தானியேலின் சீரான ஜெபம்!
தானியேல் 9:3 நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி ….
இன்று சனிக்கிழமை! நாம் ஜெபத்தில் ஒருமனப் படும் நாள்!
தானியேலின் வழ்க்கை ஜெபமே ஜெயம் என்ற வார்த்தைக்கு முன்னோடி என்று நமக்குத் தெரியும்! தானியேல் 2 ம் அதிகாரத்தில் அவனை வாலிபனாகவும், 6 ம் அதிகாரத்தில் அவனை ஒரு வயதானவனாகவும் பார்க்கிறோம்! ஆனால் ஜெப வாழ்க்கை ஒருபோதும் குறைவு படவேயில்லை! ஆங்கிலத்தில் consistent என்று ஒரு வார்த்தை உண்டு! அதற்கு சீரான அல்லது உறுதியான என்று அர்த்தம். ஆரம்பித்திலிருந்து முடிவு வரை சீராகவும் உறுதியாகவும் ஜெபத்தில் தரித்திருந்தது தானியேல் தான்!
எவ்வளவு பெரிய உயர்ந்த வேலையில் இருந்தாலும் மூன்று வேளை முழங்கால் படியிட்டு ஜெபிக்க தானியேலுக்கு நேரம் இருந்தது! உபவாசிக்கவும் முடிந்தது! ஆனால் நமக்குத்தான் இன்று நேரமே போதவில்லை! தேவனோடு அதிக நேரம் தனியாக ஜெபிக்கும்போது நம்முடைய பாரங்கள், சுமைகள் அனைத்து இலகுவாகிவிடும்!
இன்று நாம் ஒருமணி நேரமாவது ஜெபிக்கலாமே! இம்மட்டுமாய் தேவன் நம்மை காத்து வழிநடத்தும் கிருபைக்காக நன்றி செலுத்துவோம். அநேக திருச்சபைகள் நோய்த்தொற்று பரவலால் மூடப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்! இந்த கொரொனா நோய் முற்றிலும் அழிந்து போகவும் திருச்சபைகள் மறுபடியும் வழக்கம் போல ஆராதனைகள் நடத்தும் காலம் சீக்கிரம் வரவும் ஜெபிப்போம். இந்தப் பண்டிகை காலங்களில் நோய் மறுபடியும் பெரிய அளவுக்கு பரவி விடாது கர்த்தர் கிருபையாய் இரங்க வேண்டும் என்றும் ஜெபிப்போம்!
உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆவல்களையும், பாரங்களையும் தேவனுடைய பாதத்தில் வைத்து ஜெபியுங்கள்! ஒரு மணி நேரம் தயவு செய்து ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்