பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து நன்றியறிதலோடு கொடுப்பது என்று.
பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் இருந்துவிட்டதால், ஊழியத்துக்குக் கொடுப்பவர்களின் எல்லா வகையினரும் எனக்குத் தெரியும். ஆனால் போவாஸைப் போல யாரையுமே இதுவரை நான் பார்த்ததேயில்லை. அரிக்கட்டுகளின் நடுவே இருக்கும் நல்ல வாற்கோதுமையை அந்தப் பெண் பொறுக்கிக்கொள்ளட்டும் என்ற குணம் யாருக்கு வரும்?
இன்று நாம் போவாஸுடைய குணநலத்திலிருந்து நம்முடைய பரமபிதாவானாவர் நாம் அவருடைய செட்டைகளின் கீழ் வரும்போது நம்மை ஏற்றுக்கொண்டு நடத்தும் குணத்தின் பிரதிபலிப்பைப் பற்றி பார்க்கலாம். அவர் தம்முடைய இரக்கத்தினாலும், கிருபையாலும் ரூத்தையும் நகோமியையும், பெத்லெகேமிலே வாற்கோதுமை அறுவடை செய்யும் காலத்தில் வரவைத்து, அவர்களைப் போஷித்துக் காப்பாற்ற மறைமுகமாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தாராளமான பரிசுகளையும் வழங்கினார்.
இன்றைய வேதாகமப் பகுதியில் போவாஸ் தன்னுடைய ஊழியரிடம் அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்,என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
ஒரு நிமிடம்! அரிக்கட்டுகள் அடுக்கி வைத்துள்ள வரப்பை கற்பனைப் பண்ணிப் பார்ப்போம். அந்த வரப்பின் ஓரத்தில் சிந்தியுள்ளவைகளைப் பொறுக்க அநேக ஏழைகள் நின்று கொண்டிருக்கும்போது, போவாஸ், ரூத்தை அரிக்கட்டுகளின் நடுவே அல்லது வயல் வரப்பின் நடுவே வந்து கோதுமையைப் பொறுக்கும்படி அனுமதிக்கிறான். ரூத் போவாஸுடைய, அல்லது எஜமானுடைய சுதந்தரத்துக்குள்ளே வரும்படியாக அனுமதிக்கப்பட்டாள். மோவாப் தேசத்திலிருந்து இஸ்ரவேலுக்குள் வந்த ரூத்துக்கு இந்த அழைப்பு கொடுக்கப்பட்டது. நமக்கு நன்கு ஞாபகம் இருக்குமானால் இந்த மோவாபியரை தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் பாளையத்துக்குள் நுழையவே அனுமதி கொடுக்காமலிருந்தது நமக்குத் தெரியும்.
அதுமட்டுமல்ல, போவாஸ் அவளை ஈனம் பண்ண வேண்டாம் என்று கூறுவதையும் பார்க்கிறோம். ஈனம் என்ற வார்த்தைக்கு அவளை வெட்கமடைய செய்ய வேண்டாம், அவள் நாணிப்போக வேண்டாம் என்று அர்த்தம். போவாஸ் அவளுக்கு செய்யும் உதவியைப் பார்த்து அவள் தன்னுடைய தாழ்வான நிலையை நினைத்து வெட்கப்பட்டுப் போகக் கூடாது என்றுதான் இந்தக் கட்டளையைக் கொடுத்தான்.
போவாஸ் அவளுக்கு உதவி செய்தது அவனுடைய தாராள மனதால்தானேயொழிய, அவளுடைய தாழ்வு நிலையை சுட்டிக்காண்பிப்பதற்காக அல்ல.
என்ன அருமையான கருத்து! நம்முடைய தேவனாகிய கர்த்தரும் தகுதியில்லாத நம்மை இவ்விதமாகத்தான் தம்முடை கிருபையினால் நிரப்புகிறார்.
போவாஸ் வரப்புக்கு வெளியே நின்ற ரூத்தை தன்னுடைய சுதந்தரத்துக்குள்ளே வரும்படி அழைத்தது போல கர்த்தர் நம்மையும் அழைத்து தம்முடைய சுதந்தரத்திலே பங்கு கொடுக்கிறார்.
நாம் அவருக்குத் தருணம் கொடுப்போமானால் அவருடைய தாராளத்திலிருந்து நம்மை முழுவதுமாக நிரப்புவார். நாம் பூரணராய் இந்த பூமியில் வாழ நமக்கு கிருபை அளிப்பார்!
தருணம் கொடுக்கத் தாமதிக்காதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்