சஙீதம் 27: 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்….. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
தேவனுடைய மகிமையைக் காண தாவீது ஜெபித்த ஜெபம்!
இன்று சனிக்கிழமை! நாம் ஒருமனதாக ஜெபிக்கும் நாள்!
இன்றைய வேதாகம வசனத்தில் தாவீது தேவனுடைய பிரசன்னத்தை நாடி ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம். தேவனுடைய பிரசன்னத்தில் தங்கியிருக்கும்போது கிடைக்கும் ஆனந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
தாவீதை தேவனாகியக் கர்த்தர் அதிகமாக நேசித்தார். தாவீது தன்னுடைய வாழ்வில் பெரிய அளவில் பாவம் செய்து சறுக்கியபோது, எப்படி கர்த்தரால் இவனை தன்னுடைய இருதயத்திற்கேற்றவன் என்று கூற முடிகிறது என்று நான்கூட சிந்தித்திருக்கிறேன்! அதற்கு பதில் இந்த வசனத்தில் இருக்கிறது!
தாவீது தன்னுடைய வாழ்வில் ஜெபிக்காத இடமே இல்லை சொல்லும் அளவுக்கு எல்லா நேரங்களிலும் ஜெபிப்பதை நாம் பார்க்கிறோம். தன்னுடைய சிறு வயதிலிருந்தே சிங்கத்தை எதிர்த்தபோதும், கோலியாத்தை வென்றபோதும், பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணினபோதும், சவுலுக்கு தப்பியோடிய போதும் தாவீது ஜெபித்த ஜெபங்கள் அநேகமாயிரம்.!
இங்கு தாவீது ஒன்றை நான் கேட்டேன் என்று சொல்லும்போது, இந்த ஒன்றுதான் தாவீதின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்த ஆவல். அவனுடைய உள்ளத்தின் ஏக்கம், ஆத்துமத்தின் வேண்டுதல் என்று நமக்குத் தெரிகிறது!
அது என்ன? கர்த்தருடைய மகிமையைக் காணவேண்டும், கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய பிரசன்னத்தில் தங்கியிருக்க வேண்டும். இதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவன் சொன்ன போது கர்த்தர் அவனைக் கண்டார்! அவருடைய பிரசன்னத்தை, அவருடைய ஐக்கியத்தை அவன் வாஞ்சிப்பதைக் கண்டார்! அவனில் மிகவும் பிரியப்பட்டார்!
நாமும் அப்படிப்பட்ட வாஞ்சையோடு தேவனுடைய பிரசன்னத்துக்குள் கடந்து வருவோம்! அவருடைய மகிமையைக் காண்போம்!
ஒருமணி நேரமாவது என்னோடு ஜெபியுங்கள்! நம்முடைய எல்லாத் தேவைகளையும் அவரிடம் சொல்வோம்! எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ஐக்கியத்தையும், மகிமையையும் நாடுவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்