யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
அப்பா! இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர்!
நாம் ஒருசில மாதங்களுக்கு முன்னால் படித்தவிதமாக மோசே ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னர் பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானை சுற்றிப் பார்த்து பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான் என்று துக்கமுகமாய் வந்தனர். தங்களை வழிநடத்தி வரும் தேவனாகிய கர்த்தரைப் பார்ப்பதை விட்டுவிட்டு கானானில் தாங்கள் கண்ட இராட்சதர்களைப் பார்த்தனர். நம்மால் அந்த தேசத்தை சுதந்தரிக்க முடியவே முடியாது என்ற அறிக்கையை மக்களிடம் கொடுத்தனர்.
கானானியர் பலசாலிகள் மட்டும் அல்ல, இன்னொரு பயமுறுத்தும் உண்மை என்னவெனில் அவர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களில், தங்களை சுற்றிலும் மதில் சுவர் அமைத்து வாழ்ந்து வந்தனர். தங்களை எதிரிகளிடமிருந்து காக்க உயர்ந்த மதில்களை கட்டியிருந்த இந்த தேசத்தை கைப்பிடிப்போம் என்ற நம்பிக்கையும், இந்த மதில் சுவர்களைத் தகர்க்க தேவனாகிய கர்த்தர் வல்லவர் என்ற நம்பிக்கையும் இஸ்ரவேல் மக்களுக்கு வரவேயில்லை!
இந்த நம்பிக்கைக் குன்றிய தன்மையும், அவிசுவாசமும் தான் கானானின் எல்லையை அடைந்த அவர்களை மறுபடியும் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலைய விட்டது. இப்பொழுது முன்பு கானானுக்குள் வேவுபார்க்க சென்ற பன்னிரண்டு வேவுகாரரில் ஒருவனும், கர்த்தரின் வல்லமையிலும், வழிநடத்துதலிலும், கடுகளவும் சந்தேகப்படாதவனுமாகிய யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கானானின் எல்லையை வந்தடைந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு நாம் வாசிக்கும் வேதபகுதியில், எரிகோ அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. இந்த வசனத்தை ஒரு நிமிடம் கூர்ந்துகவனியுங்கள்! எரிகோவின் மக்கள் சுற்றிலும் அடைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர் என்று பார்க்கிறோம் அல்லவா? அவர்களை சுற்றிலும் மதில் சுவர் இருந்ததால் மாத்திரம் அல்ல, அவர்களுக்கென்று நண்பர்கள் இருந்தார்கள், அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது, அவர்களுக்கென்று தேவர்கள் இருந்தனர். தங்களுடைய வாழ்க்கை என்னும் வட்டத்தை சுற்றி மதில் எழுப்பி வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் தேவாதி தேவன், வானத்தையும், பூமியையும் படைத்தவர் செய்த அற்புத செயல்களையும், இஸ்ரவேல் மக்களை அவர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பிரித்து எடுத்து வழிநடத்தி வருவதையும் கேள்விப்பட்டபோது கூட தங்கள் செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டனர். தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று தங்கள் வாழ்க்கையை அடைத்துக்கொண்டனர்.
நம்மில் எத்தனைபேர் மதில் எழுப்பப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! எத்தனை முறை கர்த்தர் நம்மோடு பேசும்போது நம் தலையை வேறுபுறமாகத் திருப்பிக்கொள்கிறோம்! நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நான் செய்கிற வேலை எனக்கு பிடித்திருக்கிறது, என் நண்பர்கள் எனக்கு பிடித்திருக்கிறது, இந்த எரிகோ எனக்கு பிடித்திருக்கிறது, என்று நம்முடைய மனதை சுற்றியும், இருதயத்தையும் சுற்றியும் சுவர் அமைத்துக்கொண்டு தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடுக்காமல் வாழ்கிறோம்!
அன்று எரிகோவில், தன் இருதய மதில் சுவரைத் தகர்த்து எறிந்து கர்த்தருக்கு அதில் இடம் கொடுத்தது ராகாப் என்னும் வேசி ஒருத்திதான் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! இந்த தேவனுடைய பிள்ளை தன் இருதயத்தை திறந்து கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடுத்ததாலே, அவள் தன்னையும், தன் குடும்பத்தையும், தன் வீட்டிலே அடைக்கலமாய் வந்த யாவரையும் எரிகோவை விட்டு வெளியே கொண்டு வர முடிந்தது.
நானும் சில நேரங்களில் என்னுடைய வாழ்க்கையில் மதில் சுவர் எழுப்பிக்கொண்டு கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுக்காமல் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் பயம் தான்! எங்கே எதையாவது இழந்து விடுவேனோ என்ற பயம்!
இன்று உனக்கும் பயம் உள்ளது அல்லவா? நான் கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுத்தால் எங்கே என்னுடைய எரிகோ என்கிற சுகமான ஜீவியத்தை இழந்து விடுவேனோ என்ற பயம் ! எங்கே இந்த சுகமான வேலையை இழக்க வேண்டியிருக்குமோ என்ற பயம்! எங்கே இந்த சிற்றின்பத்தை இழக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம்! எங்கே இந்த நண்பர்களை இழக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம்! அப்படித்தானே!
இன்று என்னுடைய ஜெபம் எரிகோ மதில் தகர்ந்து விழுந்தது போல உங்களை சுற்றியுள்ள, உங்களைக் கர்த்தரிடமிருந்து பிரிக்கிற மதில் தகர்ந்து நீங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கேட்கிறவர்களாய் மாறவேண்டும் என்பதே! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்!
உன்னை சுற்றியமைந்துள்ள எரிகோ மதிலைத் தகர்த்து விடு! கர்த்தராகிய இயேசு உனக்குள்ளே வந்து வாசம் செய்ய மதிலுக்கு வெளியே நிற்கிறார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்