யாத்தி: 14: 21, 22 மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இரா முழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும், அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
பார்வோனின் இரதங்களின் சத்தம் இஸ்ரவேல் மக்களை வந்தடைந்தபோது அவர்கள் எங்கேயுமே ஓட முடியாமல் பறவை ஒன்று வேடனின் கண்ணியில் மாட்டியது போலத் தவித்தனர். அவர்களுடைய பயத்துக்கு அர்த்தம் இருந்தது என்றாலும் அவர்கள் மோசேயிடம் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு விசுவாசம் குறைவாக இருந்ததென்பதைக் காட்டிற்று/
ஆனால் தேவனாகிய கர்த்தரோ அவர்களை பயப்படாமல் அமைதியாயிருந்து அவருடைய இரட்சிப்பைக் காணும்படி கட்டளையிட்டார் என்று பார்த்தோம். அந்த இராத்திரி கடும் இருட்டில், பெருங்காற்று ஒன்று வீசியது. யாரும் இதுவரை கண்டிராத காற்று எல்லா சத்தங்களையும் அடக்கி விட்டது!
அப்பொழுது மோசே தனிமையில் கர்த்தரிடம் சென்று அழுகிறான். இஸ்ரவேக் ஜனங்கள் முன்பு தைரியமாய் அவர்களை அமைதியாயிருக்கும்படி கூறிய மோசே தனிமையில் கர்த்தரிடம் முறையிடுகிறான். அதற்கு கர்த்தர் அவனிடம் இது முறையிடும் நேரம் அல்ல! செயல்படும் நேரம்! எழுந்து உன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டு என்றார்!
என்ன ஆச்சரியம்! அதிகாலையில் சூரியன் உதயமானவுடம் நற்செய்தி ஒன்று ஒவ்வொரு செவிகளையும் மெல்லிய சுகமான தென்றல் போல வந்தடைந்தது.
கூடாரம் கூடாரமாய் அந்த செய்தி காற்று போல் பரவியது. என்ன செய்தி அது? சமுத்திரத்தின் நடுவிலே நடந்து போக வழி இருக்கிறது!
இராவில் படுக்க சென்றபோது தோல்வி நிச்சயம் என்று தோன்றிற்று. பார்வோனின் சேனையின் சத்தம், கடும் காற்று, கடலின் சீற்றம் இவை தோல்வியின் சின்னங்களாய் இஸ்ரவேல் மக்களை பீதியில் ஆழ்த்தியது. ஒருவேளை காற்றின் வேகத்தில் நாம் கடலுக்குள் போய் விடுவோம் என்று கூட நினைத்திருக்கலாம்! ஆனால் விடியும்போது அவர்கள் கண்ணில் பட்டது எல்லாம் சமுத்திரத்தின் நடுவே இருந்த வெட்டாந்தரை மட்டும் தான்!
நேற்றைய வேதனை, பயம், அவிசுவாசம் எல்லாம் பறந்தோடி விட்டன! கர்த்தர் அவர்களுக்கு வழியை ஆயத்தம் பண்ணியிருந்தார். எப்படிப் பட்ட வழி என்று வேதம் சொல்லுகிறது? வெட்டாந்தரை! என்ன ஆச்சரியம்! இவ்வளவு நாட்கள் நீருக்கு அடியிலிருந்த தரை எப்படி வெட்டாந்தரையாக மாறிற்று? அந்த தரையில் சேறு இல்லை, பாறை இல்லை! அவர்கள் சுகமாய், கஷ்டமில்லாமல் நடந்து செல்ல வெட்டாந்தரை!
நாங்கள் எகிப்திலிருந்து இஸ்ரவேலுக்கு செல்லும் வழியில் சற்று நேரம் செங்கடலில் இறங்கி நின்றோம்! அப்பொழுது என் மனக்கண்ணால் இஸ்ரவேல் மக்கள் அந்த செங்கடலை வெட்டாந்தரையில் கடந்ததைப் பார்த்து உள்ளம் சிலிர்த்தது!
அதுமட்டுமல்ல! இதுவரை அவர்களுக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் அவர்களுக்குப் பாதுகாப்பாக பின்னால் சென்றார். இதுவரை அவர்களுக்கு முன்னால் சென்ற மேகஸ்தம்பம் அவர்களுக்கு பின்னாக சென்று , அவர்களைப் பின் தொடர்ந்த பார்வோனின் சேனைகள் இஸ்ரவேலின் சேனையை சேர விடாமல் மேகமும், மந்தாரமுமாகியது. என்ன ஆச்சரியம்! பார்வோனின் சேனைகள் இருளில் திணறியபோது இஸ்ரவேல் ஜனங்கள் வெளிச்சத்தில் நடந்து செங்கடலைக் கடந்தனர்
நம்முடைய வாழ்க்கையின் கடினமான வேளையில், பணக்கஷ்டம், வியாதி, வீட்டுப் பிரச்சனைகள் , நம்மை நெருக்குகிற வேளையில், கர்த்தருடைய கரம் வெட்டாந்தரையை உருவாக்குகிறது. நாம் கடந்து செல்ல முடியாது என்கிற பாதையில் கர்த்தர் நம்மைக் கடக்கப் பண்ணுவார்! அல்லேலுயா! அவருடைய பிரசன்னம் நம்மைப் பாதுகாத்து வழிநடத்தும் என்பது நிச்சயம்!
கடல் சீற்றம், பெருங்காற்று போல உங்களை நெருக்கின பிரச்சனைகளின் மத்தியில் கர்த்தர் அற்புதமாய் வெட்டாந்தரையை உருவாக்கின அனுபவம் உங்களுக்கு உண்டா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அந்த அனுபவம் எனக்கு உண்டு!
அவர் உங்கள் அருகாமையில் இருந்து, உங்களுக்காக இரவும் பகலும் கிரியை செய்து வெட்டாந்தரையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! கலங்க வேண்டாம்! நீங்கள் இந்தக் கடினமான பாதையை இலகுவாக கடந்து போகலாம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com