என்னுடைய 43 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை!
இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் பலரிடம் காணப்படுகிறது என்று எனக்குப் புரியவேவில்லை. தவறுகள் செய்யாமல் நாம் எதையுமே சாதிக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களிலும், எண்ணங்களிலும் தவறுவதுண்டு.
நம்முடைய சொந்த அபிப்பிராயம் என்ற சேற்றில் கால் விட்டுக் கொண்டு, எனக்கு எல்லாமே தெரியும், நான் நினைப்பது எல்லாமே சரி என்று உழன்று கொண்டிருந்தால் சேற்றிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்வோம் என்பது நிச்சயம்.
சரி! என்ன நடந்தது பார்ப்போம்! ஏலி அன்னாளைப் பார்த்ததும், எதையும் யோசிக்காமல் சட்டென்று அவள் குடி போதையில் இருப்பதாக முடிவு செய்து அவளைக் கடிந்து கொள்கிறான். அதற்கு அன்னாள் தன்னிடம் கடினமாக நடந்து கொண்ட ஊழியக்காரிடம் பொறுமையை இழக்காமல், தான் போதையில் இல்லை வேதனையில் இருக்கிறேன் என்று புரிய வைக்கிறாள். அவளைப்பற்றி தான் சிந்தித்ததும்,பேசியதும் தவறு என்று உணர்ந்தவுடன் உடனடியாக ஏலி அன்னாளை ஆசீர்வதித்து, தேவனாகிய கர்த்தர் உன் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்றான் என்று பார்க்கிறோம்.
ஏலியின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்தது. தான் எவ்வளவு பெரிய தேவாலயத்தின் ஆசாரியன், இந்த சாதாரண பெண்ணிடம் தன் தவறை ஒப்புக்கொள்வதா என்ற கர்வம் சற்றும் இல்லாமல் அவன் அன்னாளை மனமாற ஆசீர்வதிக்கிறான். ஒருவன் தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதால் அவன் குறைவு பெறுவதில்லை, எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பெறுகிறான் என்பதற்கு ஆசாரியனான ஏலி ஒரு சாட்சி!
தவறுகள் இல்லாத வாழ்க்கையே இல்லை! நாம் செய்த தவறை உணர்ந்து ஒப்புக்கொள்ளும் போது நம்முடைய உயர்வுக்கு அடிக்கல் நாட்டுகிறோம்! ஆனால் நம்முடைய தவறுகளை நாம் பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்ளாத வரை நாம் ஒரு அடி கூட நம் வாழ்வில் முன்னேற முடியாது!
இன்று யாரையாவது பற்றி நீ எடுத்த முடிவு, சிந்தித்த எண்ணம் எல்லாம் தவறு என்று தெரிந்தும் அதை ஒப்புக்கொண்டால் உன் மரியாதை குறைந்து விடும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாயா?
இன்னும் என்னென்ன தவறுகள் மறைக்கப்பட்டுள்ளன? தேவனுடைய ஆசாரியனான ஏலியின் வாழ்க்கை உன்னோடு பேசட்டும். Sorry என்ற ஒரு வார்த்தையை சொல்வதால் பெருந்தன்மை என்ற நற்குணம் உன் வாழ்வில் வெளிப்படுமே தவிர நீ ஒன்றும் குறைந்து விட மாட்டாய்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்