யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்”
“கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. என்னோடு ஆதியாகமத்தில் பயணித்த நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று நாம் வேதத்தின் இரண்டாவது புத்தகமாகிய யாத்திராகமத்தை ஆரம்பிக்கலாம்!
யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள், அங்கே பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1:7,8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும் அங்கே மரணமடைந்தார்கள். பின்னர் யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்.அவன் அவர்களை சுமைசுமக்கிற வேலையினால் ஓடுக்கினான். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மத்தியிலும் அவர்கள் அந்த தேசத்திலே பலுகிப் பெருகினார்கள் என்று நாம் வேதத்தில் பார்க்கிறோம்!
இந்த சமயத்தில் எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து, எபிரேயப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளையானால் பிரசவிக்கும்போதே கொன்றுவிடும் படி கட்டளையிடுகிறான்! ஆனால் அந்த மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.
அவர்கள் இருவரும் பார்வோன் முன்னால் அழைத்துவரப் பட்டார்கள். பார்வோன் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளை விடுகிறான். பார்வோன் ராஜாவுக்கு இந்த எபிரேய மருத்துவச்சிகள் கொடுத்த பதில் அவர்களுடைய தைரியத்தையும், பேசும்போது தேவன் அளித்த ஞானத்தையும் காட்டுகிறது.
நீதி: 25: 11 “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்” என்று வேதம் கூறுகிறது.
இந்த இரு பெண்களும் பார்வோனுடைய சமுகத்தில் நின்று, அவனை நோக்கி, அமைதியாக, சாதாரணமாக, ஞானமாக எவ்வாறு பதிலளித்தனர் என்று பாருங்கள்!
பார்வோன் அவர்களை சுமை சுமக்கப் பண்ணி கடின உழைப்பினால் அவர்களைக் கஷ்டப் படுத்திவந்தான் அல்லவா? அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால் எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள்! நாங்கள் போகுமுன்னரே அவர்கள் பிரசவித்து விடுகிறார்கள் என்று புத்திசாலித்தனமான பதிலை பார்வோன் முன் வைத்து அவன் மறு வார்த்தை பேச முடியாதவாறு செய்தனர்.
நீதி:15: 23. “…. ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்றுவாசிக்கிறோம். ஞானமுடன் பேசும் திறன் உங்களுக்கு உண்டா? ஏற்றகாலத்தில் ஏற்ற வார்த்தைகளை பேசும் திறன் தேவனிடத்தில் இருந்து வரும் ஞானமே!
இந்த இரு பெண்களுக்கும் பயம் இருந்ததாகவே தெரியவில்லை! அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை! எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்! அவர்கள் பதறவில்லை, கத்தவில்லை, பயத்தினால் உளறவுமில்லை, கர்த்தருடைய பலத்தினால் தைரியமாக பார்வோனுக்கு பதிலளித்தனர் என்று பார்க்கிறோம்.
ஞானம் என்பது எப்பொழுது பேசவேண்டும் என்று அறிந்து பேசுவதும், எப்பொழுது பேசாமலிருப்பது என்று அறிந்து அமைதியை காப்பதும் தான்!
நாம் ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றாவது நம் வாழ்க்கையை பாதித்திருக்கின்றனவா? சிந்திக்காமல் எறிந்த வார்த்தைகளாலே குடும்பம் இரண்டு பட்டு போனதா? குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா? ஐயோ நான் பேசாமல் அமைதியாயிருந்திருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காதே என்று நினைத்ததுண்டா?
நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா? என்று சிந்தித்துப்பார்!
சிப்பிராள், பூவாளைப் போல எந்த சூழ்நிலையிலும், பயப்படாமல், தைரியமாக தேவ ஞானத்தோடு பேசும்படியான கிருபையை கர்த்தர்தாமே நமக்கு அருளிச் செய்வார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்