1 சாமுவேல் 13:7,8 …சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்.சகல ஜனங்களும் பயந்து கொண்டு அவனுக்குப்பின் சென்றார்கள்.
அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனைவிட்டுச் சிதறிப்போனார்கள்.
ஒருமுறை ஒரு செயற்குழுவுக்குச் சென்றிருந்தேன். காலை 10.30 க்கு அங்கேயிருக்க வேண்டுமென்று அவசர அவசரமாக சென்றால் 11.15 வரை நாங்கள் 3 பேர் தான் உட்கார்ந்திருந்தோம். செயற்குழு தலைவர் எப்பொழுதும் எங்களுக்கு முன்னால் வருபவர். அன்றைய தாமதத்தின் காரணம் தெரியாமல் காத்திருந்த எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அன்றைய குழுவில் என்னென்ன அவசர முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது என்று எங்கள் யாருக்குமே தெரியாது. நல்ல வேளையாக செயற்குழு தலைவர் உள்ளே வந்தார். தாமதத்தின் காரணத்தை அறிந்தவுடன் யாருக்கும் வருத்தமேயில்லை ஏனெனில் ஒரு முக்கியமான காரணத்தால் தான் அவர்கள் தாமதித்திருந்தார்கள்.
சாமுவேல் சவுலை 7 நாட்கள் கில்காலில் காத்திருக்கக் கூறியிருந்தார். ஆனால் ஏதோ காரணத்தினால் சாமுவேல் வரவில்லை. சவுல் சாமுவேல் வரும்வரை காத்திருந்திருக்கலாம். ஏனெனில் சாமுவேல் காரணமில்லாமல் தாமதிப்பவர் அல்ல என்று சவுலுக்கு மட்டும் அல்ல ஜனங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் சாமுவேலுக்காக காத்திருப்பதை விட்டு விட்டு சவுல் தன்னுடைய சுய யோசனையின்படி நடக்க ஆரம்பித்தான். ஜனங்கள் அவனை விட்டு சிதறிப்போனார்கள் என்று பார்க்கிறோம்.
நாம் எப்படி? எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும்? ஏன் என் ஜெபத்துக்கு பதிலே இல்லை? நான் இப்படி காத்திருப்பதை விட என் சொந்த முயற்சியை எடுக்க ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் தோன்றுகிறது அல்லவா? எத்தனையோ முறை நாம் காத்திருக்கத் தவறியதால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறி அதற்குரிய பலனை அனுபவித்திருக்கிறோம்.
நாம் பொறுமையாகக் காத்திருப்பது என்பது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் ஒரு முக்கிய கட்டம் என்று சொல்லலாம். நமக்கு அற்புதமான பாடங்களை கற்பிக்கவே, சில நேரங்களில் கர்த்தர் நம்மைக் காத்திருக்கப் பண்ணுகிறார்.
சில நேரம் நம்முடைய பொறுமையின்மையால் நாம் கல்லும் முள்ளும் உள்ள இருண்ட பாதையில் சிக்கி, பாதை தெரியாமல் அலைபாயும்போது, தேவன் மிகுந்த பொறுமையோடு நம்மை நடத்தி அதன் மூலம் நாம் தேவனுடைய சித்தத்துக்காக நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.
இன்று நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? உன்னைக் காத்திருக்கப் பண்ணுவதால் உன் ஜெபம் மறுதலிக்கப்பட்டது என்று எண்ணாதே! அவசரப்பட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே!
சற்றுப் பொறுமையோடுக் காத்திரு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்