1 சாமுவேல்: 12: 24 அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து பாருங்கள்.
தேவனாகியக் கர்த்தர் நம்மிடம் சிநேகிதம் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார் என்று நேற்று பார்த்தோம்.
பிதாவாகிய தேவனைப் பற்றி நான் படிக்கும்போதெல்லாம், அவர் வானத்தையும் அதிலுள்ள யாவற்றையும் ஆளுகை செய்யும் மகா சக்தி வாய்ந்த தேவனாயிருந்தும் என்னுடைய மிகச்சிறிய உள்ளத்தில் வாசம் செய்து ஆளுகை செய்வது என்னை பிரம்மிக்க வைக்கும்.
நாம் நம்முடைய வசதிக்கேற்றவாறு பிதாவாகிய தேவனை ஒரு பொம்மையைப் போல ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கிறோம். நமக்கு எப்பொழுது உதவி வேண்டுமோ அப்பொழுது அவர் வேண்டும் அல்லவா! நம்மை ஆபத்திலிருந்து விடுவிக்க ஒருவர் நமக்குத் தேவை! நமக்குப் பாதுகாப்பு அளிக்க ஒருவர் தேவை, அது ஏதோ சொல்வார்களே body guard என்று அப்படித்தான்! மொத்தத்தில் அவர் நம் கையில் நாம் ஆட்டுவிக்கும் பொம்மையைப் போல்இருக்க வேண்டும் அப்படித்தானே!
அப்படியில்லையானால் அவர் யார்? அவர் யார்?????
அவர் நம்மை உருவாக்கியவர் – ஆதலால் நம்மைப் பார்த்து களிகூறுகிறார்
அவர் நம்மை போஷிப்பவர் – ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைகளைப் போஷிப்பது போல!
அவர் நம்மை நேசிப்பவர் – சுத்தமான அன்புடன், எதையும் எதிர்பாராத அன்புடன்!
அவர் நம்மை போதிப்பவர் – அவரைப் பற்றிய ஞானத்தை நமக்கு அளிப்பார்!
அவர் ஆவியைப் போல், நெருப்பைப் போல், காற்றைப் போல் உள்ளவர் – ஆனாலும் எதிலிலும் அவரை அடைக்க முடியாது!
அவர் ஒளியானவர் – அவர் மட்டுமே நம்முடைய பாவ இருளை அகற்ற முடியும்!
என்னை இரட்சிப்பவர் – எனக்காக தன்னையே சிலுவையில் விலையாக கொடுத்தவர்!
நம்மால் அறியலாகாதவர் – தம்மை நமக்கு அவ்வப்போது வெளிப்படுத்துவார்!
என்னை அறிந்தவர் – என் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே!
எத்தனை மகா பெரிய தேவன் என் தேவன்! எத்தனை மகிமையான காரியங்களை எனக்காக செய்கிறார்!
சில நேரங்களில் அவரை தவறான இடத்தில், தவறான முறையில் தேடுகிறோம். ஆனால் உண்மையாய்த் தேட முயற்சித்தால் ஒரு கரம் உங்களை தூக்கி விடுவதை உணருவீர்கள். அப்படி நீங்கள் உணரும்போதுதான் தெரியும் உண்மையாய் தேடியது நாமல்ல, நம்மைத் தேடியவர் அவர்தான் என்று! காணாமல் போனஒரு ஆட்டை தேடி சென்ற மேய்ப்பனைப் போல அவர் என்னை தேடி அலைந்ததை நான் ஒருநாள் உணர்ந்தேன்! அன்று என் உள்ளம் நன்றியால் நிரம்பி அவரை துதித்தது!
இந்த தேவனுடைய அன்பின் கரத்தால் அணைக்கப் பட விரும்புகிறீர்களா!
அவர் நம்மால் சித்தரிக்கபடக்கூடிய யோசனையோ, விளக்கமோ அல்லது உருவமாகவோ அல்ல ! நம்முடைய உள்ளத்தில் நாம் ஆனந்தமாய் அனுபவிக்கக்கூடிய ஒரு பிரசன்னமானவர் அவர்!
இன்றே அவரை ருசித்து ஆனந்தமாய் அனுபவித்து பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்