நியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.”
இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மை அற்புதமாக காத்து வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்!
என் கணவரும் நானும் யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த போது, சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு செல்வதுண்டு. அவ்விதமாக நாங்கள் சென்ற போது மாட்டு வண்டிகளில் கூட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.
ஒரு முறை அவ்வாறு சென்றபோது நடந்த சம்பவம் என்னால் மறக்கவே முடியாது. ரயில் நிலையத்துக்கு போவதற்காக மாட்டுவண்டியில் ஏறினோம். ஒரு உயரமான காட்டு வழியாக எங்கள் வண்டி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை இழுத்த மாடுகள் இரண்டும் ஒரு இறக்கத்தில் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் பயந்தே போய் விட்டோம். ஒரு ஐந்து நிமிடம் ஓடி, அவை அங்குள்ள கிணற்றண்டையில் நின்றவுடன் தான் எனக்கு மூச்சே வந்தது. அதன் பின்னர்தான் அந்த மாடுகள் அவ்வாறு ஓடியதின் காரணத்தை அறிந்தோம். அந்தக் கிணற்றண்டைதான் தினமும் மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள் போலும்! அந்த இடம் வந்தவுடன் பழக்க தோஷத்தில் அவை கிணற்றண்டை இழுத்துக்கொண்டு போய்விட்டன!
இவ்வாறு பழக்கதோஷத்தில் கீழே இழுத்து சென்ற மாடுகள் போல , நாமும் சில வேளைகளில் நம்முடைய பழக்க வழக்கங்களில் கீழ்நோக்கி செல்லுகிறோம். நாம் எடுத்து வைக்கும் ஒரு தவறான அடி மற்றொரு தவறான அடிக்குள் நம்மை நடத்துகிறது. ஒரு அடிதானே வைக்கிறேன், நான் ஒன்றும் படுகுழிக்குள் விழுந்துவிட மாட்டேன் என்று நாம் தவறாக எடை போட்டுக்கொண்டிருக்கும்போதே, நம்மை அது படுகுழிக்குள் இழுத்து செல்கிறது.
நாம் நேற்று பார்த்தவிதமாக கிதியோனின் வாழ்க்கை சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கர்த்தருக்கு கீழ்ப்படிந்து 300 பேர் கொண்ட படையைக் கொண்டு, மீதியானியரை முறியடித்தான். வெற்றியின் கர்வம் அவன் தலையை எட்டவில்லை. அவனைத் தலைவனாக்கும்படி இஸ்ரவேல் மக்கள் அணுகியபோது மறுதலித்தான்.
இவ்வளவு நேரம் சரியான பாதையில் சென்றவன், ஆரோனின் குடும்பதுக்கு கர்த்தர் அளித்த ஏபோத்தை செய்து அதை தன் ஊரில் வைத்த முதல் அடியில் அவன் சறுக்கினான். அதிலிருந்து அவன் வாழ்க்கை அடிமட்டத்தை நோக்கிதான் சென்றது.
அவன் எடுத்த அடுத்த தவறான அடி பெண்கள் விஷயம் என்று நினைக்கிறேன். அவன் கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை மதித்ததாகத் தெரியவில்லை. ஆதியாகமம் 2: 24 ல் கர்த்தர் ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு பல பெண்களோடு இசைந்திருப்பான் என்றா கூறினார்? கிதியோன் பல பெண்களை மணந்ததை சரி என்று வேதம் எங்குமே கூறவில்லை. கிதியோன் தன் சொந்த இஷ்டமாக வாழ ஆரம்பித்தான்.
சரித்திரத்தில், கிதியோன் வாழ்ந்த சமயத்தில் மட்டுமல்ல, இன்றுவரை, உலகத்தில் அதிகாரமும், சம்பத்தும் உள்ள பெரும்புள்ளிகள், பல பெண்களோடு வாழ்வது வழக்கம். கிதியோன் ஒருவேளை யோசித்திருக்கலாம், நானும் பெரும்புள்ளியாகி விட்டேன் , நானும் பெரும்புள்ளி போல நடந்து கொள்ளலாம் என்று. அவன் சென்று கொண்டிருந்த நேரான பாதையிலிருந்து அவன் கண்கள் விலகியதும், அடிக்கு மேல் அடி வைத்து அவன் கீழான பாதையில் வேகமாக ஓடினான்.
ஒரு தவறான அடி அடுத்த தவறுக்கு அஸ்திபாரம்! நாம் தவறு செய்ய ஆரம்பித்த பின்னர், நாம் செய்வது தவறு என்ற உணர்ச்சியே மறைந்து விடுகிறது.
இன்று நம்முடைய பழக்க வழக்கங்கள் நம்மை எங்கு கொண்டு செல்கின்றன? செவ்வையான பாதையின் மேலிருக்கும் கண்களை விலக்குவாயானால், கீழ் நோக்கி சென்று விடுவாய்! ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்