1 சாமுவேல் 16:1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
நாம் சவுலைப் பற்றி நேற்று பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதை நாம் அறிவோம். சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். அதே 15 ம் அதிகாரம் 35 ம் வசனம் கூறுகிறது, அதன் பின்னர் சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அவனைக்கண்டு பேசவில்லை என்று.
இன்றைய வேத வசனம் கூறுகிறது சாமுவேல் சவுலுக்காக துக்கித்துக்கொண்டிருந்தான் என்று. சாமுவேல் சவுலை தன்னுடைய மகனை போலத்தான் பார்த்தான். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவன்மேல் சாமுவேலுக்கு ஒரு தனிப்பட்ட பாசம் இருந்தது. சாமுவேலின் அக்கறை, பாசம், அறிவுறுத்தல் இவை எதுவுமே சவுலின் வாழ்க்கையில் கிரியை செய்யவில்லை. கடைசியில் கர்த்தர் சாமுவேலிடம் சவுலை நான் புறக்கணித்துவிட்டேன் என்று கூறுவதைப்ப் பார்க்கிறோம்.
கர்த்தர் சவுலை ஏன் புறக்கணித்தார்?
இந்தப் புறக்கணித்தல் என்ற வார்த்தையை சற்று ஆழமாகப் படித்தபோது அதற்கு விலக்கு, தள்ளு என்று அர்த்தம் என்று பார்த்தேன். சவுலை ராஜாவாயிராதபடி கர்த்தர் விலக்கிவிட்டார் அல்லது தள்ளிவிட்டார் என்பதுதான் அர்த்தம். அவனுக்கு கர்த்தர் அளித்திருந்த இஸ்ரவேலின் முதல் ராஜா என்னும் உன்னதபணியில் அவனிடம் அர்ப்பணிப்பும்,உண்மையும், காணாததால் கர்த்தர் அவனுடைய மேன்மையான, உன்னதமான பதவியை அவனிடமிருந்து விலகச்செய்தார்.
தேவனாகியக் கர்த்தருக்கு சவுலின்மேல் அன்பு இல்லாமல் போயிற்றா? இல்லை! அவனுக்கு தேவன் அளித்த மேன்மையான பணியில் அவன் உண்மையாய், அர்ப்பணிப்போடு இல்லாததால் மட்டுமே கர்த்தர்அவனை அந்த உயர்ந்தப் பதவியிலிருந்து அவனை விலக்கினார்.
அப்படியானால் நாம் கீழ்ப்படியாமல் போகும்போது கர்த்தர் நம்மிடம் உள்ள ஆசீர்வாதங்களைப் பறித்து விடுவாரோ என்ற பயம் வந்து விட்டது அல்லவா? ஆம்! நீங்கள் நினைப்பது உண்மையே! கர்த்தர் நம்மை நம்பி நம்மிடம் ஒப்பணித்திருக்கிற எந்தப் பணியையும் நாம் அவருக்குப் பயந்து செய்யாவிடில், அந்த ஆசீர்வாதம் நம்மிடமிருந்து விலக்கப்படும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஓர் எச்சரிக்கை! ஓர் எடுத்துக்காட்டு!
இன்று உனக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் உன்னதமான பொறுப்பு என்ன? ஆபீஸிலா, வீட்டிலா, திருச்சபையிலா அல்லது சமுதாயத்திலா?
நான் வாழும் இந்த வாழ்க்கை, நான் செய்யும் இந்த வேலை, என்னுடைய இந்த நிலைமை எனக்குக் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்வாயானால், அதில் நீ உண்மையாக, அர்ப்பணிப்போடு இருக்கிறாயா?
கர்தருடைய வார்த்தைக்கு அனுதினமும் கீழ்ப்படிகிறாயா? கர்த்தர் உன்னிடம் எதிர்பார்க்கும் உண்மை காணப்படுகிறதா? இல்லையானால் ஒரு நொடியில் கர்த்தர் உன்னுடைய ஆசீர்வாதங்களை உன்னிலிருந்து விலக்கிவிடுவார். ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்