1 சாமுவேல்: 4: 21, தேவனுடைய பெட்டி பிடிபட்டு. அவளுடைய மாமனும், அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
இன்றைய வேதாகமப் பகுதியில், நிறை கர்ப்பிணியான ஏலியின் மருமகள், கர்த்தரின் பெட்டி பிடிபட்டதையும், தன் கணவனும், மாமனாரும் மரித்துப் போனதையும் கேட்ட போது, வேதனையில் பிரசவித்து கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள் என்று பார்க்கிறோம்.
மறுபடியும் இங்கு சிம்சோனின் தாயைப் போல பெயர் வேதத்தில் கொடுக்கப்படாத ஒரு பெண்ணைப் பற்றிப் பார்க்கிறோம்.ஆனாலும் இஸ்ரவேலின் சரித்திரத்தில் இடம் பெற்ற முக்கியமான சம்பவத்தைக் குறித்து அவள் கொடுத்த வாக்கு வேதத்தில் இடம் பெற்றிருக்கிறது.
அவள் பிரசவித்தவுடன் அவளிடம் உனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது என்று மற்ற ஸ்திரீகள் கூறியபோது அவள் எதுவும் பேசவில்லை. எப்படிப் பட்ட உலகத்தில் தன் பிள்ளையை விட்டு செல்கிறோம் என்று அவள் நன்கு அறிந்தவளாய், மிகுந்த வேதனையுடன் கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள்.
இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட சில காரியங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
கர்த்தரின் மகிமை இந்த உலகத்தை விட்டு போகவில்லை, கீழ்ப்படியாமல் பாவத்தில் வாழ்ந்து கர்த்தரின் பெட்டியை ஒரு மின் சாதனம் போல உபயோகிக்க நினைத்த இஸ்ரவேல் மக்களை விட்டு தான் சென்றது.
கர்த்தரின் ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்ததினால் கர்த்தர் பூமியில் தாம் கிரியை செய்வதை நிறுத்தி விட்டாரா? நிச்சயமாக இல்லை! ஒருவேளை அவருடைய ஊழியர் அவருக்கு உண்மையாய் ஊழியம் செய்யாமல் போனாலும் கர்த்தர் மற்றவர்கள் மூலமாய் கிரியை செய்து கொண்டிருப்பார். பாவத்தினால் பாபிலோனியருக்கு அடிமையான இஸ்ரவேல் மக்களை விடுவிக்க கர்த்தர் கோரேஸ் என்ற தாசனை பெர்சியரில் தேர்ந்து கொள்ள வில்லையா?
அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஊழியக்காரரான ஏலியின் மரணமும், பினெகாசின் மரணமும் பூமியில் கர்த்தரின் ஊழியங்களைத் தடை செய்ததா? நிச்சயமாக இல்லை! கர்த்தரின் ஊழியம் எந்தக் காரணத்தினாலும் தடை படாது. ஏலியின் மறைவுக்கு பின்னால் 1 சாமுவேல் 14:3 ல் ஏலியின் மகனாகிய பினெகாசின் குமாரன் இன்னொரு (இக்கபோத்தின் அண்ணன்) அகிதூபின் குமாரன் அகியா என்பவன் கர்த்தருடைய ஆசாரியனாக சீலோவிலே ஊழியம் செய்வதைப் பார்க்கிறோம்.
ஆதலால் கர்த்தரைத் துதிக்காத நாவும், அவருடைய சத்தத்தைக் கேளாத நாவும் தேவ மகிமையற்றுப் போவார்களேத் தவிர அவருடைய மகிமை இந்த பூமியை விட்டு ஒருபோதும் விலகாது.
அன்பு சகோதர சகோதரிகளே! பினெகாசின் மனைவியைப் போல, ஐயோ கர்த்தரின் மகிமை இல்லாத இடத்தில் என் பிள்ளைகள் வளருகின்றனரே! அவர்கள் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே! அவர்கள் வழிபடும் ஆலயம் கர்த்தரின் மகிமையற்று உள்ளதே! ஐயோ எங்களுக்கு கத்தருடைய ஊழியத்தை செய்த ஊழியக்காரர் இப்பொழுது இல்லையே! கர்த்தரின் மகிமையற்ற தேசத்தில் வாழும் என் என் பிள்ளைகள் எப்படி ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவார்கள் என்று கவலைப் படும் பெற்றோர் உங்களில் அநேகர் உண்டு!
கர்த்தரின் மகிமையைத் தேடி எங்கும் ஓட வேண்டாம்! சர்வ வல்ல தேவன் மேல் விசுவாசத்தோடு, அன்போடு அவரது சமுகத்தை நாம் இருக்கும் இடத்திலேயேத் தேடலாம்! நீ எப்படிப்பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கர்த்தருடைய மகிமை உன்னை சூழ்ந்து கொள்ளும். ஆலயமே இல்லாத இடத்தில் வாழ்ந்தாலும் உன்னுடைய வீடே தேவன் வாசம் பண்ணும் ஆலயமாக மாறும்!
ஐயோ இந்த இடத்தில் கர்த்தருடைய மகிமை இல்லையே என்று எதை நினைத்தாயோ அங்கேயே கர்த்தருடைய கரம் உன்னைத் தாங்கி அணைப்பதை உன்னால் உணர முடியும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்