ரூத்: 1: 16 “… உம்முடைய தேவன் என்னுடைய தேவன்”
ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக,
1. உன் செல் போன் எங்கே இருக்கிறது? கைப்பையில்
2. உனக்குப் பிடித்த கலர் எது? பிங்க்
3. உனக்குப் பிடித்த பெட் எது? நாயா அல்லது பூனையா? நாய்
இப்படி பலரால் ஒரேமாதிரி பதிலளிக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று நீ யாருக்கு மிகவும் பயப்படுவாய்? என்ற கேள்வி – அதற்கு அநேகர் கொடுத்த பதில் என்னை சற்று ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் செய்தது. ஏனெனில் அதற்கு அநேகரால் கொடுக்கப்பட்ட விடை கடவுள் என்பது!
அநேகருடைய கண்களுக்கு பயங்கரவாதியாகத் தெரியும் கடவுள் எனக்கோ மிகவும் அன்பான, கிருபையுள்ள, இரக்கமுள்ள தேவன்!
இந்த பூமியில் என்னை அதிகமாக நேசிப்பது என்னை உருவாக்கிய தேவனாகிய கர்த்தர் தான் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் கடவுளை , இந்த வினா விடைப் பகுதி எல்லோரும் பயப்படும் ஒருவராகக் காட்டியதால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது.
நான் கூட தேவனை என் வாழ்க்கையில் என் தகப்பனாக அறியுமுன், கடவுள் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயப்படுவேன். காரணம் , என்னுடைய அம்மா என்னிடம் நான் பொய் சொன்னால் கடவுள் வாயில் சூடு போட்டு விடுவார், திருடினால் கடவுள் கையில் சூடு போட்டு விடுவார் என்று சிறு வயதில் சொன்னது மனதிலேயே தங்கி விட்டதால் தான்.
இன்று மக்கள் கடவுள் என்றால் பயப்படுவதற்கு காரணம் ,கடவுளுடைய அன்பையும், இரக்கத்தையும் அவர்களுக்கு யாரும் சரிவர வெளிப்படுத்தாதலால்தான் என்று நான் நினைக்கிறேன். நம்மை நேசிக்கிற கடவுளை, யாரும் நெருங்க முடியாத ஒரு மகா சக்தியாக நினைத்து பயப்படுகின்றனர்.
இங்கு ரூத் நகோமியிடம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஏனெனில் நகோமி ரூத்துக்கு கடவுளைப்பற்றி பிரசங்கம் பண்ணவில்லை, ஆனால் தன் வாழ்க்கையின் மூலம் கடவுளைப் பிரதிபலித்திருந்தாள். நகோமியின் வாழ்க்கையைப் பார்த்த ஒர்பாளுக்கும், ரூத்துக்கும், இஸ்ரவேலின் தேவன் எவ்வளவு அன்பும், இரக்கமும் உள்ள தேவன் என்று நன்கு தெரியும்.
அதனால் தான் ரூத் நகோமியிடம் உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்று கர்த்தரின் மந்தைக்குள் வர ஆசை தோடு, ஒரு கணம் கூட தாமதிக்காமல், உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று தேவனாகியக் கர்த்தரைத் தன் மேய்ப்பனாகவும் தெரிந்து கொண்டாள்.
சில நேரங்களில் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற கொடியை உயரப்பிடித்துக் கொண்டு, நம்முடைய தினசரி வாழ்க்கையில் நடந்து கொள்ளும் விதமும், நம்மை சுற்றியுள்ளவர்களை நடத்தும் விதமும், தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருவதில்லை. அதனால் ராகாபைப் போலவும், ரூத்தைப் போலவும், மந்தைக்கு வெளியே இருந்து நம்மை கவனிப்பவர்கள் கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பார்த்து சோர்ந்து போய் விடுகின்றனர், நம்முடைய கடவுள் மேல் பயம் வந்து விடுகிறது.
நகோமியின் சாட்சி எப்படிப்பட்ட சாட்சி என்று பாருங்கள்! அவளுடைய அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்க்கை இந்த பூமியில் பரலோகத் தகப்பனை மகிமை படுத்தியது மாத்திரம் அல்லாமல் அவளுடைய மருமகளாகிய ரூத்தின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அவள் உம்முடைய தேவன் எனக்கும் வேண்டும் என்றாள். அவள் தன் மாமியாருடன் வாழ்ந்த ஐந்தோ அல்லது பத்து வருடங்களில் நகோமியின் வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய அன்பையும், இரக்கத்தையும், மன்னிக்கும் குணத்தையும் கண்கூடாகப் பார்த்ததால் அவளுக்கு அந்த தேவனாகிய கர்த்தர் மேல் பயமில்லை, அவரை நெருங்க, அவரைத் தன் சொந்த இரட்சகராக கொள்ள ஆவலே ஏற்பட்டது!
நீ ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசுவை உன் வாழ்க்கை எப்படி வெளிப்படுத்துகிறது?
உன்னைப் பார்ப்பவர்கள் கர்த்தருடைய தயவையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் உன்னிடம் பார்க்க முடிகிறதா?
உன் சாட்சியைப் பார்த்து இயேசுவை அறியாதவர்கள் உன்னுடைய தேவன் மேல் பயம் கொண்டு விலகிப் போகிறார்களா? அல்லது உம்முடைய தேவன் எனக்கும் வேண்டும் என்று விரும்புகின்றனரா? சிந்தித்துப் பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்