ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்.
அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்!
அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல!
அவள்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு!
அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல!
அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தை சார்ந்தவள்.
நகோமியின் அன்பு, இரக்க குணம் இவை ஏற்றுக்கொள்ள முடியாத அவளுடைய மோவாபிய மருமக்களை அவள் ஏற்றுக்கொள்ள செய்து அவர்களைக் கர்த்தரண்டைக் கொண்டு வந்தது என்று நாம் பார்த்தோம்.
இங்கு மருமகளாகிய ரூத் நகோமியிடம் தானும் கர்த்தருடைய ஜனம் என்று அழைக்கப்பட்ட அந்த வட்டத்துக்குள் பிரவேசிக்கவேண்டும் என்று வேண்டுதல் செய்வதைப் பார்க்கிறோம். நான் உம்முடைய ஜனத்தில் ஒருத்தியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அவள் மனதுருக வேண்டுகிறாள்.
நாம் ராகாபைப் பற்றிப் படித்தது ஞாபகம் இருக்குமானால், கர்த்தர் தம்முடைய மிகுந்த தயவால் ராகாபையும் அவள் வீட்டுக்குள் அடைக்கலமாய் வந்த அனைவரையும் இரட்சித்தபின்னர், இஸ்ரவேலர் அவர்கள் மேல் அதே இரக்கத்தைக் காட்டாமல், அவர்கள் புறஜாதியினர் என்று அவர்களைப் பாளையத்துக்கு புறம்பே தங்க வைத்ததும் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.
கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள் ராகாபை மட்டுமல்ல, அடிக்கடி நம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கூடத் தங்கள் வட்டத்துக்கு வெளியே அனுப்பிவிட்டனர். ஆனால் தேவனாகிய கர்த்தர் ராகாபைத் தன் மந்தையில் சேர்த்து, அவளைத் தன் குமாரன் பிறந்த குடும்பப் பட்டியலிலும் இடம் பெற செய்தார்.
ரூத், நகோமியைப் பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் எண்று வேண்டியதைப் படிக்கும் போது என் மனதில் நான் என்னுடைய சிறு புத்தியினால் நான் எத்தனைப்பேரை இவர்கள் நம்முடையவர்கள் அல்ல என்று நியாயம் தீர்த்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன்.
நம்முடைய கணிப்பில் ‘உண்மையான திருச்சபை’ என்று நினைக்கிற சபையை சேர்ந்தவர்களைத்தானே நாம் மந்தையை சேர்ந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறோம்! நம்முடைய சபையில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் மட்டும் தானே நாம் போடும் வட்டத்துக்குள் இருக்க முடிகிறது! நம்முடைய சபையில் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் கூட நம்முடைய மந்தையின் ஆடாக இருக்க முடியாது அல்லவா? நம்முடைய சபை மட்டும்தானே இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள்? நம்முடைய சபை மட்டும்தானே பரலோகவாசிகள்? நாம் செய்கிற ஊழியத்தை விட மற்றவர்கள் செய்வது அற்பமாய்த் தோன்றுவதில்லையா? நான் யாரையும் குறை சொல்லவில்லை! ஆனால் சற்று நிதானித்து சிந்தியுங்கள்!
1 யோவான் : 3: 1 ” நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்”
தேவன் நம்மேல் இவ்வளவு பெரிய அன்பைக் காண்பித்து நம்மை அவருடைய பிள்ளைகள் என்ற தகுதியைக் கொடுத்திருக்கும்போது நாம் மட்டும் ஏன் இன்னும் சிறு பிள்ளைத்தனமாக சபை, ஜாதி என்று கிறிஸ்தவர்களுக்குள்ளேயே பாகுபாடு வகுக்கிறோம் என்று புரியவில்லை!
இந்த மகா பெரிய தேவன் தம்முடைய அளவில்லாத அன்பினால் யாரையெல்லாம் தம்முடைய பிள்ளைகளாக்க வேண்டும் என்று தன் ஒரே பேரான குமாரன் இயேசுவை இந்த உலகத்துக்கு அனுப்பினாரோ அவர்களையெல்லாம் ஜாதி , மத பேதமின்றி மட்டுமல்லாமல் சபை பேதமின்றியும் நேசிக்க எனக்கு பெலன் தாரும் என்பதே இன்று என்னுடைய ஜெபம் !
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்