எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது, “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுவேன்! நல்லவர்களின் வாழ்க்கையில் அநேக சோதனைகள் வருவதுண்டு.
சுனாமி போன்ற பேரலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் அழித்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையில் சுனாமியை சந்தித்து வருகின்றனர். வருந்தக் கூடிய விஷயம் என்ன என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையில் ‘சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்ற வரிக்கே இடமில்லை.
துதி ஆராதனை நடத்தி இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்துகிற ஒரு தீர்க்கதரிசயாக, கர்த்தர் மிரியாமைத் தெரிந்து கொண்டார் என்று நேற்று பார்த்தோம். அவள் வாழ்க்கையிலும் நாம் நேற்று பார்த்த சந்தோஷம் நிலைக்கவில்லை. ஆனால் அதற்குக் காரணம் மிரியாமின் மனப்பான்மை தான்!
எகிப்தை விட்டு வெளியேறி, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்தை நோக்கி சென்ற இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஸ்தோத்திரங்களோடு உற்சாகப்படுத்த மிரியாமைப் போல ஒரு தீர்க்கதரிசி தேவைப்பட்டது. ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் அடிக்கடி முறுமுறுப்பதைப் பார்க்கிறோம். யாத்திராகமம், உபாகமம், எண்ணாகமம் என்ற மூன்று புத்தகங்களிலும் 23 தடவைகளுக்கு மேல் ‘முறுமுறுப்பு’ அல்லது ‘முறுமுறுத்தார்கள் ’ என்ற வார்த்தைகள் வருகின்றன! மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள் ! கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்தார்கள்! ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அந்த ஜனங்கள் முகத்தை தூக்கினர்.
அப்படிப்பட்ட ஜனங்களை உற்சாகப் படுத்த கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் உபயோகப்படுத்தினார். ஆனால் ஒருநாள் ஆரோனும், மிரியாமும், மோசேக்கு உறுதுணையாய் நில்லாமல், முறுமுறுக்கும் ஜனங்களைப் போல மோசேக்கு எதிராகப் பேசினார்கள் என்று இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம்.
மிரியாம் தன் தம்பியின் மனைவிக்கு எதிராக கலகம் பண்ணுகிறாள்! துதி ஆராதனை செய்த தீர்க்கதரிசியின் வாயில் சபித்தலும் காணப்பட்டது. என்ன காரணம்? எல்லாமே நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது! ஆரோன், மிரியாம், மோசே மூவரும் எவ்வளவு பெரிய காரியத்தை சாதித்துக் கொண்டு இருந்தனர்! இப்பொழுது என்ன ஆயிற்று????
காரணம் மோசேயின் மனைவி வந்து அவர்களோடு சேர்ந்து விட்டதுதான்! மோசே மணந்திருந்தது ஒரு கருத்த நிறப் பெண்ணை என்று சரித்திரம் கூறுகிறது! சிப்போராள் நிறத்திலிலும் குணத்திலும் தனித்து காணப்பட்டாள் என்றும் அவளைக்குறித்துப் படித்தேன். அப்படியானால் தன்னுடைய தம்பியின் கவனத்தையும், அன்பையும் அதிகமாகக் கவர்ந்த அவனுடைய மனைவியைக் கண்டதும் மிரியாமுக்கு பொறாமையா? அல்லது அவளது கருத்த நிறத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?மிரியாமுடைய மனப்பான்மையில் ஏற்ப்பட்ட மாற்றம் அவளுடைய வாயிலிருந்த துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் மாற்றிப்போட்டது!
எண்ணாகமம் 12 வது அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், வேதம் கூறுகிறது, கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் மிரியாமையும் ஆசாரிப்புக் கூடாரத்துக்கு அழைத்து, ஒவ்வொருவருக்கும் தான் கொடுத்திருக்கிற தனிப்பட்ட பொறுப்பைப் பற்றி பேசி, மோசேக்கு எதிராக பேசியதால் தன் கோபத்தை அவர்கள் மேல் காட்டினார் என்று பார்க்கிறோம். மேலும், அவர் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு விலகியபோது மிரியாம் உறைந்த பனியின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள் என்று வேதம் சொல்லுகிறது. எவ்வலவு பயங்கரமான சம்பவம் இது! என்னுடைய சிறுவயதில் என்னை பயத்தால் உறைய வைத்த ஒரு சம்பவம் இது! தேவனுடைய ஊழியக்காரருக்குக் கொடுக்கப்பட்ட மகா பெரிய தண்டனை! காரணம் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றம்!
இன்று உன்னுடைய மனப்பான்மையை நீயே சோதித்துப்பார்! உதட்டிலே ஆயிரம் ஸ்தோத்திரங்களை சொல்லும் உன் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்கள் உள்ளன? உன்னுடைய அண்ணியைப் பற்றி என்ன நினைக்கிறாய்? மைத்துனரை???? மாமியாரைப்பற்றி உன்னுடைய மனப்பான்மை என்ன? அதையெல்லாம் விடு! வேறே ஜாதியில் உன் மகன் கல்யாணம் பண்ணி ஒரு பெண்ணை கூட்டி வந்திருக்கிறானே அவளைப்பற்றிய உன்னுடைய மனப்பான்மை என்ன? வாயிலே துதியும் உள்ளத்திலே வெறுப்பும், பொறாமையும் இருந்தால் அதை நீ வெகுநாள் மறைக்க முடியாது! ஒருநாள் அது நெருப்பாக வெளியே வந்து உன்னை நேசிப்பவர்களை உன்னைவிட்டுப் பிரித்துவிடும்!
மாறுபட்ட மனம் துதியை மாற்றிவிடும்!
நம்மில் பலர் நம் வாழ்க்கையில் தேவன் கொடுத்திருக்கிற ரோஜா மலருக்காக தேவனைத் துதிப்பதை விட்டு விட்டு, அதில் காணும் சிறு முள்ளுகளையே நினைத்து, மலரையே மறந்துவிடுகிறோம்!
உன் உள்ளத்தை மாற்று! எண்ணத்தை மாற்று! மனப்பான்மையை மாற்று! இல்லாவிடில் அது உன்னுடைய துதியும் ச்தோத்திரமும் நிறைந்த வாழ்க்கையையே மாற்றிவிடும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்