1 சாமுவேல் 18:5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.
தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனைத் தன் போர்ச்சேவகர்களுக்கு அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் நமக்கு விளக்கி கூறுகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது.
ஏனெனில் இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்தான்!
புத்திசாலி என்ற வார்த்தை எனக்கு கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் ஒன்று. ஏனெனில் நீ ரொம்ப புத்திசாலி என்று நினைப்போ என்றும், உன் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதே என்றும், சிலர்அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த வார்த்தையை நம்மிடம் யாரும் கூறிவிடக் கூடாது என்று அதிக ஜாக்கிரதையாக இருப்பதுண்டு!
தாவீது தான் செய்த எல்லா காரியத்திலும் புத்தியாய் நடந்து கொண்டான் என்பது நம்முடைய உள்ளங்களில் அச்சடிக்க வேண்டிய ஒரு காரியம். ஏனெனில் அவன் அப்படி நடந்து கொண்டதால் தான் கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று கூறுகிறார். இஸ்ரவேல் மக்களும் அவனை நேசித்தனர்.
தாவீது எப்படிப்பட்ட புத்திசாலித்தனத்தை தன் செயல்களில் வெளிப்படுத்தினான் என்று நாம் நினைக்கலாம்!
ஒரு வாலிபனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன்னுடைய எதிர்காலத்துக்காக தன்னை ஆயத்தப்படுவதுதான். ஒரு நடுத்ததர வயது மனிதனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன் நிகழ்காலத்தைப்பற்றி சிந்திப்பதுதான். ஆனால் தாவீது தன்னுடைய கடந்த கால அனுபவங்களை மறந்து போகாமல், அவற்றின் அடிப்படையில் தன்னுடைய நிகழ்கால செயல்களை வெற்றிகரமாக செய்து, தனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டான்.
தாவீதின் வாழ்க்கையில் அவன் நடந்து கொண்டவிதத்திலும், அவனுடைய எல்லா செயல்களிலும் தேவன் அருளிய ஞானம் வெளிப்பட்டது! அதை சவுல் கண்டான்! இஸ்ரவேல் மக்களும் கண்டனர்!
இன்று உன் வாழ்க்கை எப்படி? கிறிஸ்துவுக்குள்ளான அனுபவங்கள் உன்னை புத்திசாலியாக்கியிருக்கின்றனவா? உன்னுடைய எல்லா செயல்களிலும் நீ கர்த்தருடைய பிள்ளை என்று தெரிகிறதா? உன்னை சுற்றிலும் உள்ளவர்கள் உன்னை நீ ரொம்ப புத்திசாலி என ஏளனப்படுத்தின்றனரா? அல்லது நீ நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து உன்னிடம் கர்த்தருடைய ஞானம் உள்ளதென்று புரிந்துகொள்கின்றனறரா?
தாவீதைப் போல கடந்த கால அனுபவங்களை மறந்து விடாமல், நிகழ்காலத்தை செவ்வனே செய்து, புத்திசாலியாய் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்