யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”
சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர்! ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர்! அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர்! ஒரு கானானிய ஸ்திரீயிடம், ஒரு அந்நிய ஸ்திரீயிடம், ஒரு புறஜாதி ஸ்திரீயிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை! அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை விட அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்!
இப்பொழுது இந்த இரு வேவுகாரரும் ஒரு அந்நிய ஸ்திரீயான ராகாபுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது! அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது! நேரம் ஆக ஆக அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்!
நீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.
கானானிய ஸ்திரீயாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்?
ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா? (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.
கானானிய ஸ்திரீயாகிய ராகாப், இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும், இரக்கம் காட்டுவதே நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது!
இரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்! இரக்கம் காட்டத் தவறாதீர்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!