யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
இந்த வருடத்தின் நான்காம் மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்!
எங்கள் வீட்டில் கிறிஸ்மஸ் காலத்தில் வைக்கும் ஒரு அழகிய மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் உள்ளது. அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருப்பதால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து பத்திரமாக வைத்தேன். கடந்த வருடம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் செய்தபோது எல்லா இடத்திலும் தேடியாயிற்று ஆனால் என்னுடைய அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் மாத்திரம் கிடைக்கவேயில்லை. நான் அதை ‘பத்திரமாக’ எடுத்து வைத்த இடத்தை மறந்தே விட்டேன். இப்பொழுதெல்லாம் எதையும் வைக்கிற இடத்தை மறந்துவிட்டு தேடுவதே வழக்கமாகி விட்டதால் எதையாவது ‘பத்திரமாக’ எடுத்து வைப்பது என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது! நான் சொல்வது உங்களில் அநேகருடைய அனுபவமாகக்கூட இருக்கும் என்று நினைக்கிறேன்!
இப்பொழுது நாம் இஸ்ரவேல் மக்களின் எரிகோ, ஆயி அனுபவங்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம்! நாம் படித்ததை மறந்துபோகும் முன்னர் சற்றுத் திரும்பி பார்ப்போம். மோசேக்கு பின்னால் கர்த்தர் யோசுவாவை தெரிந்துகொண்டு இஸ்ரவேல் மக்களை நடத்தும் பெரும் பொறுப்பை அவனிடம் கொடுத்தார். யோர்தானைக் கடக்கவும், எரிகோவைத் தகர்த்து வெற்றி பெறவும் கர்த்தர் உதவி செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் யோசுவாவோடுகூட இருந்து வழிநடத்தினார். யோசுவாவும், இஸ்ரவேல் மக்களும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் எரிகோ மதில் தகர்ந்தது.
எரிகோவின் வெற்றிக்கு பின்னர், யோசுவாவின் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று என்று வேதம் கூறுகிறது. அவன் புகழ் பெற்றது எதனால்? அவனுடைய வீரத்தினாலா? இல்லை! கர்த்தர் அவனோடு இருந்ததினால், அவனை படிப்படியாக வழிநடத்தியதால் அவன் கீர்த்தி பெற்றான் என்று பார்க்கிறோம்!
எரிகோவுக்கு அடுத்தபடியாக, ஆயிக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தமானபோது, இஸ்ரவேல் மக்களோ அல்லது யோசுவாவோ கர்த்தரை அணுகியதாக வேதம் கூறவில்லை. பெயரும் புகழும் பெற்றவுடன், யோசுவா கர்த்தரை மறந்து விட்டான் போலும்! கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்காமல், சுயநம்பிக்கையுள்ள சில வீராதிவீரர்கள் ஆயியை வேவுபார்த்துவிட்டு, இது மிக சிறிய நகரம், உள்ளே யாரும் பெரிய பலசாலிகள் இல்லை, ஆதலால் எரிகோவைப் போல நாம் பயப்பட வேண்டியதில்லை. நம்மில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம்பேர் போனால் போதும், ஆயியைக் கைப்பற்றிவிடலாம் என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டான்.
யோசுவாவும்,இஸ்ரவேல் மக்களும், இம்மட்டும் காத்து, கரம்பிடித்து நடத்திய தேவனாகிய கர்த்தரை மறந்தே போய்விட்டனர். என்னைப்போல அவரை எங்கேயோ ’பத்திரமாக’ வைத்துவிட்டு ஆயியை நோக்கி கிளம்பிவிட்டனர்! அவர்கள் கர்த்தரை யுத்தத்தில் முன்வைக்காததால், ஆயியின் மக்கள் முன்னால் முறிந்தோடினர். இந்தத் தோல்வியினால் அவர்களுக்குள் இருந்த நம்பிக்கை தொலைந்தது மட்டும் அல்ல, அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் மேல் மற்ற கானானியக்குடிகள் வைத்திருந்த மதிப்பும் போய்விட்டது!
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நம்மை கரம்பிடித்து நடத்தும் கர்த்தரை மறந்து, அவரை பத்திரமாய் எங்கேயோ வைத்துவிட்டு, ஆயி போன்ற பாவங்களில் தலைக்குப்புற விழும்போது, நம்முடைய நம்பிக்கையை நாம் இழப்பது மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களும், நம்முடைய சமுதாயமும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையை இழக்க நாம் காரணமாகிவிடுகிறோம்.
கீர்த்தி வந்தவுடன் கர்த்தரை ஒரு கணம் மறந்த யோசுவா, ஆயியின் தோல்விக்குப் பின் என்ன செய்தான் பாருங்கள்! தன் திட நம்பிக்கையை இழந்தவனாய், கானானிய குடிகளின் அவலமான பார்வைக்கு உள்ளாகி, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தலையிலே புழுதியை போட்டுக்கொண்டு, கர்த்தரின் சமுகத்துக்கு முன்பாக தரையிலே விழுந்து, மனங்கசந்து அழுதான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் யோசுவாவைப் பார்த்து அவனைக் கடிந்து கொள்ளாமல், அவரை மறந்ததால் வந்த விளைவே இது என்று கண்டிக்காமல், தம்முடைய அன்பின் குரலால் ” எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன!”என்றார் (யோசுவா; 7: 6-10).
என்ன அருமையான வார்த்தைகள்! அன்பே உருவான தகப்பனாய் நம் பரமபிதாவானவர், நாம் அவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ளாமல், நம்முடைய சுயபலத்தை நம்பி யுத்தத்துக்கு போய் முறிந்தோடிய வேளையில், சாத்தான் நம்மை பார்த்து நகைக்கும் வேளையில், தம்முடைய அன்பின் குரலால் என் மகனேஎழுந்திரு! ஏன் இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறாய்! என்று கூறுகிறார்.
உன் வாழ்க்கையில் கர்த்தரை மறந்து எங்கேயோ பத்திரமாக வைத்து விட்டாயா? அதனால் தோல்விகளும், சோதனைகளும் உன்னை சூழ்ந்து கொண்டிருக்கின்றனவா? சாத்தான் உன்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கும்படியாய் நீ பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறாயா? எழுந்திரு! அவரை பத்திரமாய் வைத்த இடத்தை நினைவு கூர்ந்து யோசுவாவைப்போல அவருடைய சமுகத்துக்கு ஓடு! இனி உனக்கு தோல்வியில்லை! வெற்றி நிச்சயம்!
எண்ணிப்பார்! நீ கடந்த காலத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை!
நீ மறந்த தேவனை அவை நினைப்பூட்டும்!
எண்ணிப்பார்! நீ கடந்த காலத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை!
உன் எதிர்காலத்துக்கு அவை நம்பிக்கையூட்டும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com