ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.
சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும், அனுபவம் மிகுந்தவரும் அல்ல. அவன் ஒரு இளம் வயதுள்ள, அழகிய வாலிபன்! அவன் முடிசூடப்பட்டவுடனே அவனை நோக்கி உனக்கு என்ன வேண்டும் என்று என்னிடத்திலெ கேள் என்று கர்த்தர் அவனிடம் கேட்கிறார்.
நாமெல்லாரும் வியக்கும் வகையில் சாலொமோன் கர்த்தரை நோக்கி, உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும் என்கிறான்.
சாலோமோன் தனக்கு இருந்த எல்லா விருப்பங்களுக்கும் மேலாக ஞானமுள்ள இருதயத்தையே தேவனாகிய கர்த்தரிடத்தில் வேண்டினான்!
ஞானமுள்ள இருதயம் உள்ளவர்கள், தானே எல்லாரையும் அல்லது எல்லாவற்றையும் அடக்கி ஆள வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். வீண் பெருமையையும், சுய புகழ்சியையும் நாட மாட்டார்கள், கோபம் அவர்கள் கண்களை மூடாது, வார்த்தைகளால் மயங்க மாட்டார்கள். அதற்கு மாறாக, பொறுமையோடும், தாழ்மையோடும், சாந்தத்தோடும், கரிசனையோடும், மனிதநேயம் உள்ளவர்களுமாய் வாழ்வார்கள் என்று யாரோ கூறியுள்ளார்கள்.
நகோமியின் வாழ்க்கையைப் பற்றி நான் படிக்கும்போது கர்த்தர் ஞானமுள்ள பெண்களையும் நமக்கு உதாரணமாகக் கொடுத்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.
இனி என்ன நடக்குமோ என்று அலைபாய்ந்து கொண்டிருந்த ரூத்தை தன்னுடைய ஞானமுள்ள வார்த்தைகளால் பொறுமையோடு இருக்க சொல்கிறாள்.
இந்த ஞானம் அவளுக்கு எப்படி வந்தது? ஒரு இளம் தாயாகவும், இளம் விதவையாகவும் அவள் வாழ்வில் கடினமானப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தாள். புறஜாதிப் பெண்கள் அவள் குடும்பத்தில் மருமகளாக வந்தபோது, அவர்களை வெறுத்து ஒதுக்காமல் அவர்களிடம் அன்புடனும், பண்புடனும் நடந்து கொண்டாள். கர்த்தருடைய கண்களால் நகோமி அவர்களை நோக்கி, அவர்களுடைய குடும்ப பின்னணிக்கும் பினனால் மறைந்து கிடந்த அழகைப் பார்த்தாள்.அவளுடைய ஞானமுள்ள இருதயம் அவளுக்கு முன்னால் இருந்த திரையை விலக்கியதால், அவள் மோவாபை விட்டு பெத்லெகேமை நோக்கிப் பிரயாணப்பட தயங்கவேயில்லை..
தேவனாகிய கர்த்தர் அவள் வாழ்வில் கற்றுக்கொண்டப் பாடங்களின் மூலம் அவளை ஒரு ஞானமுள்ளவளாக, மற்றவர்களை வழிநடத்துபவளாக மாற்றினார். அவளுடைய ஞானத்தால் அவள் ரூத்தை கர்த்தருடைய வழிநடத்துதலுக்குள் கொண்டு செல்ல முடிந்தது. அனுபவங்கள் கற்றுத் தந்த விவேகம் ஒரு நல்ல தாயாக அவளை மாற்றியது. இன்று போவாஸின் வயல்வெளியிலிருந்து திரும்பின ரூத்தை அமைதியாய் காத்திருக்க சொல்லவும் அது அவளுக்கு உதவியது.
இன்று நம்முடைய பிள்ளைகளை செம்மையான பாதையில் வழிநடத்தும் ஞானமுள்ள இருதயம் நம்மிடத்தில் உள்ளதா? பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களில் பொறுமையோடு காத்திருக்க கற்றுக் கொடுக்கிறோமா? குடும்ப பிரச்சனைகளை பொறுமையோடு கையாளும் பக்குவம் நமக்கு உண்டா? கர்த்தருடைய சித்தத்தை அறிய பொறுமையுடன் காத்திருக்கும் பெலன் நம்மிடம் உண்டா? அதை நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்திருக்கிறோமா?
இதை எழுதும் போது நகோமியைப் போல பொறுமையாக அமர்ந்திருந்து நீர் எனக்காக கிரியை செய்வதை அறிந்து கொள்ளும் ஞானம் எனக்கு வேண்டும் ஆண்டவரே என்று நான் ஜெபித்தேன்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்