ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.”
யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது?
ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து வருபவர்களின் வேதனை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியம். யோசேப்பு மட்டும் அல்ல, சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்த தாவீது, சவுலினால், ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப் பட்டான். தேவனுடைய வல்லமையை இறங்கி வர செய்த எலியா தீர்க்கதரிசி, தன் உயிரைக் காப்பாற்ற கெபிகளைத் தேடி ஓட வேண்டியிருந்தது.
இப்படிப்பட்ட இருளான பாதைக்குள் செல்பவர்கள் கர்த்தர் மேல் மனஸ்தாபப் படுகிறதைக் கண்டிருக்கிறேன். அநேகர் கர்த்தரை விட்டு பின்வாங்கியும் போகிறார்கள்! நான் என்ன தவறு செய்தேன்? ஏன் கர்த்தர் என்னைக் கைவிட்டார்? ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை? ஏன் என் ஜெபம் கேட்கப்படவில்லை? என்றெல்லாம் புலம்புபவர்களைப் பார்த்திருக்கிறேன்.
யோசேப்பு என்ன குற்றம் செய்தான் இப்படிப்பட்டப் பெரிய தண்டனையை அனுபவிப்பதற்கு? தாயை இழந்தவன், சகோதர்களால் வெறுக்கப்பட்டு இஸ்மவேலரிடம் விற்கப்பட்டவன், காம வெறி கொண்ட ஒரு பெண்ணால் பொய் பழி சுமத்தப் பட்டவன், தேவனிடம், நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் என்னைக் கைவிட்டீர் என்று குறை கூறியிருக்கலாம், ஆனால் யோசேப்பு தேவனைக் குற்றப்படுத்தவில்லை! அவனிடம் எந்த முறுமுறுப்பும் இல்லை!
பாதாளத்தைப் போன்ற இருள் சூழ்ந்த வேளையிலும், அவன் கண்கள் தேவனை நோக்கி பார்த்து, ஆண்டவரே நான் உமக்கு சொந்தம், நான் பாவத்தில் விழவில்லை, உம்முடைய பிள்ளை என்ற பெயரைக் காத்துக் கொண்டேன் என்று கூறியன! அதன் விளைவாக அவன் ஒருபோதும் கர்த்தருடைய பிரசன்னத்தையும், பெலத்தையும் இழக்கவே இல்லை!
சற்று யோசித்துப் பாருங்கள்! யோசேப்புக்குக் கர்த்தர் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி சொப்பனங்களால் எவ்வளவு அழகாக விளக்கியிருந்தார்! அது மட்டுமல்ல! அவனுடைய அந்த ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி கர்த்தருடைய கரம் அவனை வழி நடத்தவில்லையா? அவன் சிறைச்சாலைக்கு செல்லாதிருந்தால் எப்படி பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக அவன் எழும்பியிருக்க முடியும்?
II கொரி 4:8 ல் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை” என்று கூறுகிறார்.
என்ன அருமையான அனுபவம் நிறைந்த வார்த்தைகள்!
யோசேப்பைப் போல, பவுலைப் போல, நீயும் நானும் ஒருவேளை, செய்யாத குற்றத்துக்காக தண்டனையையோ , வியாதி என்ற சிறைச்சாலையையோ, அல்லது குடும்பத்தில் பிரச்சனைகள் என்ற இருளையோ, பணத்தேவைகள் என்ற புயலையோ, கடந்து கொண்டிருக்கலாம்! ஒருவேளை கர்த்தர் மேல் சந்தேகம் என்கிற கலக்கம் கூட வந்திருக்கலாம்!
திகையாதே! ஆதி:39:21 கூறுகிறது, “கர்த்தரோ யோசேப்போடே இருந்து அவன்மேல் கிருபை வைத்து சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும்படி செய்தார்.”
துயரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் மீது சந்தேகமா? அவரைப் பார்க்க முடியாதபடி காரிருள் சூழ்ந்திருக்கிறதா? சீக்கிரத்தில், ஊடுருவும் ஒரு ஒளியில், உன்னை ஏந்தி, சுமக்கிற இரு அன்பின் கரங்களைக் காண்பாய்! உன்னை ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதான் கர்த்தர் வழிநடத்தியிருக்கிறார் என்று ஒருநாள் புரிந்து கொள்வாய்!
இந்த சிறையின் இருள் சீக்கிரம் கடந்து போகும்! ஒளிமயமான எதிர்காலத்துக்குள் செல்லலும் பாதை தென்படும்! பயப்படாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்