நியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”.
கடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம்.
மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம்.
கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள். நியாதிபதிகள் 4 ம் அதிகாரத்தில் கர்த்தர் தெபோராள் என்ற தீர்க்கதரிசியை நியாதிபதியாக எழுப்பினார். இந்தப் பெண் தீர்க்கதரிசியின் தலைமை இஸ்ரவேல் மக்களை ஆவிக்குரிய வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றது.
ஆனால் தெபோராள் மரித்தபின்பு இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் வழிதவறிப்போனார்கள். கர்த்தர் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து போனார்கள்.
நாம் கிதியோனைப்பற்றி வாசிக்க ஆரம்பித்தபோது, இஸ்ரவேல் மக்கள் மீதியானியருக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து வந்தனர். கர்த்தர் தொடை நடுங்கியான கிதியோனை பராக்கிரமசாலியாக எழுப்பி இஸ்ரவேல் மக்களை மீதியானியரிடமிருந்து இரட்சித்தார். ஆனால் அந்த வெற்றிக்கு பின்னர் கிதியோன் தன்னை சுற்றியிருந்த புறஜாதியினரைப் போல பல பெண்களுடனும், மறுமனையாட்டியுடனும் வாழ ஆரம்பித்தான் என்று பார்த்தோம்.
நான் இன்று நியாதிபதிகளின் புத்தகத்தை முடிக்கவில்லை. நாம் பாதி புத்தகம் தான் வந்திருக்கிறோம். ஆனால் இங்கு வருமுன்னரெ இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு காற்றில் அசைந்தாடும் நாணலைப் போல இருந்தது என்று பார்க்கிறோம்.
இஸ்ரவேல் மக்கள் ‘ நான் என் வழியில் தான் நடப்பேன் ‘ என்று அடம் பிடிக்கும் தலைமுறையினராக இருந்ததைப் பார்க்கிறோம்.
இவர்களைப் பற்றி படிக்கும்போது என்னுடன் படித்த சில தோழிகள்தான் நினைவுக்கு வருகின்றனர். நான் நாசரேத்து என்ற ஊரில் உள்ள செயிண்ட் ஜான்’ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். என் பெற்றோர் சென்னையில் வாழ்ந்ததால் நான் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் இரவு நாங்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரெஎன்று ஒருத்தி பாம்பு என்று கத்தினாள். அவ்வளவுதான் அத்தனை பேரும் கத்தி, கூக்குரலிட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அட்டகாசம் செய்துவிட்டனர். அவர்கள் கூக்குரல் அந்த பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த எங்கள் தலைமை ஆசிரியை ஓடி வர செய்துவிட்டது. உண்மை என்னவென்றால் அங்கே பாம்பே இல்லை, பாம்பு என்று கத்தியவளும் உண்மையில் எந்தப் பாம்பைப் பார்க்கவும் இல்லை!
இப்படித்தான் இஸ்ரவேல் மக்களும் வாழ்ந்தனர். ஒருவன் போகிற போக்கிலே அனைவரும் போய்க்கொண்டிருந்தனர். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கிறது! நாம் கர்த்தரை நம் வாழ்க்கையின் தலைவராகக் கொண்டிருந்தால் அவர் போகிற வழியில் செல்வோம், ஆனால் சாத்தானை நம் தலைவனாகக் கொண்டிருந்தால் அவன் வழியில் தானே செல்வோம்?
கர்த்தரை தலைவராகக் கொள்ளாத இந்த மக்கள் தங்களை சேவிக்க, தங்களுடைய சுய இச்சைகளை சேவிக்க அவ்வப்பொழுது முடிவு செய்தனர். கர்த்தருக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டு உலகத்துக்கு செவிசாய்க்கும் பொழுது கூக்குரலும் அழுகையும் தான் உண்டாகும்! நியாதிபதிகளின் புத்தகத்தில் பார்க்கிற இந்த சந்ததியார், இன்றைக்கு நாம் பார்க்கிற சந்ததியார் போல இருக்கின்றனர் அல்லவா?
கர்த்தரை தலைவராகக் கொள்ளாத உன் வாழ்க்கையும் கூட மனக் குழப்பத்துடனும், கண்ணீருடனும் தான் முடியும். என் வழி தனி வழி என்று வாழாதே!
கர்த்தரின் வழியில் செல்லாத நீ சரியான நேரத்தில் மணி அடிக்காத ஒரு கடிகாரம் போல! உன்னைப் பொருத்த அளவில் நீ அடிப்பது சரியான மணி என்று எண்ணிக் கொள்ளலாம்! ஆனால் நீ தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து மனம் திரும்பு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்