1 சாமுவேல் 15: 10,11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.
இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே என்னைப்போல நீங்களும் நினைக்கிறீர்கள்!
இந்த மனவேதனை என்ற அர்த்தத்தைத்தான் , இன்றைய வேதாகமப் பகுதியில் இடம் பெற்ற மனஸ்தாபம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் கொடுக்கிறது. பிள்ளைகள் தவறான நண்பர்களைத் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தவறான முடிவைத் தங்கள் வாழ்வில் எடுக்கும்போது, நம் உள்ளம் எவ்வாறு வேதனைப்படுகிறது என்று உங்களில் பலருக்குத் தெரியும்.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தெரிந்துகொள்ளப்பட்ட சவுல் தவறு செய்தபோது கர்த்தர் அவனைக் குறித்து மனவேதனைப்பட்டார் என்றுதான் இங்கு பார்க்கிறோம். சவுலுடைய நடவடிக்கை, செயல்கள் யாவும் அவரை வேதனைப்படுத்தின. அவனைப் பார்க்கும்போது அவனை ஏன் உருவாக்கினேன் என்று வருந்தவில்லை, ஐயோ இவன் இப்படி நடந்து கொள்கிறானே என்று வருத்தப்பட்டார்.
தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளோடு கொண்ட உறவைப்பற்றி நாம் படிக்கும்போது இந்த முக்கியமான ஒரு காரியத்தை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் ஒருநாளும் நம்மை உருவாக்கினதைக்குறித்து வருந்துகிறவர் அல்ல. ஆனால் நாம் அவர் வழியை விட்டு விலகும்போது மிகுந்த மன வேதனைப்படுகிறார்.
கர்த்தராகிய இயேசுவை மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, பரலோக தேவனின் அன்பை உணர்ந்தவராய் , அவர் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று கூறுகிறார் (2 பேதுரு 3:9).
இன்று உன் வாழ்க்கையை பார்க்கும் கர்த்தர் எதைக்குறித்து மனஸ்தாபப்படுகிறார்? ஐயோ நான் இன்று அவரிடம் பேசவில்லையே அதனாலா??? நான் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வில்லையே அதனாலா??? ஐயோ இன்று என்னுடைய ஆபீஸில் என்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியவில்லையே அதனாலா???? இன்று அவரை நான் துக்கப்படுத்திவிட்டேனே அதனாலா????? இப்படி ஒருநாளில் எத்தனைமுறை நடக்கிறது!
சவுலைப் போல நம் தேவனாகிய கர்த்தரை நாம் துக்கப்படுத்தவேண்டாம்! நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவரை துக்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஜெபித்து நம்மை அர்ப்பணிக்க வேண்டும்!
இந்த முயற்சியில் நாம் அவரை நோக்கி ஒரு அடி நகர்ந்தால் போதும் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மைக் கட்டித் தழுவிக்கொள்வார்.
நாம் பெரியவராய் இருப்பதால் அவர் நம்மை நேசிக்கவில்லை! அவர் மகா பெரியவராய் இருப்பதால்தான் நம்மை நேசிக்கிறார்! அவரை துக்கப்படுத்தி உதாசீனப்படுத்தாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்