எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?
என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு கூட ஆசைகள் இருந்தன! அளவுக்கு அதிகமாய் என்று சொல்ல முடியாது! சின்ன சின்ன ஆசைகள் பல இருந்தன! கனவுகள் பல இருந்தன!
நமக்கெல்லோருக்குமே ஆசைகள், பாசங்கள்,ஏக்கங்கள், சில இச்சைகளும் கூடஉண்டு. எல்லா ஆசைகளும் தவறு என்று கணித்துவிட முடியுமா? ஆசைகள் இல்லாத உலகம் வெறுமையாய் இருக்கும், ஆசையில்லாத வாழ்க்கை ருசியில்லாமல் இருக்கும். அப்படி நாம் வாழ வேண்டுமானால் கர்த்தர் நமக்கு ஐம்புலன்களை கொடுத்திருக்கக்கூடாது. எதையுமே ரசிக்கவும், ருசிக்கவும், உணரவும் தெரியாமல் வாழ்ந்திருப்போம். ஆனால் தேவனாகிய கர்த்தர் நம்மை அவ்வாறு உருவாக்கவில்ல. கர்த்தர் சிருஷ்டித்த எல்லாவற்றையும் அனுபவிக்கும்படியாய் நம்மை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் என்று வேதம் சொல்லுகிறது.
ஆனால் அளவுக்கு மீறிய ஆசைகள்தான் நமக்கு ஆபத்தாய் அமைந்து, நம்மை அழிவுக்குள் நடத்துகின்றன!
வேதாகமம் சொல்கிறது, எண்ணா:11:32 ல், “ அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும் காடைகளை சேர்த்தார்கள்….. அவைகளை பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காக குவித்துவைத்தார்கள் என்று.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது அநேக அந்நியர்களும் அவர்களோடு புறப்பட்டனர். அவர்கள் ஒருவேளை இஸ்ரவேல் ஸ்திரிகளை மணந்திருக்கலாம். அதனால் தங்கள் மனைவி பிள்ளைகளோடு அவர்களும் புறப்பட்டிருக்கலாம்! இப்படியாக ஒரு எகிப்தியனை மணந்த செலோமித் என்ற ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றி நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தொம் அல்லவா? இந்த அந்நியர்கள் எப்பொழுதுமே இஸ்ரவேல் மக்களுக்கு உபத்திரவமாக இருந்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் தங்களுடைய பழைய எகிப்தின் வாழ்க்கையை, புதிய வாழ்க்கையோடு இணைக்க முயன்றனர்.
எகிப்தை விட்டு புறப்பட்ட பின்னர், வனாந்தரத்தில் அத்தனை மக்களுக்கும் உணவு கிடைப்பது அரிதானதால், தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மன்னா என்ற அப்பத்தை அன்றன்று அருளினார். இஸ்ரவேல் மக்கள் மன்னாவைப் பொறுக்கி, ஏந்திரங்களில் அரைத்து அல்லது இடித்து சமைத்தார்கள் (எண்ணா:11:8) . அதில் அப்பம் சுடுவதைத் தவிர எத்தனை விதமான உணவு சமைக்க முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை! இப்பொழுது அவர்கள் நாக்கு மாறுபாடன சுவையைத் தேட ஆரம்பிக்கிறது!
மன்னா சாப்பிட்டு வெறுத்துவிட்டது! காலையில் மன்னா, மதியம் மன்னா, இரவு மன்னா! எங்கள் நாக்கு என்ன செத்தா போய்விட்டது? எங்களுக்கு மீன் வேண்டும், கோழிக்கறி வேண்டும்! என்ற அந்நிய ஜனங்களின் கூக்குரலோடு இஸ்ரவேல் மக்களும் சேர்ந்து கூக்குரலிட ஆரம்பித்தனர்! எங்கள் உள்ளம் வாடிப்போகிறது; மன்னாவைத்தவிர எங்களுடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று அழ ஆரம்பித்தனர்.
எண்ணா:11:23 ல் பார்க்கிறோம், கர்த்தர், “ கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?” என்று அவர்களுடைய நன்றியில்லாத இருதயத்தின் கூக்குரலுக்கு பதிலளித்தார். சில நேரங்களில் இப்படிபட்ட ஜெபத்துக்கு கர்த்தர் பதிலளிக்காமல் இருந்துவிட்டால் நமக்கு நலம். அவருடைய சித்தத்துக்கு மாறாக நாம் ஜெபிக்கும் காரியத்தை நாம் பெற்றுக்கொண்டாலும் நமக்கு சாபமாய் அமையும்.
இஸ்ரவேல் மக்களுக்கும் அப்படித்தான் நடந்தது! கர்த்தர் சமுத்திரத்திலிருந்து ஒரு காற்றை அனுப்பி, காடைகள் கரைசேர செய்தார். இச்சையினால் கூக்குரலிட்டு அழுத ஜனங்கள், அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும் காடைகளை சேர்த்தார்கள். அவர்களுடைய இச்சையின் ஜெபம் கேட்கப்பட்டது, மாமிசம்கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த மாமிசம் அவர்களுடைய பற்களில் இருக்கும்போதே தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது. கர்த்தருக்காக பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாய் வாழ வேண்டிய அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அந்நியரோடு சேர்ந்து இச்சையில் விழுந்து, அழுததால், கர்த்தர் அவர்களை வாதித்தார். இச்சித்த ஜனங்கள் அங்கே அடக்கம் பண்ணப்பட்டார்கள்.
தேவனுடைய பிள்ளைகளே இச்சித்தவைகளை அடைந்துவிட்டோம் என்று சந்தோஷப்படவேண்டாம்! காடையின் மாமிசத்துக்காக அவர்கள் அழுதது பார்வோனுடைய சாட்டை அடியை விட பலத்த தண்டனையை வாங்கிக்கொடுத்தது. தவறான ஜெபத்துக்கு பதில் கிடைக்கும்போது தண்டனையும் சேர்ந்தே வரலாம்!
உன்னுடைய இச்சையை நீ அடக்கி ஆளாவிட்டால், அது உன்னை அடக்கி ஆளும்! எந்தவிதமான இச்சை இன்று உன்னை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது?
கர்த்தரை நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் தேடி, அவரை நேசிக்கும்போது, நம்மை அவரிடமிருந்து பிரிக்கும் இச்சைகள், ஆசைகள், பாவங்கள் இவற்றை அடக்கி ஆள நமக்கு பெலன் கிடைக்கும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்