1 சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி”
அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது பிள்ளைக்காக அவள் ஜெபித்த ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை உள்ளது என்று அந்தத் தாய் அறிந்திருந்தாள்.
இன்று நம்முடைய பிள்ளைகளில் அநேகர் சீர்கெட்டுப் போவதற்குக் காரணம் நம்மில் அநேகர் பிள்ளைகளுக்காக ஜெபிக்காமல் இருப்பதுதான். பிள்ளைகளுடைய சிறு பருவத்திலேயே நாம் அவர்களுக்காக ஜெபிப்பதை அவர்கள் உணர்ந்து வளரும்போது, அவர்களும் தேவனுக்கு தங்கள் வாழ்வில் முதலிடம் கொடுக்கக் கற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல நம்முடைய ஜெபம் நிறைந்த வாழ்க்கையும் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
எங்களது குடும்பத்தில் எந்த ஒரு காரியத்தையும் அனைவரும் சேர்ந்து ஜெபிக்காமல் செய்ததில்லை. நாங்கள் காரில் ஏறியவுடன் ஜெபிக்காமல் காரை எடுத்தது கூட கிடையாது. சாலையில் நீண்ட பிரயாணம் செய்த நாட்களில் எங்கள் ஜெபம் எங்களை பாதுகாத்ததை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறோம். எல்லா சிறு காரியங்களைக்கூட கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்பது எங்கள் வழக்கம். இதையும் பிள்ளைகள் பார்த்துதானே வளர்கிறார்கள்!
அதுமட்டுமல்ல எங்களுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கும் பின்னர் கல்லூரிக்கும் சென்ற போது நாங்கள் அவர்களுக்காக ஜெபித்து அனுப்புவதுண்டு. இன்று அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் எல்லா சிறு காரியங்களுக்கும் ஜெபிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது அவர்கள் நம்மையே முன்மாதிரியாகக் காண்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.
நம்மில் எத்தனை பேர் நம்முடைய வாலிபப் பிள்ளைகளுக்காக ஜெபிப்பதில் தவறிவிட்டு இன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்? தங்களுடைய வாலிபப் பிள்ளைகளுக்காக ஜெபிக்கக்கூட நேரம் இல்லாமல் பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கிற பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கேட்கிற எலக்ட்ரானிக் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் அதைக் கொண்டு என்ன செய்கிறார்கள், என்ன விளையாடுகிறார்கள், எதைப் பார்க்கிறார்கள் என்று கூட கவனிக்க நேரம் இல்லாமல் நாம் வாழும் பொழுது நம்முடைய பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் எப்படி கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற முடியும்?
நீங்கள் உங்கள் குடும்பத்துக்காக ஜெபிப்பது உண்டா? எத்தனை மணி நேரம் கர்த்தருடைய சமுகத்தில் செலவிடுகிறீர்கள்? இன்று இந்தக் காரியத்தை செய்யத் தவறினால் நாளை உங்கள் பிள்ளைகளுக்காக அநேக மணி நேரம் கண்ணீர் விட வேண்டியதிருக்கும்!
உன் பிள்ளைகள் வாழ்வில் கர்த்தருக்கு பயந்து அவரை ஆராதித்து அவருக்கு கனமும் மகிமையையும் செலுத்தி வாழ வேண்டுமானால் நீ அவர்களுக்காக ஜெபிப்பதை ஒருநாளும் புறக்கணிக்காதே!
உங்கள் சகோதரி!
பிரேமா சுந்தர் ராஜ்