I சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 38 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்து பயனடைகின்றனர். உங்கள் அனைவருக்கும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நம்முடைய சமயலறையில் ஆரம்பித்து எல்லா வேலைகளையும் செய்ய நாம் மின் சாதனங்களையே சார்ந்திருக்கிறோம்.
சாதாரண குடும்பங்களில் இன்று ஆதிக்கம் பண்ணும் மின் சாதனங்கள் மிகவும் அதிகம். மசாலா அரைக்கும் மிக்ஸியிலிருந்து, துணி துவைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், குளிசாதனப் பெட்டி என்பது ஒரு வீட்டின் முக்கிய அங்கமாகி விட்டது. என்னைப் போன்றவர்கள் பாத்திரம் விளக்கவும், வீட்டை சுத்தம் செய்யவும் இயந்திரங்களையே சார்ந்து வாழ்கிறோம். அதுவும் கொரோனா ஆரம்பித்ததிலிருந்து உதவிக்கு யாரையும் வைக்காமல் வீட்டை சமாளிக்க இந்த மின் இயந்திரங்கள் நிச்சயமாக உதவின.
இந்தக் கருத்தை நான் சொல்ல மிகவும் வருந்தினாலும் இங்கு அதை சொல்லவே வேண்டியிருக்கிறது. இன்று நாம் ஒவ்வொருவரும் வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனை நமக்கு உதவும் ஒரு மின் சாதனம் போல உபயோகப்படுத்துகிறோம். ஒருவேளை நான் சொல்வது சரியல்ல என்று எண்ணுவீர்களாகில் 1 சாமுவேல் 4 வது அதிகாரத்தில் நடந்த சம்பவத்தை வாசித்து விட்டு அது இன்றைய சமுதாயத்துக்கு எப்படி பொருந்துகிறது என்று சிந்தித்து பாருங்கள்.
கர்த்தர் சின்ன சாமுவேலிடம் பேசிய பின்னர், ஏலி அவனிடம் வந்து கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தின காரியத்தைக் கூறும்படி கேட்கிறார். ஏலிக்கு உண்மையிலேயே அங்கு குழம்பிக் கிடந்த காரியங்கள் நன்கு தெரியும். அவருடைய ஆசாரியரான குமாரர் இருவரும் தேவனுடைய ஊழியத்தின் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஊழியக்காரரே இப்படியிருக்கும் போது ஜனங்கள் எப்படியிருப்பார்கள்? வேசித்தனமும் விக்கிர வழிபாடுகளும் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.
இஸ்ரவேல் மக்களின் ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு யார் காரணம்? புறஜாதியினரா? இல்லை! புறஜாதி பெண்களை மணப்பதால்தங்கள் வியாபாரம் சிறப்பாகும் என்றும் நினைத்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் தாங்களே தங்களை பாவமென்ற குழியில் தள்ளி விட்டனர்.
ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டம் வந்தபோது, யுத்தத்தில் அவர்கள் பெலிஸ்தரால் முறியடிக்கப்பட்ட போது, போர்க்களத்தில் நாலாயிரம்பேர் வெட்டுண்டு போனபோது, அவர்கள் தேவாதி தேவனை ஒரு மின் சாதனம் போல உபயோகிக்கத் துணிந்தனர்.
அவர்கள் அப்படி என்ன செய்தனர்? ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள் கூடி, இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி நம்மை இரட்சிக்கும்படி நம்முடைய நடுவிலே வர வேண்டியது என்றார்கள்.
ஆஹா! இது சற்று நம்மை பிரதிபலிக்கிறது அல்லவா? நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படியெல்லாம் வாழ்வேன், பணம் சம்பாதிப்பேன், சிற்றின்பத்தை அனுபவிப்பேன், ஆனால் ஏதாவது சற்று தவறு நேர்ந்து விட்டால் உடனே கடவுளை உபயோகித்து விடுவேன் என்ற எண்ணம் தான்!
இஸ்ரவேலரைப் பொறுத்தவரை கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டி ஒரு மாஜிக் சாதனம். பார் எங்கள் கடவுளை! எங்களிடம் என்ன உள்ளது என்று பார்! உடன்படிக்கைப் பெட்டி உள்ளது! அது மாஜிக் பண்ணுவது போல எங்களை ரட்சித்து விடும்! வந்து பார்! நாங்கள்தான் ஜெயிப்ப்போம்!
நம்மில் எத்தனை பேர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் நம்முடைய வேலையை சாதிக்க ஒரு சாதனத்தைப் போல உபயோகப்படுத்துகிறோம்? கர்த்தருடைய வல்லமையை மாஜிக் போல நினைக்கிறோம்?
இன்று நம் தோல்விக்கு காரணமான நம்முடைய உள்ளான குழப்பங்களையும், பாவங்களையும் நாம் சரிப்படுத்தாமல் கர்த்தரை நமக்குத் தேவையான சமயத்தில் ஒரு மின் சாதனம் போல உபயோகப்படுத்த நினைக்க வேண்டாம்! கர்த்தரோடு அனுதினமும் இணைக்கப்பட்டு அவருடைய வல்லமையால் இயங்கும் ஒரு கருவியாய் நாம் இருக்க வேண்டுமே தவிர அவரை நம் தேவைக்கு உபயோகப்படுத்தும் ஒரு பொருளாய் நினைக்காதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்