யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன்.
யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். இவைகளை தியானிக்காமல் இந்த புத்தகத்தை நாம் கடந்தால் அது சரியாகாது!
இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம் எதையாவது செய்யக்கூடாது என்று உறுதியாய் வாழும்போது சோதனைகள் குறுக்கிட்டு நம்மை மோசம் போக்குகின்றன அல்லவா?
இன்றைய வேதாகம பகுதியில் ”நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன்”. என்று வாசிக்கிறோம்.
தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு வாழ்வின் மூலாதாரமான கட்டளைகளைக் கொடுக்கும் போது, ஒருவன் ஒரு பெண்ணை மோசம் போக்கக்கூடாது என்ற இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ஒரு ஆண் ஒரு பெண்ணை மோசம் போக்குவதோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை மோசம் போக்குவதோ தேவனுடைய சித்தத்தில் இல்லை. ஆசை வார்த்தைகளைப் பேசி மோசம் போக்காதே என்பது தேவனின் கட்டளை.
இன்றைய காலகட்டத்தை சிந்தித்துப் பாருங்கள்! இந்தக் கொரொனா காலத்தில் கூட பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தத் தீங்கு ஆங்காங்கே நடந்து கொண்டுதானே இருக்கிறது! எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே தேவனாகிய கர்த்தர் பெண்களை மோசம் போக்காதிருங்கள் என்ற கட்டளையை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார்!
மோசம் போக்குதல் என்ற வார்த்தைக்கு ‘ விலகுதல்’ என்ற அர்த்தமும் எபிரேய மொழியில் உண்டு. நம்முடைய ஜீவியத்தில் உலக சிற்றின்பங்கள், பண ஆசை, பெண் ஆசை என்ற பல ஆசைகள் நம்மை மோசம் போக்கி தேவனுடைய சித்தத்திலிருந்து நம்மை வழி விலகச் செய்கிறது என்பதும் உண்மைதானே!இவை நம்மை ஆவிக்குரிய விபசாரத்துக்குள் நடத்துகின்றன என்பதை மறுக்க முடியாது அல்லவா!
இந்த வருடத்தின் கடைசியை நெருங்குகின்ற நீ இன்று உன் வாழ்க்கையை சோதித்து பார்? நீ எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? உன்னுடைய அவல ஆசையால் ஒரு பெண் அல்லது ஒரு ஆணின் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறாயா? அல்லது உலக ஆசைகளால், சிற்றின்ப மோகத்தால் மோசம் போய் தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? இந்த இரண்டுமே ஒன்றுதான் என்று நினைக்கிறேன்! ஒன்று சரீரப்பிரகாரமான விபசாரம் மற்றொன்று ஆவிக்குரிய வாழ்வில் விபசாரம்!
இன்று நான் தேவாதி தேவனின் பிள்ளை என்று உன்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியுமா?
வேதம், (நீதி:1:10) “என் மகனே ( மகளே) பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே” என்று தெளிவாக கூறுகிறது. விழுந்து விடாதே!
மோசம் போக்காதே! மோசம் போகாதே! இது தேவனின் கட்டளை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்