யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்.
அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.”
இன்று பார்வோன் குமாரத்தியைப் பற்றி சற்று சிந்திக்கலாம்! மோசே பிறந்த போது யார் பார்வோனாக இருந்தார் என்பதைக் குறித்து பல கேள்விகள் உள்ளன! பார்வோன் குமாரத்தியின் பெயர் நிச்சயமாகத் தெரியவில்லை! வேதம் அவளுடைய பெயரை நமக்குத் தெரியப்படுத்தாவிட்டாலும் அவள் பார்வோனின் ஒரே மகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பார்வோனின் குமாரத்தி எகிப்து சாம்ராஜ்யத்தில் செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை ராஜ்யத்தை ஆண்டதால் அவள் நினப்பதை பெற்றுக்கொள்ளும் செல்வாக்கு நிறைந்தவள்.
ஆனால் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் வாழவேண்டிய இவளின் மனதை ஒரு பாரம் நெருக்கியது. அவள் தகப்பன் பார்வோன் ராஜாவின் கட்டளையின் பேரில், எபிரேய ஆண்குழந்தைகள் நைல் நதியில் குப்பையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற பயங்கர செய்தி அவளுக்கு நிச்சயமாக பாரமாகத்தான் இருந்தது.
ஒருநாள் இந்த அழகிய ராஜகுமாரத்தி நைல் நதிக்கு ஸ்நானம் பண்ண வருகிறாள். ஓரு நிமிஷம்! நானாயிருந்தால்……. ந்த நதி பக்கமே தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன். ஏனெனில் குழந்தையை பறிகொடுத்த யாரோ ஒருவர், அப்பா பார்வோன் செய்த குற்றத்துக்காக நம்மேல் பழிவாங்கி விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்திருக்கும்! அது மட்டுமல்ல ஒருவேளை நதியில் எறியப்பட்ட ஒரு குழந்தையை முதலையாவது, ஏதாவது மதிய உணவாக சாப்பிடுவதைப் பார்க்க நேரிட்டால் … அப்பப்பா அதையும் இந்த ஏழையின் மனது தாங்காது!
வேதம் கூறுகிறது, யோகெபெத் தன்னுடைய மூன்று மாத குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்த நேரத்தில், ராஜகுமரத்தி நதியில் ஸ்நானம் செய்ய வந்தாள் என்று.
நான் எகிப்துக்கு போனபோது இந்த நதியிலா ராஜகுமாரத்தி ஸ்நானம் செய்ய வந்தாள் என்று யோசித்தேன்! இன்று பல அடுக்குகள் உள்ள கப்பல்கள் உல்லாசப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆடலுடனும் பாடலுடனும் வலம் வருகின்றன! ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நைல் நதி பரிசுத்தமாய் கருதப்பட்டது. இன்றைய ஜனத்தொகையும், மாசும், இல்லாமல் அது பாலைவனத்தில் முத்தாய் ஜொலித்திருக்கும்!
என்ன நடக்கிறது பாருங்கள். பார்வோன் குமாரத்தி நதியண்டை வந்ததும் ஒரு நாணல் பெட்டி, நாணலுக்குள்ளே சொருகி வைக்கப்பட்டிருக்கிறதைக் கண்டாள். உடனே தன் தாதிமாரை அனுப்பி அதை எடுத்து வர சொல்கிறாள். இந்த இடத்தில் நாம் யாத்தி: 2: 5,6 லிருந்து இந்த பார்வோன் குமாரத்தி எப்படிப்பட்டவள் என்று அறிவோம்!
முதலாவது வேதம் கூறுகிறது, அவள் பிள்ளையின் மேல் இரக்கமுற்றாள் என்று. அவள் அந்தப் பெட்டியைத் திறந்தவுடன் பிள்ளை அழுதது, அவள் அதின்மேல் இரக்கமுற்றாள். ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தில் அவளின் பெண்மைக்குரிய இரக்க குணம் தலை தூக்கியது. சூரியனை வழிபட்டு வந்த அந்த புறஜாதியான பெண்ணிடம் காணப்பட்ட இரக்க குணம், அவள் இன்றைய தினத்தில் நாம் காணும் இரக்கமற்ற அநேகரை விட, அவளுடைய சொந்தத் தகப்பனைவிட சிறந்த குணமுள்ளவள் என்றே காணப்படுகிறாள்.
இரண்டாவது அவளை நான் ஒரு தைரியசாலியான பெண்ணாகப் பார்க்கிறோம். அவளுடைய தகப்பனின் படை வீரர்கள் இதை பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அல்லது அவளது தகப்பனின் கட்டளையை மீறுவதற்காக என்ன தண்டனை கிடைத்திருக்கும்? இவற்றைப் பற்றி அவள் சிந்திக்கவே இல்லை. ராஜ கட்டளையை மீறி ஒரு ஒரு எபிரேய குழந்தையை காப்பாற்ற அவளுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது.
மூன்றாவது அவள் அந்த குழந்தையைக் காப்பாற்றுவதில் காட்டிய ஆர்வம் அவளுடைய மனிதாபிமானத்தையும், நல்மனசாட்சியையும் காட்டியது. குழந்தையைக் கண்டவுடன் அவளுக்கு அது எபிரேயக் குழந்தை என்று தெரியும். அதை தொடர்ந்து வந்த குழந்தையின் அக்கா, பின்னர் குழந்தையை வளர்த்து தருகிறேன் என்ற தாய், இவர்களைப் பார்த்தும், இந்தக் குழந்தையை பெற்றவள் யாரென்று அறியாமலிருக்க அவள் ஒன்றும் முட்டாள் இல்லை. அந்த தாய் தன் குழந்தையை காப்பாற்ற எடுத்த முயற்சி அவள் உள்ளத்தை தொட்டது.அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவள் முடிவு செய்தாள். எகிப்தில் இருந்த அத்தனை பேரும் குழந்தைகளை கொல்லும் முயற்சியில் இருந்தாலும், தான் அந்த வழியில் போவதில்லை என்று முடிவு செய்தாள்.
இஸ்ரவேலருக்கும், இன்று நமக்கும் கூட முக்கியத்துவரான நம்முடைய மோசேயை வளர்த்தத் தாய் இவள்! மோசேக்கும், மரணத்துக்கும் நடுவே தைரியமாய் நின்று அவனைக் காப்பாற்றி நமக்கு அளித்தவள்! மோசேக்கு படிப்பு, திறமை அனைத்துமே அளித்து ஒரு இளவரசனாக வளர்த்தவள்! மோசே ஒரு எகிப்தியனைக் கொன்றுவிட்டு மீதியானின் வனாந்தரத்துக்கு போய், பின்னர் 40 வருடங்கள் கழித்து இஸ்ரவேலை விடுவிக்க வந்தபோது இந்தத் தாய் உயிரோடே இருந்தாளா? தன் அன்பு மகனை மறுபடியும் அவளால் பார்க்க முடிந்ததா? இந்த அன்பு மகனால் ஒருவேளை எபிரேயரின் தேவனான யெகோவாவை கண்டு கொண்டிருந்தாளா? இவற்றிற்கெல்லாம் பதிலே இல்லை!
யாத்தி: 23: 2” தீமை செய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக என்று வேதம் சொல்லுகிறது. பார்வோன் குமாரத்தி தீமை செய்ய அவள் தகப்பனையோ அல்லது மற்ற எகிப்தியரையோ பின்பற்றவில்லை. பார்வோன் குமாரத்தியைப் பற்றி சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை! அவள் இரக்கமும், தைரியமும், நல் மனசாட்சியும் உள்ள பார்வோன் குமாரத்தி என்றே நாம் என்றென்றும் நினைவு கூறுவோம்!
ஒரு கோழையிடம் ஒரு காரியத்தை செய்ய சொன்னால் அது ஆபத்தில்லையா? என்று யோசிப்பான். சுயநலவாதியிடம் சொன்னால், அதனால் என்ன லாபம்? என்று கேட்பான். பெருமைக்காரனிடம் சென்றால் தனக்கு புகழ் கிடைக்குமா? என்று யோசிப்பான். ஆனால் நல் மனசாட்சி உள்ளவனோ தான் செய்வது சரியா? அல்லது தவறா? என்று மட்டும் தான் யோசிப்பான் என்று ஒரு மேதை கூறியிருக்கிறார். நீ யார்?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி http://www.rajavinmalargal.com என்ற இணைய தளத்துக்கு சென்று, ‘Follow’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.