடிருந்தார்! அதில் மட்டும் ஒரு மாற்றமுமில்லை!
அன்பின் சகோதர சதோதரியே! பரிசுத்தமாய் வாழ விரும்பியதால் ஒருவேளை நீ பாதாளத்துக்கு தள்ளப்பட்டு இருக்கலாம்! ஒன்றுமட்டும் மறந்து விடாதே! தேவனாகிய கர்த்தர் உன்னை விட்டு விலகமாட்டார்! ஓர் உன்னத வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்