1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்.
இன்றைய வசனத்தை பாருங்கள்! கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று நமக்கு தெளிவாக காட்டுகிறது அல்லவா!
இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம்.கோலியாத் தன்னுடைய பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் நின்று தாவீதை எதிர்கொண்ட இடம் என்னை உணர்ச்சிவசப் படுத்தியது. தாவீது தன் சிறியக் கரங்களில் கவணையும், கற்களையும் ஏந்தி கோலியாத்துக்கு எதிராக வந்தக் காட்சி என் மனக்கண்களில் தெரிந்தது.
ஒரு மலையின் மேலிருந்து இறங்கிவந்து பெலிஸ்தர் தினமும் இஸ்ரவேலரை யுத்தத்துக்கு வரும்படி கூவி அழைத்தனர். கோலியாத்திடம் பட்டயம், ஈட்டி, கேடகம் எல்லாம் இருந்தது. இஸ்ரவேலரை யுத்தத்தில் ஊதித்தள்ள பெலிஸ்தர் துடித்துக்கொண்டிருந்தனர்.
திடீரென்று எங்கோ ஒரு நிழலிலிருந்து சிறுவனாகியத் தாவீது வெளிப்பட்டதும் கோலியாத்துக்கு எரிச்சல் வந்துவிட்டது. என்ன தைரியம் ஒரு சிறுவனைப்பிடித்து என்னிடத்தில் யுத்தத்துக்கு அனுப்பவற்கு, என்னைப் பார்த்தால் என்ன அவ்வளவு கேவலமாகத் தோன்றுகிறதா என்றுதானே எண்ணியிருப்பான்! அவன் கையில் பட்டயமும் இல்லை, ஈட்டியும் இல்லை, கேடகமும் இல்லை. கோலியாத்தின் கண்களுக்கு அவன் கையில் வத்திருந்த, பறவைகளை வேட்டையாட உபயோகப்படுத்தும் கவணும், கற்களும்தான் தெரிந்தன.
தாவீது உரத்த சத்தமாய் உயரமான கோலியாத்தின் காதுகளில் விழுமாறு தான் தனியாக யுத்தத்துக்கு வரவில்லை என்று தெரியப்படுத்தினான். உண்மையில் அங்கே அவன் சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே அவருடைய சேவையை செய்யவே வந்ததாகக் கூறுகிறான். கோலியாத் அங்கே செய்த தவறு அவன் தாவீதின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காததுதான்.
சில நேரங்களில் நம்முடைய எதிரி பட்டயமும் ஈட்டியும் எடுத்துக்கொண்டு நம்மை எதிர் கொள்ளும்போது அவன் நம்மை சாய்த்து விடுவானோ என்று பயந்து விடுகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்கள் என்பதையும், அவருடைய நாமத்தைத் தரித்தவர்கள் என்பதையும் மறந்தே போகிறோம்.
ஆனால் தாவீதைப் பாருங்கள்! தான் யாருடைய நாமத்தைத் தரித்தவன் என்று மறந்தே போகவில்லை! தன்னுடைய பெலத்தால் எதிரியை முறியடிக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்! ஆனால் சேனைகளின் கர்த்தர் அவனோடு இருக்கும்போது அவனால் கோலியாத்தை முறியடிக்க முடியும் என்று விசுவாசித்தான்.
என் வாழ்க்கையின் போராட்டத்தில் நான் தனித்து நிற்கிறேன், எனக்கு போராட இனி பெலனில்லை, கோலியாத்தைப் போலக் காணும் இந்தப் பெரிய பிரச்சனைகள் என்னை தோற்கடித்து விடுமோ என்று அஞ்சுகிறாயா? தாவீதைப்பார்! சேனைகளின் கர்த்தர் உன்னோடு இருந்து உனக்கும் வெற்றியளிப்பார்!
விசுவாசி! சோர்ந்துவிடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்