1 சாமுவேல் 12:20,22 அப்பொழுது சாமுவேல் ஜங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். நீங்கள் இந்த பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள். ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்.
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ள பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார்.
அமெரிக்க தேசத்தில் ஒலி ஒளி அரங்கத்தில் ஒருமுறை கிறிஸ்துவின் பிறப்பை சித்தரித்த ‘முதல் கிறிஸ்மஸ்’ என்ற நாடகத்தையும், மறுமுறை ‘என் ஜனத்தை போகவிடு’ என்ற மோசேயின் சரித்திரத்தையும் காண கர்த்தர் உதவி செய்தார். அந்த நாடகங்களின் சிறப்பு அம்சமே அதன் பின்னணி தான். இயேசு பிறந்த போது நாமும் பெத்லெகேமில் இருந்தது போன்ற பின்னணி மெய் சிலிர்க்க வைத்தது. மோசேயின் கதையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததும், முட்செடியில் கர்த்தர் அவனோடே பேசியதும், மோசேயின் கோல் சர்ப்பமாக மாறியதும், சீனாய் மலை போன்ற பின்னணியும் யாத்திராகமத்தை நேரில் பார்த்ததைப் போல் இருந்தது. என்ன இன்பமான அனுபவம் அது!
அதைப்போலத்தான் 1 சாமுவேல் 12 ம் அதிகாரம் நமக்கு சவுல் ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்ட காட்சியின் பின்னணியாக அமைகிறது.
இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டதை விரும்பாத கர்த்தர் அதனால் அவர்களுக்கு வரப்போகும் மனவேதனையை விளக்கினார். நம்முடைய பரம தகப்பன் சொல்வதைக் கேட்போம் என்று எண்ணாத இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய தேவையை முன்வைத்தனர்.
நானாக இருந்திருந்தால் இவர்களை ஒருபோதும் மன்னித்திருக்கமாட்டேன் என்ற ஒரு சிறிய எண்ணம் என் மனதில் தலை தூக்கியது. ஆனால் கர்த்தரோ என்னைப் போல எண்ணவில்லை. அவர் அவர்களை மன்னித்து அவர்களுடைய பிடிவாதம் இருந்த இடத்தை தம்முடைய அன்பினால் மூடிவிட்டார்.
இஸ்ரவேல் மக்கள் மட்டுமல்ல அவர்களுடைய தலைவர்களான சவுல், தாவீது, சாலொமோன் கூட தங்களுடைய பிடிவாதத்தால் கீழ்ப்படியாமல் போனாலும் தேவனாகிய கர்த்தர் அவர்களை மன்னித்து ஆசீர்வதித்தார். இன்று இதைத்தானே நம் வாழ்க்கையிலும் பார்க்கிறோம்? எத்தனை பிடிவாதம், எத்தனை முறை கீழ்படியாமல் போயிருக்கிறோம்? ஆனால் அத்தனை முறையும் அவர் நம்மை மன்னிக்கவில்லையா?
சவுல் ராஜாவானதின் பின்னணியைத்தான் 1 சாமுவேல் 12 ம் அதிகாரம் நமக்குத் தருகிறது. அது வேறு ஒன்றுமல்ல! நம்முடைய தேவனாகிய கர்த்தரின் மன்னிப்பு அளிக்கும் நற்குணம்தான், தானே ராஜாவாக இருந்து வழிநடத்திய இஸ்ரவேல் ஜனங்களின் பொல்லாங்கான சிந்தையை மன்னித்து அவர்களுக்கு சவுலை ராஜாவாக நியமித்தது. இந்த மன்னிப்பு அவருடைய ஜனத்தின் நற்கிரியைகளால் வந்த மன்னிப்பு அல்ல அவருடைய பெருந்தன்மையால் கிடைக்கப்பெற்ற மன்னிப்பு.
இன்று நமக்கு மன்னிப்பு ஈந்து நம்மையும் தம்முடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டதும் இந்த தேவாதி தேவனின் நற்குணம்தானே!
இத்தனை மாதயவுக்கு நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சிந்திப்போம்!
கர்த்தர் நம் பாவத்தை மன்னிக்க தயவுள்ளவராக இல்லாவிடில் இன்று மோட்சமே வெறுமையாகத்தானே இருக்கும்! சிந்தியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்