யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
நாம் கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்பு யாத்திராகம புத்தகத்தில் மோசேயின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்த பெண்களைப் பற்றியும், பின்னர் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேல் மக்களை வெட்டாந்தரையில் நடக்கச்செய்த மாபெரும் அற்புதத்தையும் பார்த்தோம்.
இந்த வாரம் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நினைத்தேன்.
இன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது.
இதை நான் எழுதும் போது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த என்னுடைய உறவினரின் பரிதாபமான மரணமும், அடக்கமும் தான் நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தாயை தன் வீட்டிலிருந்த ஒரு பழைய பாத்திரத்தைப் போல தூக்கியெறிந்த மகன், அவர்கள் மரணத்தில் வந்து மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுததை மறக்கவே முடியாது! ஆனால் என்ன பிரயோஜனம்? உயிருடன் இருக்கும்போது ஒரு துளி பாசத்தைக் கூட காட்டாமல் சவப்பெட்டியில் காட்டுவதால் பலன் என்ன?
நாம் இன்று படிக்கிற இந்த பிரமாணம் நமக்கு நம் குடும்பத்தில் உள்ள உறவினரிடம், விசேஷமாக நம் தாய் தகப்பனிடம் காட்ட வேண்டிய மரியாதையை நமக்குக் கற்பிக்கிறது. இந்தப் பிரமாணங்கள், ஒரு மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை எவ்வாறு வாகனங்கள் செங்குத்தாக விழாமல் காக்கிறதோ அவ்வாறு நம்மையும் காக்கின்றன என்றால் மிகையாகாது!
எபிரேய மொழியில் கனம் என்ற வார்த்தைக்கு உயர்வு என்று அர்த்தம் உண்டு! அப்படியானால் நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம்! ஒருவேளை அவர்கள் நம்மை கர்த்தருடைய வழியில் வளர்க்கத் தவறியிருக்கலாம். அல்லது அவர்கள் செய்த தவறுகள் நம் வாழ்வை பலமாக பாதித்திருக்கலாம். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறியிருக்கலாம். எனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? என்ன சேர்த்து வைத்து சென்றார்கள்? என்னை என்ன படிக்க வைத்தார்கள்? என்றெல்லாம் உன் மனம் புகைந்து கொண்டிருக்கிறதா? வேதத்தில் நாம் காணும் இந்த பிரமாணம் சொல்கிறது நாம் அவர்களை உயர்வாக நடத்த வேண்டும் என்று! இது கட்டளை!
ஒருவேளை அவர்களை ஒரு பெரிய பணக்காரர்களாக உன்னால் உலகத்தின் முன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், அல்லது பெரிய படிப்பு படித்தவர்கள் என் பெற்றோர் என்று உன்னால் உயர்வாக பேச முடியாமல் இருக்கலாம், அல்லது என் பெற்றோர் மிகவும் புகழ் பெற்றவர்கள் என்று உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை உன் பெற்றோராக உலகத்தார் முன்னால் உன்னால் உயர்த்த முடியும்!
உன்னுடைய எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தையினாலும் உன் பெற்றோரை கனம் பண்ணு! அவர்களை இழிவாய் நடத்தாதே! நீ அப்படிச் செய்யும்போது கர்த்தர் உன்னுடைய ஆயிசை நீண்டதாக்கி உன்னை கனம் பண்ணுவார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்