யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்………”
18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம்.
யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த மறுநாள் காலை முதல், மாலை வரை மோசே ஜனங்களை நியாயம் விசாரித்ததை, எத்திரோ கவனித்துக் கொண்டிருந்தான்!
இதைப் பற்றி மோசேயிடம் விசாரித்தபோது அவன் ஜனங்களுக்கு யாதொரு வழக்கு உண்டானால் அவர்கள் என்னிடத்தில் வருகிறார்கள், நான் அவர்களுக்கு நியாயம் விசாரித்து, அவர்களுக்கு தேவ கட்டளைகளை தெரிவிக்கிறேன் என்றான்.
இதைக்கேட்ட எத்திரோ, மோசேக்கு ஒரு நல்ல ஆலோசனையைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். தேவனுடைய ஊழியக்காரனான அவனுடைய வேலை தேவனுடைய சமுகத்தில் காத்திருப்பது என்பதையும், அவன் இவ்வளவு நேரம் ஜனங்களோடு செலவிட்டால் அவன் தேவ சமுகத்தில் காத்திருப்பது கூடாது என்பதையும் எத்திரோஉணர்ந்தான்.
ஆதலால் யோசித்து ஒரு நல்ல யோசனையை அவன் தன் மருமகனாகிய மோசேக்குக் கொடுக்கிறான். அதன்படி நல்ல திறமையான தேவனுக்கு பயந்த மனிதரை தேர்ந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேர்களுக்கும், நூறு பேர்களுக்கும், ஐம்பது பேர்களுக்கும், பத்துபேர்களுக்கும் அதிபதிகளாக ஏற்படுத்தவேண்டும். அவர்கள் ஜனங்களின் பிராச்சனைகளுக்கு செவிசாய்ப்பார்கள்!
இந்த பகுதியில் நாம் முக்கியமான ஒரு காரியத்தைப் பற்றி படிக்கிறோம். யாருக்கும் ஆலோசனை கொடுப்பது சுலபம் தான் ஆனால் அதை எப்படி, அவர்கள் மனம் புண்படாமல் கொடுக்க வேண்டும் என்று எத்திரோவிடம் நாம் கற்றுக் கொள்வோம்.
முதலாவதாக, எத்திரோ மோசேயிடம் ‘ நீ நடந்து கொள்வது தவறு’ என்றோ, அல்லது ‘முட்டாள்தனமான காரியத்தை செய்கிறாய், காலை முதல் மாலை வரை இந்த ஜனங்கள் முன்னால் உட்கார்ந்திருந்தால் உன் குடும்பம் என்ன ஆகும்’ என்றோ கடிந்து பேசவில்லை.
மாறாக அவன் மோசேயிடம் பரிவாக “மோசே நீயும், உன்னோடே இருக்கிறவர்களும் தொய்ந்து போவீர்கள். உன்னால் இந்த பாரத்தை சுமக்க முடித்து” என்று பேசுவதைப் பார்க்கிறோம்.
அநேக நேரங்களில் நாம் ஆலோசனை கொடுக்கும்போது, கேட்கிறவர்களின் செவி கிழியும்படி கத்தி, அவர்கள் நம் ஆலோசனைக்கு பயந்து காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளும்படி செய்கிறோம். எத்திரோ அப்படி செய்யவில்லை, அவன் மோசேயின் நலனில் அக்கறை காட்டினான்.
இரண்டாவது, எத்திரோ, மோசே தேவனுடைய சமுகத்தில் அதிக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்று உணர்ந்தான். மோசே தேவனிடமிருந்து ஒரு விசேஷ அழைப்பை பெற்ற தேவ மனிதன், ஆதலால் அவன் தேவனிடம் காத்திருந்து, அவருடைய கற்பனைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான், அவன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்பதை அவன் அழகாக மோசேக்கு விளக்கி காட்டினான்.
மூன்றாவது, எத்திரோ மோசேயிடம் நீ செய்வதை நிறுத்திவிடு, யாரோ எப்படியோ போகட்டும் என்று கூறவில்லை. இப்படி செய்யாமல் எப்படி மாற்றி செய்தால் பலன் இருக்கும் என்று விளக்குகிறான். ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் ஏற்படுத்தும்படியான உயர்ந்த ஆலோசனையை சொல்லுகிறான்.
தக்க சமயத்தில் கொடுக்கப்படும் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசு இந்த உலகில் எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்!
வேதம் கூறுகிறது, மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான் என்று.
நம் குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கும் பழக்கம் உண்டா என்று சிந்தித்து பார்ப்போம். மாமனாரை மதித்து அவர் வார்த்தையின்படி செய்கிறவர்கள் நம்மில் எத்தனைபேர் உண்டு? இவருக்கு வேலையே இல்லை! எப்பொழுதும் என் வாழ்க்கையில் குறுக்கிடுவதுதான் இவர் வேலை என்று நாம் பேசுவதில்லையா?மாமனார், மாமியார் எப்பொழுது தொலைந்து போவார்கள் என்று நாம் நினைப்பதில்லையா?
எத்திரோவின் ஆலோசனை மோசேயின் வாழ்க்கையை நிர்மூலமாக்கவில்லை, அவன் குடும்பத்தை கட்ட உதவியது. பெரியவர்களின் ஆலோசனையை உதறித்தள்ளாதே! அவை உன்னை அழிக்காது! மோசே தன் மாமனாரை மதித்து அவருடைய ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தது நமக்கு இன்று ஒரு பாடமாக அமையட்டும்!
நீதி: 15:23 “ மனுஷனுக்கு தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்! ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது”.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com