யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோஎன் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது.
மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு திரும்பினர். இரண்டு பேர் வெற்றி நம் பக்கம், புறப்படுவோம் என்று கூறிக்கொண்டு திரும்பினர் என்று வேதம் கூறுகிறது.
அந்த சம்பவம் நடந்து நாற்பது வருடங்கள் கடந்து விட்டன! இப்பொழுது கானானுக்குள் பிரவேசித்தாயிற்று! காலேப் இஸ்ரவேல் மக்களை நோக்கி அன்று நடந்ததை திரும்பிப் பார்க்கும்படி அழைக்கிறான்.
காலேப், தன்னோடு கானானுக்குள் வந்த மற்ற பத்து வேவுகாரரும் ஜனத்தின் இருதயங்களைக் அல்லது மனதை கரையப் பண்ணினார்கள் என்கிறான். எபிரேய மொழியாக்கத்தில் கரையப் பண்ணுதல் என்பதற்கு உருகிப் போகப்பண்ணுதல் என்று எழுதப் பட்டுள்ளது.
இதை செய்ய எனக்கு மனதேயில்லை என்ற வாசகத்தைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படியானால் எனக்கு இதை செய்ய விருப்பமோ அல்லது வாஞ்சையோ இல்லை என்றுதானே அர்த்தம். காலேபோடு சென்ற பத்து வேவுகாரரின் வார்த்தைகளால், இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தரால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்குள் பிரவேசிக்க விருப்பமும் இல்லை, வாஞ்சையும் இல்லை!
இவற்றை நினைவுபடுத்தியது மட்டுமல்லாமல், காலேப் தன்னுடைய உள்ளம் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றியது என்றும் கூறுகிறான். காலேபின் உள்ளம் கர்த்தருக்காக பரந்து காணப்பட்டது. உயர்ந்த மதிலும், இராட்சதரும் காணப்பட்டாலும், கர்த்தரால் ஆகக்கூடாதது ஒன்றுமில்லை என்று அவன் தன் உள்ளத்தை திறந்து, மோசேயிடம் மறு செய்தி கொடுக்கிறான். காலேபிடம் தேவனைக்குறித்த குறுகிய மனப்பான்மை காணப்படவில்லை! தேவனாகிய கர்த்தர் மேல் பரந்த அன்பு கொண்டவனாக, அவரை உத்தமமாய் பரந்த உள்ளத்தோடு பின்பற்றியவனாக நாம் காலேபைக் குறித்து பார்க்கிறோம்!
காலேப் என்கிற உலகத் தகப்பனிடம் நாம் காணும் இந்த பரந்த உள்ளம் என்கிற அடையாளம் நம் பரம தகப்பனிடமும் உள்ளது. தம்முடைய அன்பிலும், கிருபையிலும் தயவிலும்,தேவனாகிய கர்த்தர் பரந்த உள்ளம் கொண்டவர். அவருடைய அன்பையும், கிருபையையும் , தயவையும் நாம் அளவிடவே முடியாது.
சென்னையிலேயே வளர்ந்த எனக்கு கடற்கரையும், கடல் காற்றும் எப்பொழுதும் பார்த்து பழகிய ஒன்று! கடற்கரையில் நிற்கும்போது துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தது! பல தடவைகள் நான் சென்னைக்கு உள்ளூர் விமானங்களில் திரும்பும்போது கடலின் மேல் விமானம் ஒளிகாட்டிக்காக தாமதித்து மிகவும் மெதுவாக செல்வதைப் பார்த்திருக்கிறேன். விமானம் கடல் மேல் நிற்பது போலவே இருக்கும்! அந்நேரங்களில் ஜன்னல் வழியே பார்த்தால் எங்கு பார்த்தாலும் தண்ணீராகவேத் தெரியும். ச்ற்று பயமாகக்கூட இருக்கும்! கரையில் நின்று பார்ப்பதைவிட மேலிருந்து பார்க்கும்போது தான் கடலின் பரப்பளவு அளவிட முடியாதது என்று தெரியும். கண்களை அசைக்காமல் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். கர்த்தருடைய கிருபையையும், தயவையும் கடலின் அளவிடமுடியாத பரப்பளவுக்கு ஒப்பிட்டு கூறுவதுதான் மனதுக்கு வரும்.
11 பேதுரு 3:10 கர்த்தர் ….ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்ற வசனம் கர்த்தர் நம் ஒவ்வொருவர் மேலும் காட்டும் பரந்த அன்பையும், கிருபையையும் வெளிப்படுத்துகிறது அல்லவா?
அளவிடமுடியாத கர்த்தருடைய அன்பை அனுபவித்திருக்கிறாயா? அவருடைய சமுகத்துக்கு வா! அன்பு என்னும் அலைகலள் சூழ்ந்துகொள்ளும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்