1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
அன்னாளின் வாழ்க்கையின் இந்தப்பகுதியை வசிக்கும் போது, என்னுடைய வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்குள் வந்தது!
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்! எனக்கு சரியான வேலை இல்லை, எனக்கு எந்த தாலந்தும் இல்லை, நான் என் தம்பி மாதிரி ஸ்மார்ட்டாக இல்லை என்று என் பெற்றோர் என்னைத் திட்டுகிறார்கள், என்னோடு வேலை செய்கிறவர்கள் என்னை மட்டமாகப் பார்க்கிறார்கள், என் புருஷன் என்னை வெறும் சமையல்காரிப் போல நினைக்கிறார் என்னால் வேறு எந்தப் பிரயோஜனமுமில்லை என்று குடும்பத்தார் முன்னால் அவமானப் படுத்துகிறார், என் பிள்ளைகள் என்னை அவர்களுடைய தேவைகளுக்கு சுயநலத்தோடு உபயோகப்படுத்துகிறார்கள் …… இப்படி நம்மில் எத்தனைபேர் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?????
இன்னும் ஒருசிலருக்கு உங்கள் கணவர் உங்களை கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப் பட்டு தூக்கி எறியப்பட்டு விட்டேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம்! அல்லது சிறு வயதிலேயே யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டதால் உங்கள் மனதின் ஆழத்தில் நான் எதுவுக்குமே உதவாதவள் என்ற எண்ணம் ஆறாத புண்ணைப் போல இருக்கலாம்! பெண்களால் தூக்கி எறியப்பட்டு சிறுமைப்படுத்தப்படும் ஆண்களும் உண்டு!
அப்படித்தான் அன்னாளும் தான் ஒரு உதவாக்கரை என்று தன்னைப்பற்றி நினைத்தாள். அன்னாள் வாழ்ந்த சமயத்தில் பிள்ளை பேறு என்பது கடவுளுடைய ஆசீர்வாதம் என்ற எண்ணம் மட்டுமல்ல, பிள்ளை பெறாதவள் கடவுளால் சபிக்கப்பட்டவள் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இருந்தது.
அன்னாளுடைய மலட்டுத்தன்மை அவள் தன்னைத்தானே வெறுக்க செய்தது. அவள் குடும்பத்தார் அவளை வெறுமையாகப் பார்த்தனர், சமுதாயத்தினர் அவளை கடவுளால் சபிக்கப்பட்டவளாய்ப் பார்த்தனர். அவளுடைய ஆலயத்தின் ஆசாரியன் கூட அவளை போதையில் இருப்பவள் என்று சிறுமையாய் எண்ணினார்.
அப்படிப்பட்ட பயனற்ற தன்மையில் வாழ்ந்து கொண்டிருந்த அன்னாளை கர்த்தர் ஒரு பயனுள்ள தாயாக மாற்றினார். அன்னாளின் வாழ்க்கையை நான் இந்த மலர் எழுதுவதற்காக படித்தபோது அவளும் என் கண்களுக்கு ஒரு வேதாகமத்தின் கதாநாயகி போலத்தான் தோன்றினாள்.
அன்னாளைப் பற்றி இன்னும் ஓரிரு நாட்கள் படிக்கும் போது, தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையில் பயனற்ற தன்மை என்று நீங்கள் நினைக்கும் இடத்தை சற்று கூர்ந்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதை நினைத்துப் பார்க்கவே அஞ்சும் ஒரு இடமாக, சம்பவமாக, அல்லது ஏதோ ஒரு ஆறாத காயமாக இருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் பயனற்றது என்றும் வெறுமையானது என்றும் எண்ணும் அந்த வாழ்க்கையை மாற்றி அன்னாளைப் போல பயனுள்ள வாழ்க்கையாக உங்களை மாற்றக் கர்த்தரால் கூடும். வெறுமையான பாத்திரம் தானே நிரப்பப்படும்! நாமும் வெறுமையாய் இருக்கும் போது தான் தேவனாகியக் கர்த்தர் நம்மை நிரப்ப முடியும் என்று நாம் அறிந்து கொள்வோம்.
உதவாக்கரை என்ற கறையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? சிறுமைப் படுத்தப் படுகிறீர்களா? கர்த்தரிடம் வாருங்கள் உங்களை அன்னாளைப் போல ஆசீர்வாதமாக்குவார்.
நாம் தொடர்ந்து அன்னாளின் வாழ்க்கையைப் படிக்கும்போது தயவு செய்து உங்கள் நண்பர்களையும் இந்தத் தோட்டத்துக்கு அழைத்து வாருங்கள். அன்னாளின் வாழ்வில் அற்புதத்தை செய்த தேவன் உங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்வார்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்