1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
ஒருமுறை ஒரு கர்த்தருடைய ஊழியர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்த்தேன். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாரா அல்லது ஊழியத்துக்கு விண்ணப்பித்திருக்கிறாரா என்று நினைக்கத் தோன்றியது!
இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்த போது ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்ய விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம்? கர்த்தர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்?
இஸ்ரவேலின் முதல் ராஜாவைத் தேந்தெடுக்கும் பணியில், மிகவும் சவுந்தரியமும், கம்பீரமும், எல்லோரையும் விட உயரமுமான சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று பார்த்தோம். சாமுவேல் சவுலிடம் இந்த செய்தியைக் கூறியவுடனே சவுல் தன்னுடைய குடும்பம் மிக அற்பமானது என்று தான் இந்த உயர்ந்த பதவிக்குத் தகுதியற்றவன் என்பதை இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். சவுல் தான் மிகவும் சவுந்தரியமுள்ளவன் என்று அறிந்திருந்தாலும் அவன் குடும்ப பின்னணியினிமித்தம், தான் இந்த வேலைக்குத் தகுதியற்றவன் என்று நினைத்தான்.
சவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று கூறினான். பென்யமீன் கோத்திரத்தான் என்றால் அவனுக்கு என்னக் கேவலம்? இந்த பென்யமீன் கோத்திரத்தார் ஒரு லேவியனின் மனைவியை கற்பழித்து அவளைப் பிணமாக்கினர், இந்த அவமான செயலைக் கண்ட மற்ற கோத்திரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பென்யமீன் கோத்திரத்தாரைத் தாக்கி, ஒரே நாளில் 25000 ம் பேரைக் கொன்றனர் என்பது வேதத்தில் இடம் பெற்றிருக்கிற சரித்திரம்!
தன்னுடைய கோத்திரத்தின் பின்னணியினால் மற்றக் கோத்திரத்தார் தான் ராஜாவாவதை விரும்பமாட்டார்கள் என்று சவுல் நிச்சயமாக எண்ணினான். அவனுடைய கோத்திரத்தைப் போலவே அவனுடையக் குடும்பமும் மிகவும் அற்பமானது என்று சவுல் நினைத்தான்!
ஒரு நிமிஷம்! நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன்! 45 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையா அழைக்கிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது? நான் ஒன்றும் பெரிய ஊழியக்காரர்களின் குடும்பத்திலிருந்து வரவில்லையே! என்றுதான் நினத்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! என் தேவன் என்னை இன்றுவரை தம்முடைய பணியில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்!
ஆனால் கர்த்தர் நம்முடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தோ, நம்முடைய நிறத்தைப் பார்த்தோ, ஜாதியைப் பார்த்தோ, தேசத்தைப் பார்த்தோ அல்லது செல்வாக்கைப் பார்த்தோ அல்லது படிப்பைப் பார்த்தோ நம்மைத் தம் பணிக்குத் தெரிந்து கொள்வதில்லை! ஒவ்வொரு நிமிடமும் தங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுத்து, கர்த்தரை மகிமைப் படுத்தும் இருதயம் உள்ளவர்கள் தான் அவருடையப் பணியை செய்யத் தகுதியுள்ளவர்கள்!
இந்த உண்மை சாமுவேலுக்கு நன்குத் தெரியும்! தேவ ஆலயத்தில் ஆசாரியனாயிருந்த, வயதிலும், அனுபவத்திலும், தகுதியிலும் மூத்த ஏலியை விட்டுவிட்டு, சிறுவனானத் தம்மிடம் கர்த்தர் பேசியதும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகத் தம்மை அழைத்ததும் சாமுவேலுக்குத் தெரியாதா என்ன?
உங்கள் குடும்பப் பின்னணியையோ, செல்வாக்கையோப் பார்த்து ஒருவரும் நீங்கள் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தகுதியல்ல என்று சொல்ல முடியாது! கர்த்தர் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை! ஆயத்தமான இருதயம் உனக்கு உண்டானால் மற்றவை யாவையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்!
ஆயத்தமா? இன்று நீ ஆயத்தமா?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்