யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
நாங்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து மியூனிக் வழியாக இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்கு பிரயாணம் பண்ணினோம். ரோம் நகரத்தை நெருங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னர் நான் விமானத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சியை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை! ஆம் நான் பார்த்ததவை உலகப் புகழ் வாய்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர்தான்! அடுக்கடுக்காக பளிங்குச் சங்கிலி போல ஜொலித்தன அந்த மலைகள்! அது பகல் வேளையாக இருந்ததால் சூரிய ஒளிக்கதிர் அந்த பளிங்கு மலைகளை ஊடுருவி சென்றது கண்கொள்ளாக் காட்சியாயிருந்து! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜொலிக்கும் பளிங்கு மலைகளே தென்பட்டன! ரோம் நகருக்கு முன்னால் ஒரு 600 கிமீ தூரமே இருந்ததால் விமானம் மிகவும் உயரமாக பறக்கவில்லை! நாங்கள் கண்குளிர இந்த இயற்கையின் அற்புதத்தைபார்த்து மகிழும்படி மிகவும் தாழ்வாகவே பறந்தது!
இதைப் பற்றி நான் எழுதும்போது, இதை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றியது. இதை வாசிக்கும் உங்களுக்கு நான் அனுபவித்த இன்பத்தை நிச்சயமாக உணர முடியாது அல்லவா? நாம் கண்களால் காண்பவைகளைத்தானே நாம் ரசித்து அனுபவிக்க முடியும் !
இன்றைய வேத பகுதியில் இதைதான் கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார். இன்று நான் உனக்கு கொடுக்கும் வெற்றியை உன் கண்களால் கண்டு களிகூறு என்கிறார்.
இதோ…. ஒப்புக்கொடுத்தேன் என்ற வார்த்தைகளை கவனியுங்கள்! ஏதோ கடந்த கால அற்புதங்களை அவனுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம் இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார்! கண் குளிரப் பார்த்து அனுபவி! என்பதைப்போல் உள்ளது.
இன்று நாம் இரண்டு அருமையான பாடங்களை இந்த யோசுவா 8:1 லிருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.
சில நேரங்களில் நம்மால் எதையும் தெளிவாக பார்க்க முடியாத மனசூழ்நிலையில் இருப்போம். நம் மனக்கண்களை திரை போல ஒன்று மூடிகொண்டு நம்மால் கர்த்தரின் கரம் நம்மை ஆகோர் பள்ளத்தாக்கு வழியாக நடத்துவதை காணமுடியாமல் இருக்கலாம். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து வெற்றிசிறந்ததையும் உணராமல் இருக்கலாம். கர்த்தர் இன்று நம்மிடம் இதோ உன் வெற்றியை உன் கண்களால் பார் என்கிறார். உன் மனத்திரையைக் கிழித்து உன் கண்களால் பார்!
ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற தோல்விகள் நம்மை சூழும்போது, மன சோர்புகள் உறைந்தபனிபோல் நம்மேல் வந்திரங்கும்போது, நாம் தலையைத் தூக்கமுடியாமல் முகங்குப்புறவிழுந்து கிடக்கும்போது கர்த்தர் நம்மைப் பார்த்து, இதோ உன் வெற்றி என் கரத்தில் உள்ளது, எழுந்திரு, உன் வெற்றியைப் பார்! அதை என் கரத்திலிருந்து பெற்றுக் கொள் என்கிறார்.
இதை கர்த்தர் யோசுவாவுக்கு மட்டும் அல்ல, அல்லது எனக்கு மட்டும் அல்ல, உங்கள் ஒவ்வொருவருக்கும் கூறுகிறார்.
கர்த்தராகிய இயேசு, உங்களுக்காக சிலுவையில் பெற்ற வெற்றி என்னும் பரிசை அவருடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன். அவரை நோக்கிப் பாருங்கள்! அவர் உங்களுக்காக வைத்திருக்கிற வெற்றியின் வாழ்க்கைத் தெரியும்!
ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற பாவங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற அவமானங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற சோதனைகள், இன்று கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் வெற்றியுள்ள வாழ்க்கையை மறைத்துப் போடலாம். இதுவரை அனுபவிக்காத அந்த வெற்றியின் வாழ்க்கை இன்று உங்களுடையதாகட்டும்!
இயேசு கிறிஸ்து என்பவர் ஜீவனுள்ள தேவன்! அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம்! அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவார். அவரை விசுவாசிப்பாயானால் வெற்றி நிச்சயம்!
ஆகோரின் பள்ளத்தாக்கு என்பது இன்று உன் வாழ்வில் வறுமை, பெலவீனம், தோல்வி, பாவம், மரணம் என்ற எதுவாக இருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு உனக்கு வெற்றியளிப்பார்!
சூழ்நிலைகள் எதிர் திசையை நோக்கிக் காட்டினாலும்,
வெற்றி என்பது இயலாத ஒரு காரியமாய்த் தோன்றினாலும்
தேவன் நமக்கு கொடுத்த வாக்குகள் நிச்சயமாய் நிறைவேறும்!
இதோ வெற்றி உன் பக்கம்! உன் கண் குளிரப் பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!