கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல!

யாத்தி :2:2, 9  “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.…….

பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்

பெண்கள் என்றாலே ஒரு பெலவீனப்பாண்டமாக உலகத்தார் நினைக்கிறார்கள். அது உண்மையா??? சரீரப்பிரகாரமாய் ஒருவேளை இருக்கலாம்! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும், புத்திசாலித்தனத்திலும், திறமையிலும், நேர்மை, உண்மை போன்ற காரியங்களிலும் பெண்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதுதான் என் கருத்து.

 பெண்களின் வாழ்க்கை சுகந்த மணம் வீசும் மலர் போல என்பார்கள்! ஏனெனில் மலர் என்றாள் கிள்ளி எறிந்து விடலாம் அல்லவா? ஆனால் யாரோ ஒருவர் பெண்களை தேயிலையோடு ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் தேயிலையை கொதித்த நீரில் போட்டாலும் அதிக சுவையும், மணமும் உள்ள தேநீரைத்தான் கொடுக்கும்!

நேற்று யொகெபேத் என்ற ஒரு பொறுப்புள்ள தாயைப் பற்றி படித்தோம். தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக, எதையும் செய்ய தயாராக இருந்த இந்த தாய், பார்வோன் ராஜா , பிறந்த ஆண்குழந்தைகளை நைல் நதியில் போட கட்டளை கொடுத்திருந்தபோதும், இஸ்ரவேலின் தேவன் மேல் நம்பிக்கையோடு தன் குழந்தையை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள் என்று பார்த்தோம்.

வேதம் கூறுகிறது, மூன்று மாதங்களுக்கு பின் அவள் நாணலினால் செய்த ஒரு பெட்டியில், நீர் உள்ளே செல்லாமலிருக்க, பிசினும் கீலும் பூசி, தன் குமாரனைப்  படுக்க வைத்து, பார்வோன் குமாரத்தி நதிக்கு ஸ்நானம் செய்ய வரும் நேரம் அறிந்து, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்து, என்ன நடக்கிறது என்று கவனிக்க குழந்தையின் அக்காவை அங்கே நிற்க வைக்கிறாள்.

அவள் திட்டமிட்டு எதிர்பார்த்தபடியே பார்வோன் குமாரத்தி அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி அதை வளர்க்க ஆசைப்படுகிறாள். அதை பால் கொடுத்து வளர்க்கும் ஒரு தாதியாக யொகெபேத் மாறி தன் குழந்தையை பார்வோன் குமாரத்திக்கு விட்டுக் கொடுக்கிறாள் என்று பார்க்கிறோம்.

இதைப் படிக்கும்போது என் எண்ணத்தில் ஓடியதெல்லாம், எவ்வளவு மனபலம் உள்ள ஒரு தாய் இவள் என்று தான்!

பார்வோனின் போர்வீரர்கள் கண்ணில் பட்டால் தன் குழந்தைக்கு ஆபத்து என்று நன்கு அறிந்த யொகெபேத், தன் மனப்பலத்தைக் கூட்டி தன் பிள்ளையை பார்வோன் குமாரத்தி அவள் பிள்ளையாக்கிக் கொண்டாலும் பரவாயில்லை, அவனை அந்த கொலைகாரப் பார்வோன் கையிலிருந்து காப்பாற்றினால் போதும் என்று எண்ணினாள்.!

யொகெபேத், தன் குழந்தையாகிய மோசேக்கு ஜீவனை மாத்திரம் கொடுக்கவில்லை, அவனை அழிவிலிருந்து மீட்டு, அவனுக்கு நல்ல எதிர்காலத்தையும் கொடுத்தாள்.

வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர் மோசே, மிகுந்த அழகுள்ளவனாயும், பார்க்கும்போதே ஒரு சிறப்புத்தன்மை வாய்ந்த குழந்தையாக இருந்திருப்பான் என்று. அவனைப் பார்த்தவுடன், தேவனை அறிந்த இந்த தாயின் உள்ளம் ‘இவன் நம்மை இரட்சிப்பான், நம்மை எகிப்த்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பான்’ என்று திட்டமாக கூறியிருக்கும். அவனை எப்படியாவது காப்பாற்றி, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தன் கடமை என்று உணர்ந்திருப்பாள்.

அவள் தன் பெலத்தையெல்லாம் திரட்டி, தான் பெற்றெடுத்த செல்லக் குழந்தையை பார்வோன் குமாரத்தியின் கையில் கொடுத்து, அவனை எகிப்தின் அரண்மனையில், எபிரேய ஆண்பிள்ளைகளை கொலைசெய்ய கட்டளை பிறப்பித்த அதே ராஜாவின் அரண்மனையில் வளரும்படி அனுப்பியபோது, அவள் உள்ளம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை நோக்கி மன்றாடியிருக்கும் அல்லவா?

யொகெபேத்தின் சுயநலமில்லாத தாய்மையைப் பற்றி சிந்தித்தபோது, என் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்துக்காக எதையெல்லாம் நான் விட்டுக் கொடுத்தேன் என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன்! நீங்களும் சிந்தியுங்கள்!

இளம் தாய்மாராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக என்ன தியாகம் செய்கிறீர்கள்? பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க இந்த எபிரேய தாயைப் போல, தேவன் மேல் திடமான நம்பிக்கையும், பெலமும், ஞானமும் உங்களிடம் உண்டா? உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் நேரத்தை தியாகம் செய்ய உங்களால் முடியுமா? டிவி பார்க்க நேரம் உண்டு! சிரித்து பேச நேரமுண்டு! வேலைக்கு போக நேரமுண்டு! புத்தகங்கள் வாசிக்க நேரமுண்டு! ஆனால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபிக்க நேரம் உண்டா?

பிலிப்:4: 13 “ என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு” என்று பவுல் சொல்கிறார்! எப்பொழுது அந்த பலம் கிடைக்கும்? தேவனுடைய சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் போது மட்டுமே! அந்த பலம் உங்களோடு இருப்பானால் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் வெற்றி உண்டு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

எகிப்தில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள நாணலினால் செய்யப்பட்ட பெட்டி!

IMG_1860.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s