ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”.
அன்பின் சகோதர சகோதரிகளே இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்! நாம் இன்று உயிரோடிருப்பதும், நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை அல்லவா? நன்றியோடு அவரை துதிப்போம்!
கடந்த மாதம் நாம் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து அவள் விசுவாசத்தை அழித்ததால் அவள் பெத்லெகேமில் அவளை வரவேற்க வந்த உறவினரிடம் தன்னை நகோமி என்று அழைக்காமல் மாரா என்று அழைக்கும்படி கூறினாள் என்று பார்த்தோம்.
நகோமியின் வாழ்க்கையை நாம் படிக்கும்போது அவளுடைய குடும்பம் கர்த்தருடைய அழைப்புக்கு இணங்கி மோவாபுக்கு செல்லவில்லை, அவளுடைய கணவன் தன் குடும்பத்தை பஞ்சத்திலிருந்து தப்ப வைக்க சுயமாய் எடுத்த முடிவே அது என்று அறிந்தோம். இதே காரணத்துக்காக கானானைவிட்டு எகிப்துக்குள் சென்ற ஆபிரகாம் குடும்பத்தினரையும் நாம் அறிவோம். இந்த இரண்டு குடும்பங்களுமே தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகியதால், அவர்களுடைய உடனடி தேவை சந்திக்கப்பட்டாலும், அதன் விளைவை நீண்ட நாள் அனுபவிக்க வேண்டியிருந்தது.
ஆனாலும் கர்த்தர் அவர்களை கைவிடவில்லை! அவர்களுடைய வாழ்வில் மறைமுகமாக கிரியை செய்து கொண்டிருந்தார்.
மோவாபைவிட்டு பெத்லெகேமுக்கு வந்த பின்னரும், நகோமியாலும், ரூத்தாலும் ஒளியைக் காணமுடியவில்லை. அதை அவளுடைய கசப்பான வார்த்தைகளே வெளிப்படுத்திற்று. ஆனால் தேவனுடைய சித்தம் அல்லாத மோவாபை விட்டு, தேவனுடைய சித்தமான பெத்லெகேமுக்குள் அவர்கள் நுழைந்தவுடன் அவள் கண்களுக்கு எந்த மாற்றமுமே தெரியவில்லை. அவளுடைய நீண்டகாலத் துயரம் அவளைத் தொடருவதைப் போலத்தான் இருந்தது.
ஆனால் இன்றைய வசனம் கூறுகிறது அவர்கள் வாற்கோதுமை அறுவடை செய்யும் காலத்தில் வந்தனர் என்று. நகோமி தன்னுடைய வாழ்க்கையில் இருளையே பார்த்துக்கொண்டிருந்தபோது தேவனாகிய கர்த்தர் அவளுக்காக யாவற்றையும் செய்து முடித்துக்கொண்டிருந்தார். வாற்கோதுமையின் அறுவடை காலத்தில் அவள் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேவனாகிய கர்த்தர் விதைத்து, உரமிட்டு, அறுவடைக்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்.
என்னுடைய சிறு வயதில் முதன்முறை சென்னையிலிருந்து, மும்பைக்கு ரயிலில் பயணம் செய்த போது நீண்ட இருளான குகை ஒன்றுக்குள் ரயில் சென்றபோது , எங்கும் ஒரே இருள் காணப்பட்டவுடன், நான் பயத்தால் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். நம்மில் பலர் , இன்று நீண்ட குகை போன்ற துன்பங்களின் வழியாய் நடந்து கொண்டிருக்கலாம். எங்குமே இருள், என் வாழ்வில் ஒளியே வராது போலிருக்கிறது என்று மனம் சோர்ந்து போய், பயத்தால் கண்களை மூடிக்கொண்டிருக்கலாம்.
பயப்படாதே! கர்த்தர் உன் இருண்ட வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை கர்த்தரின் கிரியை இன்று நமக்குக் கண்கூடாகத் தெரியாமல் இருக்கலாம், ஆதலால் கர்த்தர் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது.
கர்த்தர் உனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார்! வெகுசீக்கிரம் நகோமியின் செவிகளில் விழுந்த அறுவடையின் சத்தம் உன் காதுகளிலும் கேட்கும்!
நாளைய தினத்திலிருந்து சில வாரங்கள் நாம் 2, 3 அதிகாரங்களை படிக்கப் போகிறோம். சகோதரி கோரி டென் பூம் கூறியது போல, கர்த்தருடைய சித்தத்துக்குள் அடங்கியிருப்பதே நமக்கு பாதுகாப்பு என்ற உண்மையை நகோமியின் வாழ்க்கையும், ரூத்தின் வாழ்க்கையும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. இவை நம்முடைய வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மையும் கூட!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்