1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,
அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எவ்வளவு சோர்பாக இருந்தாலும் நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கிடைக்கும் சுகமே தனி அல்லவா?
இதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும்? நீங்கள் வாழ்ந்த கட்டிடமா? உங்கள் படுக்கை அறையா? உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா? ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா? வீடு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் அந்த குறுகிய வட்டத்தில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா? மறுபடியும் எப்பொழுது வீட்டுக்கு போவோம் என்கிற ஏக்கம் கூட வரலாம்.
ஆனால் ஒருசிலருக்கு வீடு என்ற எண்ணமே கசப்பாகக் கூட இருக்கும். அன்பும் பரிவும் இருக்க வேண்டிய இடத்தில் கசப்பும் வெறுப்பும் இருக்கும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நேசிக்க வேண்டிய இடத்தில் ஒருவரையொருவர் ஏமாற்றுதல் காணப்படலாம்!
ஏன்? இதற்குகாரணம் என்ன?
இன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருடாவருடம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய குடும்பங்களும் கூட இருந்தனர். அதுமட்டுமல்ல! 1 சாமுவேல் 8 ம் அதிகாரத்தில் சாமுவேலின் குமாரரைப்பற்றிப் பார்க்கிறோம், அப்படியானால் சாமுவேலின் குடும்பமும் அங்கேதான் இருந்திருக்கும்!
வேதம் கூறுகிறது, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான் என்று. சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, மனைவி பிள்ளைகள் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம்.
வீடு என்பது குடும்பமாய் தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட! குடும்ப ஜெபம் இல்லாத வீடு எப்படி சொர்க்கமாகும்? அது வெறும் நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம்! அந்த இடத்தை ஆனந்த கீதமாய் மாற்றுவது நம் கடமையல்லவா?
சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள்! அங்கு தேவனுடைய பிரசன்னம் நிரம்பட்டும்! அன்பும், சந்தோஷமும், கர்த்தர் செய்த நன்மைகளை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளலும், துதியின் சத்தமும் இருக்கும் போது அந்த வீடு பரலோகத்தின் சாயலை அடைந்துவிடும்!
பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்