1 சாமுவேல் 15: 1,3, 9 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: ….இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். ….
இப்பொழுதும் நீ போய் , அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், கழுதைகளையும், கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
சவுலும், ஜனங்களும் ஆகாகையும்,ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்.
கர்த்தர் சாமுவேலைக் கொண்டு சவுலிடம் அமலேக்கியரை முற்றிலும் அழிக்கும்படி கூறுவதைப் பார்க்கிறோம். அமலேக்கியருக்கு கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் அன்றே வந்து விட்டது என்று நினைக்கிறேன். பல தருணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் கர்த்தருக்கு எதிரான திசையிலே கால் பதித்ததால், தேவனாகிய கர்த்தர் சவுலிடம் அவர்களை அழிக்கக் கட்டளையிட்டார்.
சவுல் யுத்தத்துக்கு சென்றான், வெற்றியும் பெற்றான். ஆனால் ஒன்று மட்டும் செய்யவில்லை!
நம்முடைய வாழ்க்கையில் இந்த ஆ னா ல் என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்று யோசித்துப்பாருங்கள்.
சவுலுடைய யோசனை கர்த்தருடைய யோசனையை விட அருமையான யோசனை அல்லவா! ஆடுமாடுகள், ஆட்டுக்குட்டிகள், இன்னும் நலமான எல்லாவற்றையும் அழித்துப்போட மனதில்லாமல் தப்ப வைத்துக் கொண்டான். நலமானவைகள் என்னவாயிருக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை எரிகோவை யோசுவா அழித்த போது ஆகானின் கண்களை கவர்ந்த பொன்னும், வெள்ளியும், கண்ணைக் கவர்ந்த துணிமணிகள் போன்ற அருமையான பொருட்கள் இங்கு கூட இருந்திருக்கலாம். இவற்றையெல்லாம் விட்டு விடுவதா என்று கூட நினைத்திருப்பான்!
அந்த அமலேக்கியரின் ராஜாவை ஏன் விட்டு வைத்தான் என்று தெரியவில்லை. ஒருவேளை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிப்பதற்காக அவனை வைத்துக்கொண்டானோ என்று தெரியவில்லை. அவனைப் பார்க்கும்போது சவுலுக்கு பேரும், புகழும் கிடைக்கும் அல்லவா!
எது எப்படியிருந்தாலும் சரி, சவுல் செய்த இந்தக் காரியம் கர்த்தரின் சித்தத்திற்கு, கர்த்தரின் வார்த்தைக்கு நேர் எதிரிடையான காரியம். கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைவிட இந்தப் பொருட்கள் சவுலின் பார்வையில் மிகுந்த மதிப்புள்ளவைகளாய் காணப்பட்டன.
என்ன பரிதாபம்!
நம் வாழ்வில் எத்தனைமுறை சவுலைப்போல, பேருக்கும், புகழுக்கும், சொத்துக்கும், சம்பத்துக்கும், பதவிக்கும், பொருளுக்கும், பொன்னுக்கும், துணிமணிகளுக்கும், அதிக மதிப்பு கொடுக்கிறோம் என்று சிந்திதுப்பாருங்கள்! அவற்றிற்காகவே நாம் வாழ்கிறோம்அல்லவா? அவைகளின் மதிப்புக்கு முன்னால் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் என்பது தூள் தூளாகிவிடுகிறது அல்லவா?
இன்று காலையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை விட நாம் உயர்வாக மதிப்பிடும் யாதொரு காரியம் நம்மில் உண்டோ என்று ஆராய்ந்து அவற்றைக் கர்த்தரின் பாதத்தில் ஒப்புக்கொடுப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்