எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.”
இன்று நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம்.
இந்த புத்தகம் முழுவதும், கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகி, பாலைவனத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த இஸ்ரவேலரின் பெயர்களும், பெயர் வரிசைகளும், தொகைகளும், விதிமுறைகளும் தான் இடம் பெற்றிருக்கின்றன என்பது இந்த புத்தகத்தை வாசித்த நமக்குத் தெரியும். சாதாரணமாக லேவியராகமம், எண்ணாகமம் புத்தகங்களை நம்மில் சிலர் வாசிப்பதை தவிர்த்துவிடுவோம் அல்லவா?
இந்தப் புத்தகத்திலிருந்து எழுதுவதற்காக படிக்க ஆரம்பித்தபோது, இந்த ஜனங்களின் பாலைவன அனுபவத்திலிருந்து என்னுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நான் எதை கண்டடைவேன், எதை எழுதுவேன் ஆண்டவரே என்று பயந்து ஜெபித்தேன்.
ஆனால் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த புத்தகம் எனக்கு சீனாய் வனாந்தரத்தில் ஓர் நீரோடையாய் கிடைத்தது.
இதில் இடம்பெற்றிருக்கிற சில அருமையான் சம்பவங்கள், கதைகள் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன! சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து நம்மை சீரான வழியில் நடத்துகின்றன! பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம், முறுமுறுப்பு என்ற பெருந்தவறு, பாலைவன வாழ்க்கையினால் ஏற்ப்படும் மன சோர்புகள் போன்ற பல அருமையான பாடங்கள் நமக்காக காத்திருக்கின்றன!
வனாந்தரத்தின் நீரோடையான இந்த எண்ணாகமத்தை நாம் இன்று வாசித்த எண்ணாகமம்: 1: 1,2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.
கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் மக்களின் தொகையை பேர்பேராக எண்ணச் சொல்லுகிறார். கர்த்தர் இப்படி இஸ்ரவேல் மக்களின் தொகையை எண்ணச் சொன்னது, முதல் தடவையோ அல்லது கடைசி தடவையோ அல்ல! அவர்களை வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக, தலை தலையாக எண்ணும்படி கட்டளையிட்டார்.
வனாந்தரத்தில் கால்நடையாக நடந்த மக்களை சீராக வழிநடத்த இந்த குடிமதிப்பு உதவியிருக்கும் என்பது வேதகம வல்லுநர்களின் கணிப்பு.
இதில் ஒரு காரியம் என் உள்ளத்தை கவர்ந்தது!!!!!!
கர்த்தர் மோசேயை நோக்கி, சுமாராக எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கு பார் என்று சொல்லியிருந்தால், சுமாராக 2 இலட்சம் பேர் அல்லது சுமாராக எண்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்று மோசேயும் தோராயமாக சொல்லியிருப்பான். ஆனால் கர்த்தர் கேட்டதோ தோராயமாக அல்ல, அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” என்றார்.
உதாரணமாக, யூதா கோத்திரத்தாரின் எண்ணிக்கை, இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானுறு பேர் என்று (எண்:2:9 ) வாசிக்கிறோம்.
சகல தலைகளையும் பேர்பேராக எண்ணும்படி கட்டளையிட்ட தேவனுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வளவு முக்கியம் என்று நாம் பார்க்கிறோம்! ஒரு சபையில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு தேவையில்லை! ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை! நானும் நீயும் அவருக்கு முக்கியம்! ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியம்!
ஏதோ ஒரு திருச்சபையில், ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து விட்டு செல்கிறாயா? ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன் தலையை எண்ணியிருக்கிறார்! உன்னைத் தோராயமான எண்ணிக்கையில் ஒருவராக கர்த்தர் காண்பதில்லை! நீ என்ற ஒரு தனிப்பட்ட மனிதனைத்தான் கர்த்தர் பார்க்கிறார்! ஏனெனில் நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன்!
அன்பு சகோதர சகோதரிகளே! உன் தலையை மட்டுமல்ல “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்: அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு:10:30 என்று நம் கர்த்தராகிய இயேசு சொன்னார்.
நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் விசேஷித்து காணப்படுகிறோம்! நானா???? என்ற கேள்வி பலமுறை என் உள்ளங்களீல் எழுந்திருக்கிறது! என்னிடம் என்ன இருக்கிறது? ஞானமா? உயர் கல்வியா? அழகா? நிறமா? திறமையா? ஆஸ்தியா? என்ன இருக்கிறது? ஆனால் ஒன்றுமே இல்லாத இந்த ஏழையை கர்த்தர் நேசிக்கிறார் என்றுமட்டும் அறிவேன்! நான் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவள்!
இயேசு கிறிஸ்து உன்னையும் நேசிப்பதால் நீயும் அவருக்கு விசேஷமானவன்! யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார்! உன்னையே நேசிக்கிறார்!”
உன்னை இவ்வளவாய் நேசிக்கும் அவரை நீ நேசிக்கிறாயா?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்