சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு தனக்கு ரூத்தைக் குறித்து இருந்த நோக்கத்தை வெளிப்படுத்தியபோது அவனுக்கு முன்பு இருந்த தடைகள் அனைத்தும் அகன்று போயின. தன்னைவிட நெருங்கிய சுதந்தரவாளியிடம் அவன், எலிமெலேக்கின் சொத்துகளை மீட்பது என்பதில் அவனுடைய மருமகள் ரூத்தை ஏற்றுக்கொள்வதும் அடங்கும் என்றதும் அவன் அது தனக்கு வேண்டாம் என்று உடனே முடிவு எடுத்து விட்டான்.
ரூத் 4: 13 ல் போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான், அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது அவள் கர்ப்பந்தரித்து ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம் பண்ணினார் என்று வாசிக்கிறோம்.
அதற்கு அடுத்த வசனத்தில் பெத்லெகேமின் பெண்கள், கர்த்தரை ஸ்தோத்தரித்தனர் என்று பார்க்கிறோம். அந்தக் குழந்தை நகோமிக்கு செய்யக்கூடிய இர்ண்டு காரியங்களுக்காக அவர்கள் ஜெபித்தனர்.
1. ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவன்.
2. முதிர் வயதிலே ஆதரிக்கிறவன்.
நகோமி பெத்லெகேமுக்கு வந்தபோது என்னை மாரா என்று அழையுங்கள் என்று தன்னுடைய நிலையைக் குறித்து கண்ணீர் வடித்தாள். ஆனால் கர்த்தர் அவளுடைய ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனையும், அவளை முதிர் வயதிலே ஆதரிக்கிறவனையும் அங்கே ஆயத்தம் பண்ணப் போவது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு ஒரு புதிய ஜீவனை கர்த்தர் ஆயத்தம் பண்ணினார்.
அவள் அந்த ஊருக்கு வந்தபோது அவளுக்கு சந்தோஷம், ஆறுதல், நம்பிக்கை எதுவுமே இல்லை! ஆனால் பரம பிதாவானவர் அவள் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனை அளித்தார்!
பரம பிதாவானவர் நம்முடைய ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிற இயேசு என்னும் மீட்பரை நமக்காக அளித்திருக்கிறார். அல்லேலூயா! அவர் நமக்கு புதிய ஜீவனை அளிக்கிறார். நம்பிக்கையில்லாத நமக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கிறார்!
அதுமட்டுமல்ல நம்முடைய முதிர் வயதில் நம்மை ஆதரிப்பவரும் அவரே.
நாம் தடுமாறும் வயது வரும் போது, நாம் பெலனற்று போகும்போது, நாம் உலகத்தாரால் ஒதுக்கப்படும்போது நம்முடன் கடைசிவரைஇருப்பவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! அவர் நம்மைத் தாங்குவார், தூக்கி சுமப்பார்.
கர்த்தராகிய இயேசுவை விசுவாசி! அவரே உன் முதிர் வயதில் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவர்!உன்னை ஆதரிப்பவர்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்