யாத்தி: 14: 13 “…… நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்……”
நாம் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு நம்முடைய பிரயாணத்தைத் தொடருகிறோம்!
நாங்கள் கிராமங்களில் சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள்.
நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட தேவன், அவர்களிடம் ‘ நிறுத்துங்கள்! சற்று நேரம் அமைதியாய் இருங்கள்! என்று கூறவேண்டியதிருந்தது!
இதை எழுதும்போது நான் சற்று நேரம் அமைதியாய் இருந்து பார்த்தேன். என்ன சத்தம் அங்கே! தென்னை மரங்களில் ஏதோ சில பறவைகளின் சலசலப்பு! ஒரு நாய் குரைக்கும் சத்தம் தூரத்திலிருந்து வந்தது! பக்கத்தில் நடக்கும் கட்டடப்பணியில் கம்பிகளை அறுக்கும் சத்தம், ஏதோ ஒரு கார் கடந்து செல்லும் சத்தம்! இவைகள்தான் என் செவிகளில் விழுந்தது! இது நாம் வழக்கமாக நகரத்தில் கேட்கும் சத்தங்கள் தானே!
அன்று சிவந்த சமுத்திரத்தின் கரையில் பாளையமிறங்கியிருந்த இஸ்ரவேலர்களைப் பார்த்து தேவனாகிய கர்த்தர் சற்று அமைதியாயிருங்கள் என்றார். அவர்கள் அமைதியாய் இருந்த வேளையில், அந்த வனாந்திரத்தில் அவர்கள் காதுகளில் என்ன தொனித்திருக்கும்? சமுத்திரத்தின் சலசலப்பு! ஒரு பலத்த காற்றின் இரைச்சல்! ஐயோ ஏன் இப்படிக் காற்று வீசுகிறது என்றுகூட நினைத்திருப்பார்கள்! சென்னையில் வாழும் எங்களுக்கு இப்படிப்பட்ட புயல் காற்று வீசும்போது எப்படி இரைச்சல் இருக்கும் என்று நன்கு தெரியும்!
ஆனால் அந்த இரா முழுவதும் வீசிக்கொண்டு இருந்த பலத்த கீழ்க்காற்றின் மூலம் கர்த்தருடைய கரம் மறைமுகமாக அவர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை! என்ன ஆச்சரியம்! அந்த பலத்த கீழ்க்காற்று இராமுழுவதும் வீசி, சமுத்திரம் ஒதுங்கி தண்ணீர் வறண்டு போய் செங்கடல் இரண்டாய் பிளந்தது என்று பார்க்கிறோம். (யாத்தி 14:21)
சற்று சிந்தித்து பாருங்கள்! பார்வோனின் சேனைகள் நெருங்கி வரும் சத்தம் கேட்டு கலங்கி போய் நித்திரை வராமல், காலையில் உயிரோடு இருப்போமா பயத்தில் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களின் காதுகளில் விழுந்த பலத்த காற்றின் சத்தம் என்ன தெரியுமா? அது தேவனாகியக் கர்த்தர் அவர்களை இரட்சிக்க வழியை ஆயத்தம்பண்ணிக்கொண்டிருந்த கிரியையின் சத்தம்!
ஒருவேளை அவர்கள் அமைதியாய் இராமல் போயிருந்தால், அவர்களுடைய முறுமுறுப்பும், கூக்குரலும் அவர்கள் செவிகளை மந்தமாக்கியிருக்கும்! பார்வோனின் இரதங்களின் சத்தம் அவர்கள் மனதை நோகடித்து தோல்வியுற செய்திருக்கும். தேவனுடைய இரட்சிப்பின் கரம் அவர்களுக்காக கீழ்க்காற்றின் மூலம் கிரியை செய்ததை அறியாமல் இருந்திருப்பார்கள்.
ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம்! சேனைகளின் ஓசை ஒருபுறம்! மோசே ஜனங்களை நோக்கி “நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்.” என்று கட்டளையிட்டான்! அவர்கள் அமைதியாய் இருந்தபோது பார்வோனின் இரதங்களின் சத்தத்தை அல்ல! அவர்களுக்காக சமுத்திரத்தை பிளவு படுத்திய கீழ்க்காற்றின் சத்தத்தைக் கேட்டார்கள்!
நம்முடைய பயம், சந்தேகம், அவிசுவாசம் என்ற சத்தங்கள் நம் செவிகளை மந்தமாக்கும் போது, தேவன் உனக்காக, உன் தேவைகளை சந்திப்பதற்காக கிரியை செய்வதை நீ எப்படி அறிய முடியும்? நீ சும்மாயிரு! நான் உனக்காக கிரியை செய்கிறேன்! நான் உனக்காக யுத்தம் செய்கிறேன் என்று கர்த்தர் சொல்கிறார்!
தயவு செய்து நீ ஒருநிமிடம் தேவனுடைய சமுகத்தில் அமைதியாய் தரித்திரு! அவர் உனக்காய் செய்து கொண்டிருக்கும் பாதை உன் கண்களில் தெரியும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்