தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு.
நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம் ஆகிவிட்டது. பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும்.
இங்குதான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில் அந்தக் குடும்பத்தில் நடைபெறவில்லை.
கிருபையும் இரக்கமும் பெற்றவள் என்ற பேர் கொண்ட அன்னாள் அங்கு கணவனின் அன்பை சற்று அதிகமாகப் பெற்றிருந்தாள். ஆனால் அவள் அதிகமாக ஆசைப்பட்ட குழந்தை பாக்கியம் இல்லாதது அவளுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது.
அந்தக் குடும்பத்தில் இருந்த அடுத்த பெண்ணான பெனின்னாள் அவளுடைய பெயரின் செழிப்பு என்ற அர்த்தத்துக்கு ஏற்ப குழந்தை செல்வத்தில் செழித்திருந்தாள். ஆனால் அவள் மிகவும் விரும்பிய தன் கணவனின் அன்பு அவளுக்கு அதிகம் கிடைக்கவில்லை. அது அவளுக்கு மிகப் பெரிய குறையாக இருந்தது.
நம் கண்களுக்கு அக்கரையில் பச்சையாகத் தெரிபவை பச்சையாகத்தான் இருக்கும் என்று நிச்சயம் இல்லை. அக்கரையில் போய்ப் பார்க்கும்போது தான் அங்குள்ள குறைகள் யாவும் தெரியும். நாம் பச்சை என்று ஏக்கத்தோடு எண்ணும் யாவும் அங்கே இருக்கலாம் ஆனால் அவை அவர்களின் மனக்குறையை நிவிர்த்தி பண்ணவில்லை என்று நமக்கு அங்கே சென்றால் தான் தெரியும்.
நம்மை சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் படுவதால் என்ன நேரிடும் என்று நாம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து படிக்கப்போகிறோம்.
‘அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க , அவர்களுடைய திருமண வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமா இருக்கு, அவங்க வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையை விட எவ்வளவோ உயர்ந்திருக்கு, அவங்ககிட்ட இல்லாததே இல்லை, அவங்க வசதிக்கு நான் கிட்ட கூட நிற்க முடியாது ‘ என்றெல்லாம் நாம் மற்றவர்களைப் பார்த்து எண்ணுகிறோம். ஆனால் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் பல எதிர்நீச்சல் உள்ளன, சவால்கள் உள்ளன!
நாம் அன்னாளைப் போல கிருபையும் இரக்கமும் பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது பெனின்னாளைப் போல செழிப்பு உள்ளவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் நாம் ஒருநாள் நம் வாழ்க்கையில் உள்ள வெறுமையையும் , குறைகளையும் உணருவோம். அன்று நம் வாழ்க்கை அல்ல மற்றவருடைய வாழ்க்கையே நமக்கு இனிப்பாகத் தோன்றும். இக்கரைக்கு என்றுமே அக்கரை பச்சைதான்! எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சரி, சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி பொறாமையினால் உறவுகளை முறித்துக் கொண்டிருக்கின்றனர்.
உன் கண்களுக்கும் அக்கரை பச்சையாகத் தெரிகிறதா? பொறாமை கண்களை மறைக்கிறதா?பழைய துணிகளை அரிக்கும் பூச்சியைப் பார்த்திருக்கிறிர்களா? அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் துணியில் வட்ட வட்டமாக ஓட்டை போட்டு விடும் அப்படித்தான் பொறாமை என்பதும்.
போதும் என்கிற மனதுடன் நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை திருப்தியாக வாழக் கற்றுக்கொள்வோம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்