1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்.
இந்த வருடத்தின் கடைசி மாதத்திற்கு வந்துவிட்டோம்! இது கர்த்தர் நமக்கு அளித்திருக்கும் மாபெரிய ஈவு அல்லவா? கோடானுகோடி ஸ்தோத்திரங்களை அவருக்கு நாம் ஏறெடுப்போம்! இந்த மாதம் நம்மில் அனைவருக்கு சந்தோஷத்தை கொண்டு வரும் மாதம்! ஆம்!! நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை நாம் நினைவு கூறும் மாதம் இது ! தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் நம் அனைவரோடும் இருந்து இந்த மாதத்தையும், இந்த வருடத்தின் கடைசி நாட்களையும் நாம் உற்சாகமாய் களிகூர்ந்து கடக்கும்படி உதவி செய்யுமாறு ஜெபிப்போம்!
நாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, பாவம் எல்லாவற்றையுமே அவர்கள், தங்கள் தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய ஸ்டார் போல இருக்கின்றது. ஒரு பெரிய கூட்டம் அவர் பின்னால் செல்கிறது. அவர்களைப்போல மாறவும், பேசவும், மேடையை அலங்கரிக்கவும், அநேகர் ஆசைப்படுகின்றனர். ஆனால் சில ஊழியர்கள் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். ஏழை எளியவர்க்கு உணவளிப்பதும், உடுத்துவிப்பதும், அவர்களுடைய பணியாயிருக்கிறது. அவர்களை ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் பார்வையில் பெரியவர்கள் இல்லை, மிகவும் எளிமையானவர்கள்.
ஆனால் அவர்கள் தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றவர்கள்! அவர்களுடைய பாதங்கள் கர்த்தரின் பார்வையில் மிகவும் அழகானவைகள் என்று வேதம் கூறுகிறது.
என்ன ஆச்சரியம் பாருங்கள்! தன்னுடைய பார்வையில் மிகச்சிறியவனாயிருந்த சவுலைக் கர்த்தர் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தலைவனாக்கினார்! தான் மிகவும் சிறியவன் என்று எண்ணிய சவுலுக்கு இஸ்ரவேலை ஆளும் ராஜாவாகும் பெரிய அழைப்பு கர்த்தரிடத்திலிருந்து வந்தது
நீ இன்று மேடையை அலங்கரிக்கும் அவசியம் இல்லை! பெரிய ஸ்டார் போன்ற ஊழியம் செய்யவேண்டாம். ஒன்று மட்டும் மறந்து போகாதே. உன் பார்வையில் சிறியவனான உன்னைக் கர்த்தர் பெரிய கனவானாகக் காண்கிறார்!
பயப்படாதே! நீ செய்யும் உழியம் உன் கண்களுக்கு மிகவும் தாழ்மையான ஒன்றாகத் தெரியலாம்! ஆனால் நீயும் உன்னுடைய தாழ்மையான ஊழியமும் தேவனுடைய பார்வையில் மிகவும் விசேஷித்தவைகள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்