எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று நாம் மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு செயல் பட்டான் என்று பார்த்தோம். இன்று மோசேயின் குடும்பத்தில் வந்த ஒரு குழப்பத்தைப் பற்றி பார்க்கலாம்.
என்னோடு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் அண்ணன் மனைவி, தம்பி மனைவிமாருக்குள் வரும் மனத்தாங்கல்கள் எனக்கு அனுபவமே இல்லை.
ஆனால் அநேக கிறிஸ்தவருடைய வாழ்க்கையில், அண்ணன், தம்பிமாரின் மனைவிகளோடும், அக்கா, தங்கைகளின் கணவர்களோடும் ஏற்படும் பிரச்சனைகளால் சகோதர சகோதரிகளுக்குள் காணப்படும் பொறாமை, மனமுறிவு, வேதனை, கண்ணீர், இவற்றைக் கண்டு, தேவனிடம், என் வாழ்க்கைக்கு பின்னர் என் பிள்ளைகளுக்குள் இப்படிப்பட்ட வேதனை எந்தக் காரணத்தினாலும் வராமல் காத்துக் கொள்ளும்படி ஜெபிப்பேன்.
பல குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முதல் காரணம் நாக்கு அடக்கம் இல்லாமை என்று திட்டமாக கூற முடியும்.
இந்த பிரச்சனை மோசேயின் குடும்பத்தில் கூட நேரிட்டது. நேற்று நாம் மோசேயின் மாமனார் எத்திரோ, மோசேயின் மனைவி சிப்போராளையும், அவனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மோசே பாளையமிறங்கியிருந்த தேவ பர்வதம் வந்தடைந்தான் என்று பார்த்தோம்.
சிறிது இதைப்பற்றி சிந்தித்து பாருங்கள்! இதுவரை மோசேயும், ஆரோனும், மிரியமும் தான் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களாக இருந்தனர். லட்ச கணக்கான மக்களை எகிப்திலிருந்து கானான் தேசத்து வழி நடத்திக் கொண்டிருந்த மகா பெரிய தலைவர்கள். அவ்வேளையில் திடீரென்று ஒருநாள் மீதியான் நாட்டு ஆசாரியனான எத்திரோ, சிப்போராளோடும் அவள் பிள்ளைகளோடும் வந்து சேருகின்றான்.
வேதம் கூறுகிறது, மோசே அவர்களைக் கண்டவுடன் எழுந்து, கூடாரத்துக்கு வெளியே போய், தன் மாமனாரை வணங்கி முத்தஞ் செய்து வரவேற்றான் என்று. ஆரோனும், மிரியாமும், மோசேயும் மாத்திரம் சந்தித்து தேசத்து காரியங்களை ஆலோசித்த கூடாரத்துக்குள் எத்திரோவை அழைத்து செல்லுகிறான். அதுமட்டுமல்ல எத்திரோவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள்ளுகிறான். இது போதாதா ஒரு குடும்பத்தில் குழப்பம் நேரிட? மிரியாமுக்கும் ஆரோனுக்கும் யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்திருக்கும்..
மிரியாமால் தன் தம்பி மனைவியாகிய சிப்போராளை ஏற்றுக்கொள்ள முடியவில்ல. மோசேயின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகுத்துக்கொண்டிருந்த இந்த சகோதரிக்கு இன்னொரு பெண்ணின் வருகை பொறுக்கவில்லை. சிப்போராள் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவளாதலால் அவள் நிறத்தில் இஸ்ரவேலரை விட குறைந்தவளாக இருந்திருப்பாள். மோசே இந்தப் பெண்ணை மணந்திருக்கக் கூடாது என்று தான் மிரியாம் நினைத்திருப்பாள். அவள் அவர்களைப்போன்ற எபிரேயப் பெண் இல்லை என்ற உண்மையை மிரியாமும் ஆரோனும் வெறுத்தனர்.
அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சிப்போராளைத் தாக்கினர். அவளுடைய பின்னணியை, அவளுடைய கலாச்சாரத்தை, அவளுடைய நடைமுறையை, அவளுடைய பழக்கவழக்கங்களைத் தாக்கினர்.
மனவருத்தத்தொடு இதை எழுதுகிறேன். இந்த தவறை நாம் செய்யவில்லையா? அவள் குடும்பம் அப்படி, ….அவள் வளர்ந்த வளர்ப்பு சரியில்லை….. தாய் தகப்பன் சரியில்லை……பணத்தின் அருமை இவளுக்கு எங்கே தெரியும்,… இந்த அழகியை எங்கே பிடித்தானோ…….நம் குடும்பத்துக்கு ஏற்றவனே இல்லை இவன்…… இப்படியெல்லாம் நாம் நம்முடைய அண்ணன், தம்பி, அக்கா, தங்கையின் வாழ்க்கைத் துணையைப் பற்றி பேசுவதில்லையா?
இந்த சூடான சண்டையில் ஒன்றே ஒன்று குறைவுபடுகிறது. சிப்போராளின் எதிர் வார்த்தைகள். ஆரோனின், மிரியாமின் தாக்குதலுக்கு சிப்போராள் ஒருவார்த்தை திருப்பி பேசியதாகக் கூட வேதம் கூறவில்லை. அதுமட்டுமல்ல சிப்போராள் இதை மோசேயிடம் கண்ணீரோடு கொண்டுபோய் குறை கூறியதாகவும் வேதம் சொல்லவில்லை. நாமாக இருந்திருந்தால் தனிமையில் சிறிது நேரம் கிடைத்தவுடனே நம்முடைய நாத்தனார் அல்லது மைத்துனர் பேசிய எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து வீட்டில் ஒரு பெரிய சண்டையையே வர வைத்து விடுவோம்!
ஆனால் சிப்போராளின் அருமையான குணத்தை இங்கு பார்க்கிறோம். எந்த நேரத்தில் அமைதியாய் இருந்தால் குடும்பத்தில் அமைதியைக் காக்க முடியுமோ அந்த நேரத்தில் அமைதியாய் இருப்பதே ஒரு நல்ல குடும்பப்பெண்ணுக்கு அழகு. அந்த அழகு இந்த புறஜாதியான, நிறத்தில் குறைந்த இந்தப் பெண்ணிடம் சற்று அதிகமாகவே இருந்தது!
இன்றைய வேதாகமப்பகுதி ஒன்றை மட்டும் திட்டவட்டமாகக் கூறுகிறது ‘ கர்த்தர் அதைக் கேட்டார்’ என்று.
இன்று குடும்பப் பிரச்சனையால் சிப்போராளைப் போல அமைதியாக, யாரும் பார்க்காத இடத்தில் கண்ணீர் சிந்துகிறாயா? நீ அமைதியாய் பொறுத்துக்கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். உன் கணவரிடம் அல்லது மனைவியிடம் நீ சொல்ல முடியாதபடி தவிக்கும் வேதனைகளை கர்த்தர் அறிவார்!
நீதி:17:27 “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்”
நாம் பேசும் வார்த்தைகள் வெள்ளியைப் போன்றது என்றால், நாம் காக்கும் அமைதி பொன்னைப் போன்றது என்று யாரோ கூறியது எவ்வளவு உண்மையானது! அமைதியாக இரு! உன்னால் தாங்கமுடியாத வார்த்தைகள் உன் காதுகளில் விழுந்தாலும் உன் குடும்ப அமைதிக்காக பொறுத்துக் கொள்! கர்த்தர் உன்னைக் காண்கிறார் என்பதை மறந்து விடாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com