ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.”
நாம் ரூத்தின் புத்தகத்தை இன்றோடு முடிக்கப் போகிறோம்! கடந்த முறை பெத்லெகேமுக்கு சென்றபோது மேய்ப்பர்கள் மந்தையைக் காத்த இடம் என்ற ஒரு பரந்த வெளிக்கு சென்றோம். அங்கு நடந்து கொண்டிருந்த போது அது ஒருகாலத்தில் போவாஸ், ரூத்துடைய வயல்வெளியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். இந்தமுறை ரூத்தின் புத்தகம் எழுதும் போது அந்த வயல்வெளி என் மனக்கண்களில் தோன்றியது!
வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! நான் சிறுமியாக இருந்த போது ஒருநாள் காலை அழகிய வானவில் ஒன்று வானத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலையைத் தொட்டதுபோல வந்தது. அதுவரை நான் வானவில்லைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக வானவில்லைப் பார்த்த என் கண்கள் மூடவே இல்லை. அம்மாவிடம் ஓடிப்போய் அது என்ன என்று கேட்டேன். அது கடவுள் மனுஷராகிய நம்மோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளம் என்றார்கள். அந்த சமயத்தில் உடன்படிக்கை என்றால் எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும், கடவுள் நமக்கு சொன்னதை செய்வார் , அவர் மனம்மாற மாட்டார் என்பதற்கு அது அடையாளம் என்று புரிந்து கொண்டேன். அந்த வானவில் மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்!
இது என்னுடைய சிறுவயதிலே அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த பல காரியங்களில் ஒன்று. இது என் மனதில் அழியாமல் நிற்கும் பாடங்களில் ஒன்று. இன்று வரை நான் மிகவும் கலங்கிப் போன நேரங்களிலும், நான் செல்லும் பாதை சரியா என்று திகைத்து நிற்கும் நேரங்களிலும் என் தேவன் அதி அற்புதமாக வானவில்லை என் கண்களுக்கு காட்டி நான் உன்னோடுகூட இருக்கிறேன் என்று பேசியது உண்டு.
இப்படிப்பட்ட வானவில் பாடம் போன்ற ஏதாவது ஒரு பாடம் உங்கள் உள்ளத்தில் அழியாமல் நிற்கிறதா? உலர்ந்த நிலத்தில் பாயும் நீரூற்று போல அது உலர்ந்த உள்ளத்தை மலரச் செய்கிறதா? அது உன்னை நேசித்த ஒருவர் உன்னை வளரச் செய்ய கற்றுக் கொடுத்த பாடமா? அந்தப் பாடம் உன்னை வாழ்வில் சரியான பாதைக்கு வழிநடத்தியதா? அப்படியானால் அதைக் கற்றுக் கொடுத்தவர் தான் என்னுடைய அம்மா போலவும், இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் வாசிக்கும் நகோமியைப் போலவும் நம்மை இந்தநிலைக்கு வரும்வரை வளர்த்தவர் அல்லவா?
என்னுடைய தோட்டத்தில் வேலை செய்த தோட்டக்காரர் ஒருவர் செடிகளைப் பராமரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் செடிகளை குழந்தைகள் என்று சுட்டிக்காட்டுவதைக் கேட்டிருக்கிறேன். அவைகளை உரம் போட்டு, கொத்தி விட்டு, எத்தனை பரிவோடு பராமரிக்க வேண்டியிருக்கிறது. செடிகளை வளர்க்கத் தேவைப்படும் இந்த பொறுமை, பராமரிப்பு, மிருதுத்தன்மை, இவற்றை நாம் நம்முடைய குடும்பத்தை வளர்ப்பதில், நம்முடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் போஷிப்பதில் காட்டுகிறோமா?
நம்முடைய பிள்ளைகளோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? உங்கள் காலத்துக்கு பின் இதை என் அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் கற்றுக் கொண்டேன் என்று உன் பிள்ளைகள் எதைக்குறித்து கூறுவார்கள்? அவர்கள் தேவனாகிய கர்த்தருக்குள் பெலப்பட நீங்கள் உபதேசிப்பது உண்டா? அவர்களுக்குமுன் உங்கள் வாழ்க்கை ஒரு உதாரணமாக உள்ளதா?
பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடுக்க நாம் எவ்வளவு சிரமம் எடுக்கிறோம்? அவர்கள் நன்கு சாப்பிட வேண்டும் என்று எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்? ஆனால் அவர்களை சிறு வயதிலிருந்தே ஆவிக்குரிய காரியங்களில் பராமரிக்கிறோமா?
நகோமி என்ற தாய் தன்னுடைய குமாரர் இருவரும் மோவாவியப் பெண்களை மணந்த நாள் முதல், அவளுடைய மடியில் ரூத், போவாஸுக்கு பெற்ற பேரக்குழந்தையை கிடத்தும் வரை தன்னுடைய குடும்பத்தினரை பொறுமையுடன் ஆவிக்குரிய வாழ்வில் பராமரித்து வந்ததால், அவள் குடும்பம் ஒரு அழகிய மலர் பூக்கும் தோட்டமாயிற்று.
நம்முடைய குடும்பத்தினரை நாம் ஆவிக்குரிய வாழ்வில் சரிவர போஷிக்கிறோமா? நாம் கற்றுக் கொடுத்த பாடம் நம் பிள்ளைகள் மனதில் தங்கியுள்ளனவா?
நம் பிள்ளைகளுக்கு கணக்கில் எண்ண சொல்லிக்கொடுக்கும் நாம் என்றுமே வாழ்வில் எண்ண வேண்டியவைகளைக் கற்றுக் கொடுக்கிறோமா? சிந்தித்து செயல் படுங்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்