உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ”
வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.
இன்று நம்முடைய கடைசி நாள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்! இன்றைக்கு நாம் வாசிக்கிற வசனம் ஒரு தங்கப் புதையலைப் போல மோசேயின் உபதேசத்தில் புதைந்து கிடக்கிறது!
மோசேயுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்றும், தவறும்போதும் கர்த்தருடைய பாதங்களில் விழுந்து கிடக்கும் இயல்பும், கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும் இயல்பும் அவருக்கு இரு தூண்களைப் போல இருந்தன என்று பார்த்தோம்.
இப்பொழுது தன்னுடைய அருமையான, கர்த்தரோடு சஞ்சரித்த வாழ்க்கையின் கடைசி பகுதியில் மோசே ” அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். மோசேயின் குரலில் திடநம்பிக்கை தொனிக்கிறது! தாம் முகமுகமாய் அறிந்த தேவனே தனக்கு அடைக்கலம், அவர் நித்தியமானவர், என்றென்றைக்கும் நம்பப்படத்தக்கவர் என்கிறார்.
இதை வாசிக்கும்போது என்னுடைய வாழ்க்கையின் கடைசிமூச்சில் இப்படிப்பட்ட சாட்சியை நான் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன்!
ஒருநாள் வெளியே காற்று வேகமாக அடித்தது, இடியோடு மழை பெய்தது! வாசலில் நிற்கும் மரம் காற்றின் வேகத்தில் ஒடிந்து விழுந்து விடுவாற்போல் அசைந்தது! அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு சிறிய பறவை தனக்கென்று ஒரு சிரு கூட்டை அமைத்துக்கொண்டு அதிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றும், இடியும், மழையும் அந்தப் பறவையை அசைக்க முடியவில்லை. இந்தப் பறவையைப்போல இன்று அவருடைய நித்திய புயத்துக்குள் அடைக்கலமாக வாழும் நான் கடைசிவரை விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் பெருமூச்சின் ஜெபமாக வெளிப்பட்டது!
எகிப்தில் எல்லா ஆண் பிள்ளைகளையும் கொல்லும்படியாக பார்வோன் உத்தரவு கொடுத்திருந்த போது இரண்டு எபிரேய மருத்துவச்சிகள் மூலமாக கர்த்தர் மோசேக்கு அடைக்கலம் கொடுத்தார்! பின்னர் மூன்று மாதக் குழந்தையாக நாணற்பெட்டியில் நைல் நதியில் மிதந்த போது பார்வோன் ராஜாவின் குமாரத்தியால் அடைக்கலம் பெற்றார்! குழந்தையை வளர்க்க ஒரு தாய் தேவைப்பட்டபோது கர்த்தர் மோசேயை அவருடைய தாயின் கரத்திலேயே அடைக்கலமாகக் கொடுத்தார்! மோசே மீதியான் வனாந்தரத்தில் தலைசாய்க்க இடமில்லாமல் அலைந்தபோது கர்த்தர் எத்திரோவின் மகளான சிப்போராளை மனைவியாகக் கொடுத்து அடைக்கலம் கொடுத்தார்! இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பெரும்பொறுப்பை ஏற்றபோது அவனுடைய ஆத்துமாவை உற்சாகப்படுத்த துதி பாடல்களோடு ஆராதனை நடத்திய தீர்க்கதரிசியாகிய அவர் சகோதரி மிரியாமைக் கர்த்தர் அடைக்கலமாகக் கொடுத்தார்!
மோசே தன் முதிர் வயதில் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் என்று திட்டமாகக் கூற முடிந்தது!
உன்னால் இன்று தேவனே எனக்கு அடைக்கலம் என்று நிச்சயமாகக் கூற முடியுமா? கர்த்தருடைய புயத்துக்குள் அடைக்கலமாக வந்திருக்கிறாயா? அவருடைய பிரசன்னம் உன்னோடு எப்பொழுதும் தங்கியிருக்கிறதா? காற்றும் புயலும் வேகமாக அடிக்கும்போது நீ அசைக்கப்படாமல் அவருடைய நித்திய புயங்களில் அடைக்கலம் பெற்றிருக்கிறாயா?
உன்னுடைய நிகழ்கால வாழ்க்கையையும், நீ அறியாத உன் எதிர்காலத்தையும் மோசே முகமுகமாய் அறிந்த இந்த தேவனாகிய கர்த்தரிடம் ஒப்புவிக்க பயப்படாதே! அவர் என்றென்றும் உன்னைக் காப்பார்! நிச்சயமாகக் காப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.